இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
செபமாலை மாதமான இம்மாதத்தின் இருபத்தி நான்காம் நாளான இன்று ஆண்டவரில் நாம் கொண்ட விசுவாசம் அதிகரிக்கவும், அவருடைய வழிகளை பின்பற்றுவதன் மூலம் அவ்விசுவாசம் ஆழமாவதற்கும் இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
“பார்வையற்றோருக்கும் கால் ஊனமுற்றோருக்கும் ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்.” என முதல் வாசகம் எடுக்கப்பட்ட எரேமியா நூலில் கூறப்ட்டுள்ளது.
பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு நாம் ஆறுதலாகவும், ஆதரவாகவும் என்றென்றும் இருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இன்றைய நற்செய்தியில்
“இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்.” என பார்வையைற்ற பர்த்திமேயு மீண்டும் தன் புறப்பார்வை கிடைக்க ஆண்டவரிடம் மன்றாடியது போல நாம் நமது அகப்பார்வை கிடைக்கப் பெற வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
இன்று ஞாயிறு திருப்பலி கொண்டாட்டத்தில் பங்கேற்று நற்கருணை திருவிருந்தில் கலந்து கொண்ட நாம் இன்று ஆண்டவரை தாங்கிய நற்கருணை பேழைகளாக இருக்கிறோம் என்ற உண்மையை உணர்ந்து பாவங்களை விலக்கி நமது தூய நடத்தையினால் இறைவனை மேன்மைபடுத்த வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இறைவனுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்பணித்து இறைப்பணியில் தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள், கன்னியர்கள் மற்றும் அருட்சகோதரர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.