உக்ரைனின் திருப்பீடத் தூதுவர் திருத்தந்தையுடன் சந்திப்பு!
ஜூன் 6, கடந்த வெள்ளிக்கிழமையன்று உக்ரைனின் திருப்பீடத் தூதுவர், பேராயர் Visvaldas Kulbokas அவர்கள் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களை சந்தித்த போது, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனின் இறைநம்பிக்கை மற்றும் மனிதகுல நடவடிக்கைகள் குறித்தும், கடுமையான தாக்குதல்களால் ஏற்பட்ட துயரங்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
மேலும், இச்சந்திப்பு ஓர் ஆன்மிக சந்திப்பு என்று தெரிவித்ததோடு ஜூன் 6, வெள்ளிக்கிழமையன்று நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகள் பற்றியும், தூங்க இயலாத, நகரவும் முடியாத சுதந்திரமற்ற கடினமான சூழலைப் பற்றியும், திருத்தந்தையுடன் பகிர்ந்து கொண்டதாகவும் பேராயர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக குண்டு வீச்சு இடம்பெற்று வருகிறது என்றும், இதனால் மருத்துவமனைகள், வங்கிகள், அரசு நிறுவனங்கள், பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்றும், பூமிக்கு அடியில் இயங்கும் 140-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கட்டப்பட்டு வருகின்றன என்றும் உக்ரைனின் நிலைப் பற்றி பேராயர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போர்முனையில் இறக்கும் வீரர்கள், அவர்களின் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பதாகவும், அந்தச் சூழலில் மருத்துவரோ அல்லது அறுவை சிகிச்சை நிபுணரோ அவர்களுக்கு உதவமுடியாது, அருள்பணியாளரால் மட்டுமே முடியும் என்றும் பேராயர் தெரிவித்துள்ளார்.
21-ஆம் நூற்றாண்டிலும் உலகளாவிய மனிதாபிமானச் சட்டங்களை காக்க முடியாத உலகம் என்பது மிகப் பெரிய துயரமாகும் என்றும், விடாமுயற்சி, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பை ஊக்குவிக்கும் இறைவனிடமே தங்களின் நம்பிக்கை உள்ளது என்றும் அச்செய்தியில் கூறியுள்ளார் பேராயர்.
Comments are closed.