மார்ச் 26 : நற்செய்தி வாசகம்

உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள்மேல் குற்றம் சுமத்துவார்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 31-47
அக்காலத்தில்
இயேசு யூதர்களை நோக்கிக் கூறியது: “என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தால், என் சான்று செல்லாது. என்னைப்பற்றிச் சான்று பகர வேறு ஒருவர் இருக்கிறார். என்னைப்பற்றி அவர் கூறும் சான்று செல்லும் என எனக்குத் தெரியும். யோவானிடம் ஆள் அனுப்பி நீங்கள் கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார். மனிதர் தரும் சான்று எனக்குத் தேவை என்பதற்காக அல்ல; நீங்கள் மீட்புப் பெறுவதற்காகவே இதைச் சொல்கிறேன். யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள். யோவான் பகர்ந்த சான்றைவிட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று.
நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும். “என்னை அனுப்பிய தந்தையும் எனக்குச் சான்று பகர்ந்துள்ளார். நீங்கள் ஒருபோதும் அவரது குரலைக் கேட்டதுமில்லை; அவரது உருவைக் கண்டதுமில்iலை. அவரது வார்த்தையும் உங்களுக்குள் நிலைத்திருக்கவில்லை; ஏனெனில், அவர் அனுப்பியவரை நீங்கள் நம்பவில்லை. மறைநூல் வழியாக நிலைவாழ்வு கிடைக்கும் என எண்ணி அதனைத் துருவித் துருவி ஆய்ந்து பார்க்கிறீர்களே! அம்மறைநூலும் எனக்குச் சான்று பகர்கிறது. வாழ்வு பெறுமாறு என்னிடம் வர உங்களுக்கு விருப்பம் இல்லை.
மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை. உங்களை எனக்குத் தெரியும். உங்களிடம் இறையன்பு இல்லை. நான் என் தந்தையின் பெயரால் வந்துள்ளேன். ஆனால் என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வேறொருவர் தம் சொந்தப் பெயரால் வருவாரானால் அவரை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். கடவுள் ஒருவரே. அவர் தரும் பெருமையை நாடாது, ஒருவர் மற்றவரிடமிருந்து பெருமை தேடிக்கொள்கிறீர்களே! உங்களால் எப்படி என்னை நம்ப இயலும்? தந்தையின் முன்னிலையில் உங்கள்மேல் குற்றம் சுமத்தப்போகிறவன் நான் என நினைக்காதீர்கள். உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள்மேல் குற்றம் சுமத்துவார். நீங்கள் மோசேயை நம்பியிருந்தால் என்னையும் நம்பியிருப்பீர்கள். ஏனெனில் அவர் என்னைப் பற்றித்தான் எழுதினார். அவர் எழுதியவற்றை நீங்கள் நம்பவில்லை என்றால் நான் சொல்பவற்றை எவ்வாறு நம்பப் போகிறீர்கள்?”
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————–
யோவான் 5: 31-47
இயேசுவை இறைமகன் ஏற்றுக்கொள்ள மறுத்த யூதர்கள்
நிகழ்வு
ஓர் அரங்கில் கருத்தமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கருத்தமர்வில் பேசுவதற்காகச் சிறப்புப் பேச்சாளர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார். கடவுள்மீது நம்பிக்கையில்லாத அவர் பேசும்போது, இடையிடையே கிறிஸ்துவைப் பற்றியும் கிறிஸ்தவ மதத்தில் நடக்கும் தீமைகளையும் பேசினார். எல்லாவற்றையும் பேசிமுடித்தபின்பு, அரங்கில் இருந்தவர்களைப் பார்த்து, “ஏதாவது கேள்வி இருந்தால் கேட்கலாம்” என்றார்.
உடனே அரங்கில் இருந்து ஒருவர் எழுந்து மேடையில் ஏறினார். அவர் ஒரு பெரிய குடிகாரராக இருந்து, பின் மனம்மாறி, கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தவர். அவர் தன்னிடத்தில் இருந்த ஓர் ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, அதன் தோலை மெல்ல உரிக்கத் தொடங்கினார். அவரைக் கண்ட பேச்சாளருக்குக் கடுமையாகச் சினம் வந்தது. பேச்சாளர் அந்த மனிதரிடம், “கேள்வி கேட்கச் சொன்னால், இப்படி ஆரஞ்சுப் பழத்தை உரித்துக்கொண்டிருக்கின்றீரே! உமக்கு என்ன பிரச்சனை?” என்றார். அப்பொழுதும் அந்த மனிதர் எதுவும் பேசாமல் ஆரஞ்சுப் பழத்தை உரிப்பதிலேயே தீவிரமாக இருந்தார்.
ஒருவழியாக ஆரஞ்சுப் பழத்தை உரித்து முடித்ததும், அந்த மனிதர் பேச்சாளரைப் பார்த்து, “இந்த ஆரஞ்சுப் பழம் இனிக்குமா? புளிக்குமா?” என்றார். பேச்சாளருக்குத் தாங்க முடியாத சினம் வந்தது. “நீ பெரிய முட்டாளாகத்தான் இருக்கவேண்டும்… ஆரஞ்சுப் பழத்தைச் சுவைத்துப் பார்க்காமல் அது இனிக்குமா? புளிக்குமா? என்று எப்படிச் சொல்லமுடியும்?” என்று கத்தினார் பேச்சாளர். இதற்கு அந்த மனிதர் அவரிடம், “நீங்கள் பேசினீர்களே இதுதான் சரியான பேச்சு. எப்படி ஆரஞ்சுப் பழத்தைச் சுவைத்துப் பார்க்காமல், அது இனிப்பா, புளிப்பா என்று சொல்ல முடியாதோ, அப்படி இயேசுவைப் பற்றி எதுவும் தெரிந்துகொள்ளாமல், அவர் இப்படி, அவர் தோற்றுவித்த மதம் இப்படி என்று சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அது மிகப்பெரிய முட்டாள்தனம். ஒரு காலத்தில் நான் கிறிஸ்துவைப் பற்றி எதுவும் தெரியாமல் குடித்துக் குடித்து வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டிருந்தேன். என்றைக்கு கிறிஸ்துவைக் குறித்து அறிய வந்தேனோ, அன்றைக்கே என்னுடைய வாழ்க்கை மாறிப்போனது” என்றார்.
ஆம், ஒன்றைக் குறித்து அல்லது முழுமையாக அறிந்துகொள்ளாமல் அதை, அவரை விமர்சிப்பது மிகப்பெரிய முட்டாள்தான். அதைத்தான் மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நற்செய்தி வாசகத்தில் இயேசுவைக் குறித்து எதுவும் தெரியாமல், அவர் கடவுளைத் தந்தை என்று சொன்னதற்காக யூதர்கள் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுகின்றார்கள். இந்த நிகழ்வு நமக்கு என்ன செய்தியைச் சொல்கிறது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தான் இறைமகன் என்பதற்கு இயேசு தரும் சான்றுகள்
பொதுவாக யூதர்கள் ஒருவர் தரும் சான்றினை ஏற்றுக்கொள்வதில்லை (இச 17: 6; 19: 15) இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்டோரோ சொன்னால்தான் அதை நம்புவார்கள். இங்கு இயேசு தான் இறைமகன் என்பதைப் பல்வேறு சான்றுகளின் வழியாக விளக்குகின்றார்.
முதலாவதாக இயேசு தரும் சான்று திருமுழுக்கு யோவான். திருமுழுக்கு யோவான் இயேசுவைக் குறித்து சான்று பகர்ந்தார் (யோவா 1: 6-8). மட்டுமல்லாமல், அவர் இயேசுவைக் கடவுளின் ஆட்டுக்குட்டி (யோவா 1: 29) என்று சுட்டிக்காட்டினார். இயேசு தரும் இரண்டாவது சான்று தந்தைக் கடவுள். தந்தைக் கடவுள் இயேசுவை, ‘இவரே என் அன்பார்ந்த மைந்தர்’ (மத் 3:17; 17:5) என்றார். இயேசு தரும் மூன்றாவது சான்று மறைநூல். மறைநூலும் இயேசுவைப் பற்றிச் சான்று பகர்ந்தது. இயேசுதரும் நான்காவது சான்று மோசே. மோசேயும் இயேசுவைப் பற்றிச் சான்று பகர்ந்தார் (எண் 21: 9; 24: 17).
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவின் செயல்கள் அவர் இறைமகன் என்று சான்று பகர்ந்தன. எதில் எதையும் யூதர்கள் நம்பாமல், இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் இருந்ததுதான் வியப்பாக இருக்கின்றது. பல நேரங்களில் நாமும் கூட பல்வேறு சான்றுகள் இருந்தும், இயேசுவை ஏற்றுக்கொள்ளவும் அவர்மீது நம்பிக்கை வைக்கவும் தயங்குகின்றோம். ஆகையால், நம்முடைய வாழ்வின் அச்சாரமாக இருக்கும் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து வாழக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனை
‘இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கின்றார்; அவரும் கடவுளோடு இணைந்திருக்கின்றார்’ (1 யோவா 4: 15) என்பார் புனித யோவான். ஆகையால், நாம் இயேசுவே இறைமகன் என்று நம்பி, அறிக்கையிடுவோம். அதன்வழியாக இறைவனோடு ஒன்றித்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.