பிப்ரவரி 2 : நற்செய்தி வாசகம்

உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன

உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-40

மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது, குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், “ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.

அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். “ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை” என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.

அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்த போது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, “ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை” என்றார்.

குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.

சிமியோன் அவர்களுக்கு ஆசி கூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார்.

ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர். மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப் பற்றிப் பேசினார்.

ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள்.

குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

—————————————————————————

“கடவுளுக்கு உகந்தவர்களாவோம்”

ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல்

I மலாக்கி 3: 1-4

II எபிரேயர் 2: 14-18

III லூக்கா 2: 22-40

“கடவுளுக்கு உகந்தவர்களாவோம்”

பங்குகொண்டார்; வெற்றி கொண்டார்; உதவி செய்வார்

எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்களை மீட்கக் கடவுள் முடிவு செய்தபோது, அவர்களை அங்கிருந்து போகவிடாமல் தடுத்தான் பார்வோன். இதனால் கடவுள் அவர்கள் நடுவில் பத்து வகையான துன்பங்களை அனுப்பினார். அவற்றுள் ஒன்றுதான் தலைமகன்களின் சாவு (விப 12). எகிப்தியர்களின் தலைமகன்கள் இறந்தபோது, இஸ்ரயேலின் மக்கள், தங்கள் வீட்டின் கதவு நிலைகளில் இரத்தம் தெளித்திருந்ததால், அவர்களுடைய தலைமகன்களுக்கு எதுவும் ஆகவில்லை. இவ்வாறு கடவுள் இஸ்ரயேல் மக்களின் தலைமகன்களை அற்புதமாய்க் காப்பாற்றியதால், அவர்களை ஆண்டவருக்கென அர்ப்பணிக்கும் வழக்கம் ஏற்பட்டது (விப 13: 2, 12-15).

இயேசு படைப்பு அனைத்திலும் தலைப்பேறு (கொலோ 1:15). அதனால் அவருடைய பெற்றோர் அவரைக் கோயிலில் அர்ப்பணிகின்றனர். இயேசுவை அவருடைய பெற்றோர் கோயிலுக்குக் கொண்டு வருவது, இறைவாக்கினர் மலாக்கி நூலிலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் சொல்லப்படுகின்ற, “நீங்கள் ஆவலுடன் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோயிலுக்கு வருவார்” என்ற இறைவார்த்தையை நிறைவுசெய்கின்றது. மேலும், இயேசுவின் பெற்றோர் அவரை ஆண்டவருக்கு அர்பணிப்பது, “ஊனும் இரத்தமும் கொண்ட பிள்ளைகளைப் போல் கிறிஸ்துவும் அதே இயல்பில் பங்கு கொண்டார்” என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் இடம்பெறும் வார்த்தைகளை நினைவுபடுத்துகின்றது.

இயேசு கிறிஸ்து கடவுளாக இருந்தபோதும் அவர் மனித இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு அவர் மனித இயல்பில் பங்கு கொண்டதற்குக் காரணம், சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையை வெற்றிகொள்வதற்குத்தான். இயேசு தம் சிலுவைச் சாவின்மூலம் அலகையின்மீது வெற்றிகொண்டார். (1 கொரி 15: 54) மட்டுமல்லாமல், இறந்து உயிர்த்தெழுந்து, தந்தையின் வலப்பக்கம் அமர்ந்து நமக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருக்கின்றார் அல்லது சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்து கொண்டிருக்கின்றார்.

இப்படி மனித இயல்பில் பங்கு கொண்டு, சாவை வெற்றிகொண்டு, பின்னர் தந்தையின் வலப்பக்கம் அமர்ந்து நமக்கு உதவி செய்துகொண்டிருக்கும் இயேசு இம்மண்ணுலகில் வாழ்ந்தபோது, கடவுளுக்கு உகந்தவராய் வாழ்ந்து வந்தார். அதை இன்றைய நற்செய்தி வாசகத்தின் இறுதி இறைவார்த்தை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இயேசு, கடவுளுக்கு உகந்தவராய் வாழ்ந்தார் எனில், திருமுழுக்கின்போது கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாமும் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ வேண்டும். அதைத்தான் இன்று நாம் கொண்டாடும் பெருவிழா நமக்கு நினைவுபடுத்துகின்றது.

கடவுளுக்கு உகந்த வாழ்க்கை எது என்பதை இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 24 நமக்கு எடுத்தியம்புகின்றது. தாவீது மன்னரால் உடன்படிக்கைப் பேழை எருசேலம் திருநகருக்குக் கொண்டு வரப்பட்ட பின்னணியில் பாடப்பட்ட இத்திருப்பாடல் (2சாமு 6: 12-19) கறைபடாத கைகளும், மாசற்ற மனமும், பொய்த்தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர் மட்டுமே படைகளின் ஆண்டவரது இல்லத்திற்குள் நுழைய முடியும் என்கிறது.

Comments are closed.