உத்தரிக்கிற ஆண்மாக்கள் வணக்கம் மாதம் 18.11.2019

ஆதலால், பாவங்களினின்று மீட்கப்படும் படி இறந்தவர்களுக்காக வேண்டிக் கொள்வது புனிதமும் பயனுமுள்ள எண்ணமாய் இருக்கின்றது
–2 மக்கபே -12:46)

நவம்பர்-17

பதினேழாம் நாள்

உத்தரிக்கிற ஆத்துமாக்கள் இடும் பிரலாபங்களைக் காண்பிக்கிற வகையாவது

தியானம்

பிதாப்பிதாவாகிய யோபு என்பவர் எவராலுங் கைவிடப்பட்டு எல்லாவற்றையும் இழந்து, சர்வாங்கத்திலும் நொந்து புழுத்து நாறி தம்மைச் சந்திக்கவந்த தம்முடைய மூன்று விசேஷ சிநேகிதருக்குத் தாம் அநுபவித்த நிற்பாக்கியங்களை அழுகையுடன் விவரித்தப்பின், பெருமூச்சு விட்டு சொன்னதாவது :’ஆண்டவருடைய கையானது என்னைத் தண்டிக்கிறதினாலே என் சினேகிதரே, நீங்கள் சற்றாகிலும் என்பேரில் இரக்கமாயிருங்கள், என்பேரில் இரக்கமாயிருங்கள்’ என்பார்.

உத்தரிக்கிற ஆத்துமாக்கள் சகலராலும் மறக்கப்பட்டு தங்களுக்கு ஆறுதலாகத் தாங்களே ஒன்றுஞ் செய்யக்கூடாமல் நெருப்பிலே சர்வாங்கத்திலும் வேதனைப்பட்டுப் பிதாப் பிதாவாகிய யோபென்பவர் விம்மிச்சொன்ன புலம்பல்களைப் போலே உங்களை நோக்கி மிகுந்த துயரத்துடனே உச்சரிக்கிறதாக நினைத்துக்கொள்ளுங்கள். அதாவது “சர்வேசுரனுடைய கையானது எங்களைத் தண்டிக்கிறதென்கிறதினாலே எங்கள் சிநேகிதரான நீங்கள் சற்றாகிலும் எங்கள் பேரில் இரக்கமாயிருங்கள், இரக்கமாயிருங்கள்.”

“எங்களுடைய ஞான சகோதரரான அனைத்து கிறிஸ்துவர்களே! எங்கள் பேரில் இரக்கமாயிருங்கள். என்னத்தினாலேயென்றால், பூமண்டலத்தில் இருக்கக் கூடுமான சகல வேதனைகளிலும் அதிக வேதனைப்பட்டு, அகோரமாய் எரியும் நெருப்பிலே வெந்து யாதோர் ஆறுதலுமின்றி, இளைப்பாற்றியுமின்றி, மனோவாக்குக் கெட்டாத வருத்தங்களை அனுபவிக்கிறோமே.

எங்களுக்காக நீங்கள் கொஞ்சம் ஜெபம்பண்ணி ஒரு தவக்கிரியையும் செய்து பிச்சையையுங் கொடுத்து எங்களைத் தேற்றி மீட்கிறது உங்களாலே கூடுமான சகாயந்தான். இவைகளைத் செய்வீர்களென்ற நம்பிக்கையல்லாமல் எங்களுக்கு வேறே நம்பிக்கையில்லை. ஒ சகோதரர்களே ஆண்டவருடைய திருமுகத்தைப் பார்த்து நீங்கள் சற்றாகிலும் எங்கள் பேரில் இரக்கமாயிருங்கள், இரக்கமாயிருங்கள்” என்பார்கள். புண்ணியவான்களான கிறிஸ்துவர்களே, உத்தரிக்கிற ஆத்துமாக்களுடைய பிரலாபத்தைக் கேட்டு அவர்களுடைய வேதனை தீர என்னத்தைச் செய்வீர்கள்?

“எங்களுடைய ஊரார் தேசத்தாரும், சிநேகிதர், உபகாரிகளும், உறவின்முறையாருமானவர்களே! நீங்களாவது எங்கள்பேரில் இரக்கமாயிருங்கள், இரக்கமாயிருங்கள். என்னத்தினாலேயென்றால், நாங்கள் எவ்வித வாதை வேதனைகளையும் யாதோர் ஆதரவின்றி அநுபவிக்கிறதுமல்லாமல் மட்டில்லாத அன்போடு நேசித்து விரும்புகிற சர்வேசுரன் தாமே எங்களைக் கோபமாய்ப் பார்த்து தூரமாய்த் தள்ளி, அகோரமாய்த் தண்டித்து வருத்தப்படுத்துகிறாரே,

நாங்கள் உங்களுடன் பூமியிலே சஞ்சரிக்கும்போது, நீங்கள் எங்களுக்கு எவ்வளவோ, பட்சத்தைக் காண்பித்தீர்கள், எம்மாத்திரம் ஒத்தாசை பண்ணினீர்கள். எத்தனை உபகாரங்களைச் செய்தீர்களே, இப்போது எங்கள் பேரிலுள்ள அந்த பட்சம் அற்றுப் போச்சுதோ, உங்களுடைய தயவு மாறிப்போனதோ, உங்களுடைய தயாளஞ் சலித்ததோ, எங்களுடைய நிர்பாக்கியந் தீர கொஞ்சம் பிரயாசைப்படக்கூடாதோ, எங்களுக்காக ஒரு ஜெபத்தைச் செய்யமாட்டீர்களோ, பிச்சைக் கொடுக்க பணமில்லையோ, கொஞ்சந் தவம் பண்ணத் திராணியில்லாமற் போச்சுதோ? சொல்லுங்கள் ஒ சகோதரர்களே! ஆண்டவர் எங்களைக் கோபமா தண்டிக்கிறதினாலே நீங்களாவது எங்கள்பேரில் இரக்கமாயிருங்கள் ” என்பார்கள்

புண்ணியவான்களான கிறிஸ்தவர்களே, ! உத்தரிக்கின்ற ஆத்துமாக்களின் இந்த அபய சத்தத்தைக் கேட்டு அவர்களுடைய அவதி நீங்க என்னத்தைச் செய்வீர்கள்?
” என் மக்களே , உங்களுடைய தகப்பனாகிய என் பேரில் இரக்கமாயிருங்கள். அதேதென்றால் இப்போது நெருப்பு நிறைந்த இந்தச் சிறைக்கூடத்தில் சிறைப்பட்டுச் சொல்லிலும் நினைவிலும் அடங்காத வேதனைகளை அனுபவிக்கிறேன். மோட்ச பேரின்பத்துக்குப் போகவேணுமென்று பொறுக்கப்படாத ஆசையாயிருந்தாலும், நான் அதற்குப் போகாதபடிக்கு நிறுத்தப்பட்டு, அதிக தாகத்தால் தவிக்கிற மனுஷன் தண்ணீரைக் காணாமல் வருத்தப்படுகிறதை விட நான் அதிகமாய் வருத்தப்படுகிறேன் .

என் அன்புள்ள பிள்ளைகளே! உங்கள் தகப்பனாகிய என்னை மறந்துப் போனீர்களே? உங்களைப் பெற்று வளர்த்து, உங்களுக்காகப் படாத பிரயாசையெல்லாம் பட்டு, நீங்கள் அநுபவிக்கிற எல்லாவற்றையும் நானே உங்களுக்குத் தேடிவைத்தேன். உங்களுக்கு யாதொரு கவலை பொல்லாப்பு நேரிட்டிருந்த போது உங்களைத் தேற்றவும் , சொஸ்தமாக்கவும், காப்பாற்றவும் , இராப்பகலாய் உழைத்து ,அலைந்து செய்யக்கூடுமானதெல்லாம் செய்தேனே . ஐயையோ! உங்களுக்குத் திரண்ட ஆஸ்திகளை வைத்துப் போகவேணும் என்றும் , உங்களுடைய பாக்கியத்தையும் மகிமையையும் அதிகப்படுத்த வேண்டுமென்றும் எனக்கிருந்த மிகுந்த ஆசையினாலே அநேகம் குற்றங்களைப் பண்ணினேனே . அநேக பாவங்களையும் கட்டிக் கொண்டேன் . நான் உங்களை அதிகமாய் நேசித்ததனால் அல்லவோ இவ்வளவு தண்டிக்கப்படுகின்றேன். பிள்ளையாகிய நீங்கள், என் ஆஸ்திகளையெல்லாம் அடைந்திருக்கிற நீங்கள். நான் கட்டின வீட்டிலே குடியிருக்கிற நீங்கள், நான் உங்களுக்கு தேடி வைத்த சாப்பாட்டைச் சாப்பிடுகிற நீங்கள், என்னை மறந்து போகிறதெப்படி?

Comments are closed.