புதல்வியர் சபை அருள்சகோதரிகளுக்காகச் செபிப்போம்

இன்று திருஅவை புனித லூயிஸ் து மரியாக் (Luisa de Marillac) அவர்களை நினைவுகூர்கின்றது, வத்திக்கானில் சிறார் மருத்துவமனையை கடந்த நூறு ஆண்டுகளாக நடத்திவரும், Vincentian சபை அருள்சகோதரிகளுக்காகச் செபிப்போம், இறைவன் இச்சகோதரிகளை ஆசீர்வதிப்பாராக என்று, மே 09, இச்சனிக்கிழமை காலையில் திருப்பலியைத் துவக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித லூயிஸ் து மரியாக் திருநாள், வழக்கமாக மார்ச் மாதம் 15ம் நாள் சிறப்பிக்கப்படுகின்றது. இவ்வாண்டு மார்ச் மாதம் தவக்காலமாக இருந்ததால், இத்திருநாள் இன்று சிறப்பிக்கப்படுகின்றது. வத்திக்கானில், சாந்தா மார்த்தா இல்லத்தில் பணியாற்றும் அருள்சகோதரிகள், பிறரன்பின் புதல்வியர் சபையைச் சேர்ந்தவர்கள். இச்சபை, புனித லூயிஸ் து மரியாக் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இப்புனிதர், புனித வின்சென்ட் தெ பால் அவர்களுடன் இணைந்து இச்சபையை ஆரம்பித்தார். ஏழை நோயாளிகளுக்குப் பணியாற்றுவதே இச்சபையின் முக்கிய நோக்கம். பிறரன்பின் புதல்வியர் சபை, Vincentian குழுமத்தைச் சார்ந்தது. புனித லூயிஸ் து மரியாக் அவர்களின் படமும், திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றிய பீடத்திற்கருகில் வைக்கப்பட்டிருந்தது.

மறையுரை

இச்சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு, வத்திக்கானில் சாந்தா மார்த்தா இல்லத்திலுள்ள சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியார், திருஅவையை வளரச் செய்கின்ற அதேவேளை, பொறாமை, அதிகாரம் மற்றும் பணத்தால், தீய ஆவி திருஅவையை அழிக்க முயற்சிக்கின்றது என்று, தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

போதனையும், இன்னல்களும்

இயேசு குறித்து பவுலடிகளார் கூறியதை, அந்தியோக்கியா நகரைச் சேர்ந்த யூதர்கள் எதிர்த்து, பொறாமையால் நிறைந்து, அவரைப் பழித்துரைத்தது பற்றிச் சொல்லும், திருத்தூதர் பணிகள் நூல் பகுதியை (தி.ப.13:44-52) மையப்படுத்தி மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த யூதர்கள், அந்நகரின் பக்தியுள்ள மதிப்புக்குரிய பெண்கள் மற்றும், நகரின் முதன்மைக் குடிமக்களைத் தூண்டிவிட்டு, பவுலையும், பர்னபாவையும் இன்னலுக்குள்ளாக்கியதால், அவ்விருவரும் அப்பகுதியைவிட்டு கட்டாயமாக வெளியேறவேண்டிய நிலை உருவானது என்று திருத்தந்தை கூறினார்.

கடவுளின் வல்லமை பற்றிச் சொல்கையில், “ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்… (தி.பா.98,1-2)” என்ற இன்றைய திருப்பலியின் பதிலுரைப் பாடலைக் குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆண்டவரின் வார்த்தையைக் கேட்பதற்காக, அந்தியோக்கியா நகர மக்கள் அனைவரும் கூடியிருந்தனர், ஏனெனில், பவுலும், பர்னபாவும் வல்லமையுடன் போதித்தனர் மற்றும், தூய ஆவியாரும் அவர்களுக்கு உதவினார் என்று கூறிய திருத்தந்தை, பெருந்திரளான மக்களைப் பாரத்த யூதர்கள், பொறாமையால் நிறைந்து பவுலின் போதனைகளை, பழித்துரைத்து அவமானப்படுத்தினர் என்றும் கூறினார்.

Comments are closed.