குணப்படுத்தும் கரங்கள் பேறுபெற்றவை

உரோம் குழந்தை இயேசு (Bambino Gesu) சிறார் மருத்துவமனைப் பணியாளர்கள், நோயாளிச் சிறாரைக் குணமாக்குவதற்கு மட்டும் தங்களை அர்ப்பணிக்காமல், அரிய நோய்களைக் குணமாக்குவதற்குரிய முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

திருப்பீடத்தின் உரோம் குழந்தை இயேசு மருத்துவமனை துவங்கப்பட்டதன் 150ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்மருத்துவமனையின் நிர்வாகத்தினர், மருத்துவர்கள், செவிலியர், ஏனைய பணியாளர், சிறார் மற்றும் குடும்பத்தினர் என ஏறத்தாழ ஆறாயிரம் பேரை, புனித 6ம் பவுல் அரங்கத்தில், நவம்பர் 16, இச்சனிக்கிழமையன்று, சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடம், இந்த புகழ்மிக்க நிறுவனத்திற்கு, தனது அயராத ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, 1869ம் ஆண்டில், இத்தாலியின் முதல் சிறார் மருத்துவமனையாக ஆரம்பிக்கப்பட்ட இது, ஒரு கொடை மற்றும், உள்தூண்டுதல்  என்று கூறினார்.

ஒரு பெண் மற்றும், ஓர் அன்னையாக, Arabella Salviati அவர்கள், சிறார்க்கென மனத்தாராளத்துடன் இம்மருத்துவமனையைத் துவக்கினார் என்றும், இது 1924ம் ஆண்டில் வத்திக்கானுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது என்றும் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்றிலிருந்து, கத்தோலிக்கத் திருஅவை, இப்பூமியின் எல்லா இடங்களிலும் உள்ள சிறார்க்கென, உலகின் சிறாரின் பாரம்பரிய சொத்தாக இதை அமைத்துள்ளது என்றும் கூறினார்.

இம்மருத்துவமனையின் உண்மையான தனித்துவம் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, வெனெசுவேலா நாட்டு அன்னை ஒருவர், தனது மகன் இம்மருத்துவமனையில் குணமாக்கப்பட்டது பற்றி எழுதியிருப்பது, சிறந்த சான்றாக உள்ளது என்று கூறினார்.

பிறரைக் குணமாக்குவது ஒரு கொடையாகும் எனக் கூறிய திருத்தந்தை, அந்நிகழ்வில் கலந்துகொண்ட மருத்துவர்கள் மற்றும், செவிலியரின் கரங்களை ஆசீர்வதித்தார். மேலும், இம்மருத்துவமனையின் பணிகளைப் பாராட்டி ஊக்குவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்

Comments are closed.