இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகம் எடுக்கப்பட்ட எசாயா நூலில்,
“பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்.” என ஆண்டவர் கூறுகிறார்.
இவ்வுலகில் இரத்த உறவுகள், குடும்ப உறவுகள் , நட்புறவுகள் இவை அனைத்தையும் விட மேலான உறவு கடவுள் நம்மோடு கொண்ட நிலையான உறவு ஆகும். இவ்வுலக வாழ்விலும், நித்திய வாழ்விலும் கடவுள் நம்மோடு கூட இருந்து கொண்டே இருக்கிறார் என்ற உண்மையை மனதில் எப்பொழுதும் நினைவில் வைத்திட இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப் பாடல் திருப்பாடல் 145:18-ல்,
“தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.” என வாசிக்கின்றோம்.
நம்மோடு கூட இருக்கும் ஆண்டவர், ‘நாம் அவரை எப்போதும் நினைத்துக் கொண்டிக்கிறோமா? அவரை நோக்கி மன்றாடுகின்றோமா?’ என நம்மை எப்போதும் உற்று கவனித்துக் கொண்டே இருக்கிறார்.
அவரிடம் மன்றாடும் போது அவர் நமக்கு ஆறுதலாய் இருக்கிறார். நம்மை அரவணைத்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையை உணர வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இந்த நாள் முழுவதும் நம்முடைய பேச்சிலும், செய்கின்ற செயல்கள் அனைத்திலும் தூய ஆவியானவர் நம்மை நன்கு வழி நடத்திட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
ஆறாம் நூற்றாண்டில் ஸ்பெயினில் நாத்திகக் கருத்துக்களிலிருந்து மக்களை மனம் திருப்புவதில் பெரும் வெற்றி கண்ட இன்றைய புனிதர் லியாண்டரை திருச்சபைக்கு தந்த நம் இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இந்த தவக்காலத்தில் செய்யும் நாம் செய்யும் பக்தி முயற்சிகள் அனைத்தும், இறைவனுடைய இரக்கப்பெருக்கமும், அவரது அருளும் நமக்குக் கிடைத்திடும் வகையில் அமைந்திட இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.