நற்செய்தி வாசக மறையுரை (மே 11)

பாஸ்கா காலம் ஐந்தாம் வாரம் திங்கட்கிழமை
யோவான் 14: 21-26
யாருடன் (மூவொரு) கடவுள் குடிகொள்வார்?
நிகழ்வு
இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் ‘மறு கிறிஸ்துவாக’, ‘இன்னோர் இயேசுவாக’ வாழ்ந்தவர் அசிசி நகர்ப் புனித பிரான்சிஸ்.
ஒருநாள் இவர் ஒரு மலைக்குச் சென்று, தனிமையில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது இறைவன் இவருக்கு முன்பாகத் தோன்றி, “பிரான்சிஸ்! நீ எனக்குகந்த வழியில் நடந்து, என்மீது மிகவும் அன்பு செலுத்துவதால், என்னிடத்தில் நீ எது கேட்டாலும் அதைத் தரலாம் என்று இருக்கின்றேன். இப்பொழுது உனக்கு என்ன வேண்டுமோ, அதைக் கேள் தருகின்றேன்” என்று சொல்லி, பிரான்சிசின் பதிலுக்காகக் காத்திருந்தார்.
பிரான்சிஸ் வேறெதைப் பற்றியும் சிந்திக்காமல், “இறைவா! எனக்கு நீ மட்டும் போதும்; வேறெதுவும் வேண்டாம்” என்றார். உடனே இறைவன் அவரிடம், “பிரான்சிஸ்! நான் எப்போதும் உன்னோடு இருக்கின்றேன்; இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது; ஆனால், நீ இவ்வுலகில் அன்பையும் அமைதியையும் மகிழ்ச்சியையும் இரக்கத்தையும் விதைக்க வேண்டும் அல்லவா, அதற்கு வேறு ஏதாவது வேண்டும் என்றால் கேள், தருகின்றேன்” என்றார்.
“இறைவா! என்னிடத்தில் நீர் இதே கேள்வியை எத்தனை முறை கேட்டாலும் இதே பதிலைத் தான் தருவேன். எனக்கு வேறெதுவும் தேவையில்லை; நீர் மட்டும் போதும்” என்றார் பிரான்சிஸ். உடனே கடவுள், அவருக்குள் குடிகொண்டு, அவருடைய போதனையாலும் அவருடைய நற்செயல்களால் எல்லாரும் பயன்பெறுமாறு செய்தார்.
அசிசி நகர்ப் புனித பிரான்சிசின் வாழ்வில் நடந்ததாக, ஜோஜி வள்ளி என்ற எழுத்தாளர் எழுதியை ‘Heart 2 Heart’ என்ற நூலில் இடம்பெறும் இந்த நிகழ்வு, இறைவனை நாம் மிகவும் அன்பு செய்தால், அவர் நம்மோடு குடிகொள்வார் என்ற செய்தியை மிக அழகாக எடுத்துச் சொல்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, “என்மீது அன்பு கொண்டுள்ளவரிடம் வந்து, நாங்கள் குடிகொள்வோம்” என்கிறார். இயேசு சொல்லும் இவ்வார்த்தைகளின் பொருள் என்ன என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
அன்பு என்பது சொல்லல்ல; செயல்
நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம், “என் கட்டளைகளைக் ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்புகொண்டுள்ளார்” என்று கூறுகின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகளைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கின்றபொழுது, இயேசுவை அன்பு செய்வதற்குப் பல வழிகள் இருந்தாலும், அதில் முதன்மையான வழி அவர்களுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வதுதான் என்ற உண்மை விளங்கும்.
இன்றைக்குப் பலர் இயேசுவை அல்லது கடவுளை அன்பு செய்வதாகச் சொல்லிக்கொண்டு, அவருடைய கட்டளைகளை உதறித் தள்ளிவிட்டு, வெறும் பக்தி முயற்சிகளில் மட்டும் கவனம் செலுத்துகின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் இயேசுவை உண்மையாக அன்பு செய்பவர்களாகவும் அவருடைய சீடர்களாகவும் இருக்கமுடியாது. அப்படியானால், இயேசுவை அன்பு செய்வதற்கு, அவருடைய அன்புக் கட்டளையைக் (யோவா 13: 34) கடைப்பிடித்து வாழ்வது மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது.
இயேசுவை அன்பு செய்வோருக்கு அவர் அளிக்கும் ஆசிகள்
தன்னுடைய கட்டளைக் கடைப்பிடிக்காமல், தன்னை அன்பு செய்ய முடியாது என்று சொன்ன இயேசு, தொடர்ந்து, தன்னுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்போருக்கு மூன்று விதமான ஆசிகளை வழங்குவதைப் பற்றிச் சொல்கின்றார். முதலாவது ஆசி, தந்தைக் கடவுள் அவரை அன்புசெய்வார் என்பதாகும். ஏனெனில், இயேசுவின் வார்த்தைகள் அவருடைய வார்த்தைகள் அல்ல; அவரை அனுப்பிய தந்தையின் வார்த்தைகள். ஆகையால், இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடிப்போரைத் தந்தைக் கடவுள் அன்பு செய்பவராக இருக்கின்றார்.
இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடிப்போருக்கு கிடைக்கும் இரண்டாவது ஆசி, இயேசுவின் வெளிப்பாடு ஆகும். இது குறித்துப் பவுல் குறிப்பிடும்பொழுது, கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே, அந்த வெளிப்பாடு (2 கொரி 4: 6) என்று குறிப்பிடுவார். இயேசுவன் கட்டளையைக் கடைப்பிடிப்போருக்கு கிடைக்கும் மூன்றாவது ஆசி, மூவொரு கடவுளின் உடனுறைதல் அல்லது மூவொரு கடவுளின் குடிகொள்ளுதல். இதைதான் இயேசு, “என்மீது அன்பு கொள்பவரிடம் வந்து, அவருடன் குடிகொள்வோம்” என்று குறிப்பிடுகின்றார்.
ஆகையால், நாம் பெயரளவுக்கு இயேசுவின் சீடர்களாக இல்லாமல், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழும், அவருடைய உண்மையான சீடர்களாக இருந்து, அவரது அருளைப் பெற்று மகிழ்வோம்.
சிந்தனை
‘காயப்படும் வரை அன்பு செய்தால், இவ்வுலகில் காயப்படுத்தல் என்ற ஒன்று இருக்காவே இருக்காது; அன்பு மட்டும்தான் இருக்கும்’ என்பார் கொல்கொத்தா நகர்ப் புனித தெரசா. ஆகையால், நாம் காயப்படும் வரை இறைவனை, ஒருவர் மற்றவரை அன்புசெய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.