கடவுளின் உதவியுடன் சமூகத்தைக் கட்டியெழுப்பும் பணி

வெற்றிடமாக மாறிவரும் இடங்களில், நம் சகோதரர் சகோதரிகளிடையே கடவுளை எடுத்துச்சென்று அங்கு சமூகத்தையும், திருஅவையையும் கட்டியெழுப்பும் பணியை இயேசுவிடமிருந்து நாம் பெற்றுள்ளோம் என இஸ்பெயினின் Burgos உயர்மறைமாவட்ட குருமடமாணவர்களை ஏப்ரல் 27ஆம் தேதி, சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தபோது எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குருத்துவப்பணியை ஏற்று நடத்த இயேசு விடுத்த அழைப்பில் இங்கு பல்வேறு இனங்கள், கலாச்சாரங்கள், வயதினர் பதிலளித்துள்ளதைக் காணமுடிகின்றது என அக்குருமடமாணவர் குழுவிடம் கூறிய திருத்தந்தை, வரலாற்றிலும் பாரம்பரியத்திலும் புகழ்வாய்ந்ததாக இருப்பினும் வெற்றிடமாகத் தோன்றும் இடங்களில் நற்செய்தி அறிவிக்க முன்வந்துள்ளது பெருமையாக இருக்கிறது என மேலும் எடுத்துரைத்தார்.  

வெற்றிடமாக மாறியுள்ள இவ்வுலகில் கடவுளைக் கொண்டு நாம் நிரப்பவேண்டும் என்று ஆய்ந்து தெளிவதன் வழியாக நாம் நம் சமூகங்களிடையே இறைவனைக் கொண்டுவருவதுடன், நல்லதொரு சமூகத்தையும் தலத்திருஅவையையும் கட்டியெழுப்ப முடியும் என மேலும், அருள்பணியாளருக்குரிய பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் அம்மாணவர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பன்முகத்தன்மை கொண்ட குழுவாக நாம் ஒருவரை ஒருவர் வரவேற்கவும், ஒருவரை ஒருவர் வளப்படுத்தவும் தெரியும் அதேவேளையில், இறைவனுக்கும் அடுத்திருப்பவருக்குமான பிறரன்பில் ஒன்றிணைந்து இருவர் இருவராக நடக்கும்போதுதான் நம்மால் கடவுளை எடுத்துச் செல்ல முடியும் என அவர்களிடம் திருத்தந்தை கூறினார்.

அறுவடைக்குத் தேவையான ஆட்களை அனுப்பும்படி இறைவனிடம் வேண்டுவது, நம் உள்மனதில் இருக்கும் வெற்றிடத்தை நிறைவுச் செய்ய இறைவனையும் நமக்கு அடுத்திருப்பவரையும் அங்கு வரவேற்பது என்பவைகளையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,   நம்முள் நிறையும் கடவுள் தரும் அமைதியை உலகெங்கும் எடுத்துச் செல்வோம் என்ற விண்ணப்பத்தையும் இஸ்பெயினின் Burgos உயர்மறைமாவட்ட குருமடமாணவர்களிடம் முன்வைத்தார்.

Comments are closed.