ஜுன் 12 : நற்செய்தி வாசகம்

ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 27-32.
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “ `விபசாரம் செய்யாதே’ எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று. உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப் படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. `தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்’ எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபசாரம் செய்கின்றனர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————
மத்தேயு 5: 27-32
மனச்சலவை
நிகழ்வு
அது ஒரு பழமையான கிராமப்புறப் பங்கு. அந்தப் பங்கில் பெரியவர் ஒருவர் இருந்தார். அவர் பங்குக்கோவிலில் ஆட்கள் இல்லாத சமயம் வந்து, “ஆண்டவரே என்னுடைய மனத்தில் படிந்திருக்கின்ற தூசுகளையும் ஒட்டடைகளையும் நீர் அகற்றுவீராக” என்று சத்தம் போட்டு மன்றாடி வந்தார்.
அந்தப் பெரியவரின் நடவடிக்கைகளைக் கவனித்த அந்தப் பங்கில் இருந்த பங்குத்தந்தை, ‘ஆலயத்தில் ஆளில்லாத நேரம் பார்த்து வருகின்ற இந்தப் பெரியவர் அப்படி என்ன செய்கிறார்’ என்று அவர் பின்னால் நின்று பார்த்தார். அப்பொழுது பெரியவர் வழக்கம்போல், “ஆண்டவரே! என்னுடைய உள்ளத்தில் படிந்திருக்கின்ற தூசுகளையும் ஒட்டடைகளையும் நீர் அகற்றுவீராக” என்று சத்தம் போட்டுப் மன்றாத் தொடங்கினார். இதைப் பின்னாலிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த பங்குத்தந்தை, “மகனே! உன்னுடைய மனதில் படிந்திருக்க தூசுகளும் ஒட்டடைகளும் அகலவேண்டும் என்றால், அதற்குக் காரணமாக இருக்கும் சிலந்தி என்னும் சாத்தானை அடித்து விரட்டவேண்டும் அல்லது கொல்லவேண்டும்” என்றார்.
சத்தம் எங்கிருந்து வருகின்றது என்று பெரியவர் திரும்பிப் பார்த்தபோது அவருக்குப் பின்னால் பங்குத்தந்தை இருப்பதைக் கண்டு திடுகிட்டார். ‘தான் இவ்வாறு வேண்டுவது பங்குத்தந்தைக்குத் தெரிந்துவிட்டதே’ என்ற உருவிதமான குற்றவுணர்வோடு பங்குத்தந்தையிடம் வந்தார். பங்குத்தந்தை அவரிடம், “உங்களுடைய மனத்தில் தூசுகள் ஒட்டடைகள் என்ற தீய எண்ணங்கள் படிகின்றது என்றால், அவற்றுக்குக் காரணமாக இருக்கும் சிலந்தி என்ற சாத்தான் உங்களை நெருங்கவிடாது பார்த்துக் கொள்ளவேண்டும். அதுதான் மிகவும் முக்கியம்” என்றார்.
ஒரு பிரச்சனைக்குத் தீர்வுகாணவேண்டும் என்றால், அதை மேம்போக்காக அணுகிக்கொண்டிருந்தால்போது, அந்தப் பிரச்சினையின் வேர் எங்கிருக்கின்றது என்பதை அறிந்து, அதைக் களைகிறபோது மட்டுமே, பிரச்சனைக்குச் சரியான தீர்வுகாண முடியும். அத்தகைய உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில் ‘விபசாரம்’ தொடர்பான பிரச்சினைக்கு ஆண்டவர் இயேசு இதே பாணியைத்தான் கடைப்பிடிக்கின்றார். அவர் கடைப்பிடிக்கும் பாணி ‘விபசாரம்’ என்ற பிரச்னைக்கு எப்படித் தீர்வு தருகின்றது என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
விபசாரம் மிகப்பெரிய குற்றம்
‘விபசாரம் செய்யாதே’ (விப 20:14) என்பது ஆண்டவராகிய கடவுள் மோசே வழியாக இஸ்ரயேல் மக்கட்குக் கொடுத்த கட்டளையாகும். இக்கட்டளையை மீறி ஒருவர் விபசாரம் செய்கின்றார் என்றால், அவர் குற்றவாளியாகக் கருதப்பட்டார். ஆனால், ஆண்டவர் இயேசுவோ ஒருபடி மேலே சென்று, விபசாரம் மட்டுமல்ல ஒருவரை இச்சையோடு நோக்குவதுகூட பாவம் என்றும் இதற்குக் காரணமாக இருக்கும் கண்ணை/கையைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள் என்றும் கூறுகின்றார்.
பழைய ஏற்பாட்டுக் காலச் சட்டம் செயலைக் குற்றம் என்று சொன்னது அந்த செயலுக்குக் காரணமாக இருந்த சிந்தனையை/ எண்ணத்தைக் குறித்து, எதுவும் பேசவில்லை. இயேசுவோ செயலுக்குக் காரணமாக இருக்கும் சிந்தனை அல்லது எண்ணமே பாவம் என்று குறிப்பிடுகின்றார். விபசாரத்தில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், அதை செய்யத் தூண்டும் சிந்தனையும் பாவம் என்று இயேசு சொல்வதற்கு இன்னொரு முக்கியமான விடயமும் இருக்கின்றது. இதை இயேசுவே இன்னொரு பகுதியில் குறிப்பிடுகின்றார். “கொலை, கொள்ளை, விபசாரம், பரத்தமை, களவு, பொய்ச்சான்று, பழிப்புரை ஆகியவற்றைத் தூண்டும் ஆகியவற்றைத் தூண்டும் தீய எண்ணங்கள் உள்ளத்த்திலிருந்தே வருகின்றன (மத் 15: 9). ஆகையால், மேலே குறிப்பிடப்பட்ட பாவங்களிருந்தும் குறிப்பாக விபசாரத்திலிருந்தும் ஒருவர் வெளிவரவேண்டும் என்றால், அவர் தன்னுடைய உள்ளத்தைச் சலவை செய்து தூயதாக வைத்திருப்பது மிகவும் இன்றிமையாதது.
திருமணத்தை உடன்படிக்கையை மேன்மைப்படுத்தும் இயேசு
இயேசு கிறிஸ்து விபசாரத்தையும் அதைச் செய்யத் தூண்டும் எண்ணங்களையும் மிகப்பெரிய குற்றம் என்று சுட்டிக்காட்டுவதன் வழியாக திருமண உடன்படிக்கையை மேன்மைப்படுத்துகின்றார். எவ்வாறெனில், படைப்பின் தொடக்கத்தில் மனிதன் அதாவது ஆதாம் தன் மனைவி ஏவாவைப் பார்த்து, “இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்’ (தொநூ 1: 23) என்று சொல்கின்றார். ஆதாம் ஏவாவைப் பார்த்துச் சொல்கின்ற இவ்வார்த்தைகள் ஒவ்வொரு கணவன் மனைவிக்கும் பொருந்தும். ஒவ்வொரு கணவனுக்கும் தன் மனைவி எழும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்தான். அப்படியிருக்கும்போது பிறர் மனைவியையோ அல்லது பிறர் கணவனை நோக்குவது மிகப்பெரிய தவறு. இந்த உண்மையைத்தான் இயேசு, ஒருவரை இச்சையோடு நோக்குவது குற்றம் என்று சொல்கிறார். இவ்வாறு அவர் திருமண உடன்படிக்கையை மேன்மைப்படுத்துகின்றார்.
சிந்தனை
‘நீங்கள் தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமான நான் தூயவர் (லேவி 19:2) என்பார் கடவுள். ஆகவே, நாம் கடவுளைப் போன்று தூயோராகவும் தீய சிந்தனைகட்கு இடம்கொடாதவராகவும் வாழப் பழகுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.