புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் 100வது பிறந்த நாள்

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் 100வது பிறந்த நாளை (மே 18, 1920-ஏப்.2, 2005) முன்னிட்டு, “100 ஆண்டுகள்: வார்த்தைகளும் உருவப்படங்களும்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஒருநூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் நூல் வெளியீட்டுக் கழகம் வெளியிட்டுள்ள இந்நூலில், “புனிதச் சான்றின் நினைவில் நன்றி” என்ற தலைப்பில், அணிந்துரை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித சமுதாயத்தின் மீது புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் கொண்டிருந்த பேரன்பு, நற்செய்திக்குச் சான்றாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னல்கள் மத்தியிலும், ஒருவர் எவ்வாறு உலகின் பாதைகளில் மகிழ்வோடு நடக்க இயலும் என்பதற்கு, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் சான்றாக விளங்குகிறார் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நூலில் எழுதியுள்ளார்.

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், தன் வாழ்வில் எதிர்கொண்ட துன்பங்கள், அவரின் குடும்பம், அவர் நாட்டு மக்கள், அவரது நாடு மற்றும், அவரது திருஅவையின் தலைமைப் பணியோடு தொடர்பு கொண்டவை என்றும், திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

புனிதத் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1981ம் ஆண்டு துப்பாக்கியால் சுடப்பட்டபோது, அவர், திருஅவைக்காக இரத்தம் சிந்தினார் மற்றும், நோயின் துன்பம்நிறைந்த சோதனை வேளையிலும்கூட நமக்குச் சான்றாக விளங்கினார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்

அவர், நம் மீட்புக்காக சிலுவையில் அறையப்பட்ட மனிதாரன கடவுளுடன் ஒவ்வொரு நாளும் தன் வாழ்வைப் பகிர்ந்துகொண்டார் என்றும் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்த்த இயேசுவைச் சந்திப்போம் என்ற உறுதியில் எவரும் மகிழ்வடையலாம் என்றும் எழுதியுள்ளார்.

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், கடவுளின் இரக்கத்திற்கு மாபெரும் சான்றாக விளங்கினார், அவர் இறைபதம் அடைந்த 15 ஆண்டுகளுக்குப்பின், மற்றும் அவரது நூறாவது பிறந்த நாளில், எளிமையான வழியில் அவரை நினைவுகூர்வது மிகவும் மகிழ்வு தருகின்றது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நூலில் எழுதியுள்ளார்.

போலந்து நாட்டு திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், திருஅவையின் தலைமைப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட, 1978ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியிலிருந்து, 2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி அவர் இறைபதம் சேர்ந்த நாள்வரை, அவர் எழுதியவை, அவரின் உருவப்படங்கள் மற்றும் முக்கிய கூற்றுகள், இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

Comments are closed.