இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள் 27.01.2024

துயர்நிறை மறையுண்மைகள்.

1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,

இன்று நமது திருச்சபை புனிதர்கள் திமொத்தேயு, தீத்து ஆகியோரை நினைவுகூறுகிறது.

1 திமொ.1:1-ல், ‘விசுவாச அடிப்படையில் என் உண்மையான பிள்ளை’ என திமொத்தேயுவை புனித பவுலடியார் அழைக்கிறார்.

நாம் விசுவாச அடிப்படையில் இறைவனுக்கு உண்மையான பிள்ளைகளாக என்றும் இருக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,

“மாசிதோனியாவிற்கு வந்து சேர்ந்தபோது எங்களிடம் மன அமைதியே இல்லை. வெளியே போராட்டம், உள்ளே அச்சம்; இவ்வாறு எல்லா வகையிலும் துன்புற்றோம். தாழ்ந்தோருக்கு ஆறுதல் அளிக்கும் கடவுள் தீத்துவின் வரவால் எங்களுக்கும் ஆறுதல் அளித்தார்.”- என 2 கொரி. 7: 5-8 -ல் புனித பவுல் கூறுகிறார்.

அன்று தீத்துவின் மூலம் ஆண்டவர் ஆறுதல் அளித்தது போல, ஆதரவற்றோருக்கு நாம் அரணாகவும், ஆறுதலாகவும் என்றும் இருந்திட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,

“அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.

குடும்பங்களில் தேவ அழைத்தல் அதிகம் பெருக வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,

இன்று 75-வது குடியரசு தின விழாவைக் கொண்டாடும் வேளையில், நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் தீய மதவாத சக்திகளை எதிர் கொள்ளும் துணிவினை தூய ஆவியானவர் நமக்குத் தந்தருள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,

வெள்ளிக் கிழமையான இன்று நமது செபம், தபம் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.