நற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 12)

பொதுக்காலம் பத்தாம் வாரம் வெள்ளிக்கிழமை
மத்தேயு 5: 27-32
“வெட்டி எறிந்து விடுங்கள்”
நிகழ்வு
அது விடுமுறைக் காலம் என்பதால் ஜோஸ், ஊரில் இருந்த தன்னுடைய மாமாவின் வீட்டிற்குச் சென்றிருந்தான். ஜோஸின் மாமா வீடு, சுற்றிலும் பல்வேறு வகையான மரங்களால் நிறைந்து, பார்ப்பதற்கு அவ்வளவு இரம்மியமாக இருந்தது. அவன் அங்குச் சென்ற இரண்டாவது நாளில், அவனுடைய மாமாவைப் பார்க்க, ஒருசிலர் வந்தார்கள். அவர்களை அவர் தன்னுடைய தோட்டத்திற்குள் அழைத்துச் சென்றார். ஜோஸும் அவர்களோடு சென்றான். அப்பொழுது ஜோஸின் மாமா வந்தவர்களிடம், ஒருசில மரங்களைச் சுட்டிக்காட்டி, “இந்த மரங்களில் உள்ள கிளைகளை எல்லாம் வெட்டி எறிந்துவிடுங்கள்” என்றார். அவர்களும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பினர்.
அவர்கள் அங்கிருந்து போனபின்பு, ஜோஸ் தன்னுடைய மாமாவிடம் பேசத் தொடங்கினான். “மாமா! இப்பொழுது வந்தவர்களிடம் இங்குள்ள ஒருசில மரங்களைச் சுட்டிகாட்டி ‘இந்த மரங்களின் கிளைகளை எல்லாம் வெட்டி எறிந்துவிடுங்கள்’ என்று சொன்னீர்களே…! மரங்களின் கிளைகளை வெட்டிவிட்டால், மரங்கள் பட்டுப் போய்விடாதா…? ஏன் அப்படிச் சொன்னீர்கள்…?” என்றான். “தம்பி! நான் சுட்டிக்காட்டிய மரங்களெல்லாம் பார்ப்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்; ஆனால், அவை உள்ளுக்குள் காய்ந்தும், இன்னும் ஒருசில மரங்கள் அடர்த்தியாகவும் இருந்து பலனளிக்காமலேயே இருக்கும். அதனால் அந்த மரங்களில் இருக்கின்ற தேவையற்ற பகுதிகளை வெட்டி எறிந்துவிட்டால், அவை நன்றாகப் பலன்கொடுக்கும்” என்று சொன்ன ஜோஸின் மாமா, தொடர்ந்து அவனிடம், “மனிதர்களிலும் கூட, ஒருசில தேவையற்ற எண்ணங்கள், பண்புகள் இருக்கின்றன. அவற்றை அவர்கள் வெட்டி எறிந்துவிட்டால், அவர்கள் நல்ல பலனைக் கொடுப்பார்கள்.”
ஆம், ஒரு மரத்தில் இருக்கின்ற தேவையற்ற பகுதிகளை அப்புறப்படுத்தும்பொழுது, அது எப்படி மிகுந்த பலன்கொடுக்கின்றதோ, அப்படி மனிதர்களிடம் இருக்கின்ற ஒருசில தேவையற்ற எண்ணங்களை, பண்புகளை அப்புறப்படுத்துகின்றபொழுது, அவர்கள் மிகுந்த பலன்தருபவர்களாக மாறுவார்கள். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு இத்தகைய செய்தியைத்தான் நமக்கு எடுத்துக்கூறுகின்றார். நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
விபசாரம் மட்டுமல்ல, இச்சையோடு நோக்குவதும் குற்றம்தான்
‘விபசாரம் செய்யாதே’ (விப 20: 14) என்பது பத்துக் கட்டளைகளுள் ஒரு கட்டளை. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இக்கட்டளை வலியுறுத்திச் சொல்லப்பட்டதற்குக் காரணம், கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையாக வேண்டும்; அவர்கள் பிறரை நாடக்கூடாது என்பதற்காகத்தான். அப்படிக் கணவனும் மனைவியும் தங்களுடைய வாழ்க்கைத் துணையை விட்டுவிட்டு பிறரை நாடிச் சென்றால் அது மிகப்பெரிய குற்றமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, ஒருபடி மேலே சென்று, விபசாரம் செய்வது மட்டுமல்ல, ஒருவரை இச்சையோடு நோக்குவதுகூட பாவம் என்று குறிப்பிடுகின்றார். அதைவிடவும் அந்த இச்சையைத் தூண்டும் கண்ணைப் பிடுங்கி விடுவது நல்லது என்று குறிப்பிடுகின்றார்.
நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய ‘பிடுங்கி விடுதல்’, ‘வெட்டி விடுதல்’ ஆகிய வார்த்தைகள் உண்மையில் என்ன பொருளை உணர்த்துகின்றன என்று பார்ப்போம்.
தீய எண்ணங்களைப் பிடுங்கி எறிய வேண்டும்
மலைப்பொழிவின் இன்னோர் இடத்தில் இயேசு, “கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்” (மத் 6: 22) என்பார். ஆம். கண் பார்க்கின்றது; அதன்வழியாக ஒருவருக்குள் தீய எண்ணங்கள் உருவாகின்றன. அந்த எண்ணங்கள் அப்படியே அவரைச் செயலுக்கு இட்டுச் செல்கின்றன. அதனால்தான் இயேசு கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள் என்கிறார்.
இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளை நாம் அப்படியே பொருள் கொள்ளக்கூடாது. மாறாக, கண்வழியாக நம்முடைய உள்ளத்தில் உருவாகும் தீய எண்ணங்களைப் பிடுங்கி எறிந்து அல்லது வெட்டி எறிந்துவிட்டு, நம்முடைய உள்ளத்தைத் தூய ஆவியின் கனிகளால் (கலா 5: 22) நிரப்பவேண்டும். அப்பொழுது நம்முடைய உள்ளம் தூயதாக இருக்கும். இறைவனும் அங்கு வந்து குடிகொள்வார்.
ஆகையால், நம்முடைய உள்ளத்தில் படிந்திருக்கும் தீய எண்ணங்களை அப்புறப்படுத்திவிட்டு, இறைவனைப் போன்று தூயவர்களாய் வாழ்வோம்.
சிந்தனை
‘நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம். இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்’ (யோவே 2: 13) என்பார் இறைவாக்கினர் யோவேல். ஆகையால், நாம் நம்முடைய உள்ளத்தில் இருக்கின்ற தீய எண்ணங்களை அகற்றிவிட்டு, உண்மையும் தூய்மையும் அன்பும் நிறைந்தவரான ஆண்டவரிடம் திரும்பி வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.