அக்டோபர் 26 : நற்செய்தி வாசகம்

கடுகு விதை வளர்ந்து மரமாயிற்று.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-21
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, “இறையாட்சி எதற்கு ஒப்பாயிருக்கிறது? அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்? அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின” என்று கூறினார்.
மீண்டும் அவர், “இறையாட்சியை எதற்கு ஒப்பிடுவேன்? அது புளிப்பு மாவுக்கு ஒப்பாகும். பெண் ஒருவர் அதை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————–
இக்காலத் துன்பமும், எதிர்கால மாட்சியும்
பொதுக்காலம் முப்பதாம் வாரம் செவ்வாய்க்கிழமை
I உரோமையர் 8: 18-25
II லூக்கா 13: 18-21
இக்காலத் துன்பமும், எதிர்கால மாட்சியும்
போராடி வென்றவர்:
ஒலிப்பிக்கில், தொடர்ந்து நான்குமுறை நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று, தான் பிறந்த நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர் அமெரிக்காவைச் சார்ந்த கார்ல் லெவிஸ் (Carl Lewis)
இவர் 1989 ஆம் ஆண்டு, தொடையில் தசை வலியால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார். ஆனாலும் இவர் மீண்டுமாக ஒலிப்பில் பதக்கம் வெல்லவேண்டும் என்பதற்காகக் கடினமாக உழைத்தார். உடல்வாகு, உணவுப் பழக்கம், கடுமையான உழைப்பு ஆகிய மூன்றரையும் கருத்தில் எடுத்துக்கொண்டு மன உறுதியோடு போராடிய இவர், ஏழு ஆண்டுகள் கழித்து, அதாவது 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிப் போட்டியில், நீளம் தாண்டுதலில் நான்காவது முறை தங்கப் பதக்கம் வென்றார். அதிலும் குறிப்பாக 8.5 புள்ளிகள் என்ற சாதனையுடன்!
ஆம், ஒலிம்பிக்கில் நான்கு முறை தங்கம் என்ற சாதனையை அடைவதற்குக் கார்ல் லெவிஸ் துன்பங்களையும் சவால்களையும் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட முதல் வாசகத்தில் பவுல், “இப்போது நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப்போகிற மாட்சியோடு ஒப்படித் தகுதியற்றவை” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
‘இக்காலத் துன்பம்’, ‘எதிர்கால மாட்சி’ என்ற இறந்த பதங்களை உரோமையருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் பவுல் பயன்படுத்துகின்றார். இதில் ‘இக்காலத் துன்பம்’ என்பதை இயேசுவின் விழுமியங்களின்படி நாம் நடக்கும்போது அடையும் துன்பங்கள், எதிர்கொள்ளும் சவால்கள், போராட்டங்கள் போன்றவற்றோடு நாம் தொடர்புபடுத்திப் பார்த்துகொள்ளலாம். அதே நேரத்தில் ‘எதிர்கால மாட்சி’ என்பதை உடலின் உயிர்ப்போடு (பிலி 3:20, 21, கொலோ 3:4; 1 யோவா 3:2) நாம் தொடர்புபடுத்திப் பார்த்துக் கொள்ளலாம்
கிறிஸ்துவின் விழுமியங்களுக்கேற்ப நாம் வாழ்கின்றபோது அதனால் வருகின்ற துன்பங்கள், சவால்கள் போராட்டங்கள் யாவும் எதிர்கால மாட்சியாம் உயிர்ப்போடு ஒப்பிடத் தகுதியற்றவை எனக் கூறும் பவுல், “இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கின்றது” என்கிறார். ஆகையால், நாம் இக்காலத்தில் படுகின்ற துன்பங்களை நினைத்து வருந்தாமல், எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியை எண்ணிப் பெருமகிழ்ச்சி அடைந்து, அதற்காக உழைப்போம்.
இறைவாக்கு:
 கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் அது மிகுந்த விளைச்சலை அளிக்கும் (யோவா 12: 24).
 உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும் (யோவா 16:20).
 விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கை மெய்ப்பிக்கப்படவே நீங்கள் துயருறுகிறீர்கள் (1 பேது 1:7)
சிந்தனைக்கு:
‘எண்ணிலலடங்கா சிரமங்களே ஒரு தலைவனை உருவாக்குகின்றன’ என்பார் லூயிஸ் பாஸ்டர். எனவே, நாம் துன்பங்கள் வழியாக இறைவன் அருளும் விண்ணக மாட்சியை அடைந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.