உலக மக்களுக்கு அமைதி தேவை – திருத்தந்தை

போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைனுக்கு அமைதி தேவை என்றும், ஆயுதங்களுக்குச் செலவிடுவதில் அதிக கவனம் செலுத்துவதால் தேவைப்படும் நிலையிலிருக்கின்ற மற்றும் மிகவும் பலவீனமானவர்களுக்கான ஆதரவை இழக்கும் அபாயம் உள்ளது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

மே 23, வெள்ளிக்கிழமை COMECE எனப்படும் ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் எடுத்துரைத்த கருத்துக்களை வத்திக்கான் செய்திகளிடத்தில் பகிர்ந்துள்ளனர் அக்கூட்டமைப்பின் ஆயர் பிரதிநிதிகள்.

இக்கூட்டத்தின்போது உலக அமைதி அதிகமாக திருத்தந்தை அவர்களால் வலியுறுத்தப்பட்டது என்றும், உக்ரைனில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டு, விரைவில் ஒரு நிலையான, நியாயமான அமைதியை அடைவது அவசியம் என்று எடுத்துரைக்கப்பட்டதாகவும் ஆயர்கள் கூறினர்.

மேலும் இடம்பெயர்வு, இளைஞர்களோடு உடன்நடத்தல், நம்பிக்கை பரிமாற்றம், செயற்கை நுண்ணறிவு ஆகியவை குறித்தக் கருத்துக்கள் பகிரப்பட்டதாக எடுத்துரைத்த ஐரோப்பிய ஆயர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், கூட்டமைப்பின் ஆயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்துக்களுக்குத் திருத்தந்தை அவர்கள் கவனமாக செவிசாய்த்ததாகவும் தெரிவித்தனர்.

Comments are closed.