திருஅவைச் சட்ட விதிமுறை மாற்றங்கள் வழி அதிகாரப் பகிர்வு

திருவையின் படிநிலை முறைக்கு பங்கம் விளைவிக்காத வகையில், அதேவேளை அதிகாரப் பகிர்வை ஊக்குவிக்கும் நோக்கத்தில் திருஅவைச் சட்ட விதிமுறைகளில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அனைத்து ரீதி வழிப்பாட்டுமுறைகளின் ஆயர் பேரவைகள், துறவற சபைத் தலைவர்கள் என, அவர்களின் மேய்ப்புப்பணி பொறுப்புணர்வுகளையும், ஒன்றிப்பு உணர்வுகளையும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தத் திருத்தங்களைக் கொணர்வதாக, பிப்ரவரி 15, செவ்வாய்க்கிழமையன்று, தன் ‘சுயவிருப்பத்தின்பேரில்’ எனப் பொருள்படும் Moto Proprio அறிக்கையின் துவக்கத்தில் கூறியுள்ளார் திருத்தந்தை

மறைமாவட்டங்களுக்கு இடையேயான குருத்துவப் பயிற்சி இல்லங்களை உருவாக்குவதில் திருஅவையின் அனுமதி, எந்தவொரு  மறைமாவட்டத்தையோ துறவு சபைகளையோ, அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளையோ சாராத அருள்பணியாளர்கள் என்ற ஒரு நிலைக்கு அனுமதியின்மை, கன்னிமை வாழ்வு வாழ விரும்பும் சபைகளுக்குரிய அனுமதி, மறைமாவட்ட அளவில் எனில் ஆயரையும், தேசிய அளவில் எனும்போது ஆயர்பேரவைகளின் அங்கீகாரத்தையும் சார்ந்தது எனவும் உரைக்கிறது திருத்தந்தையின் அறிக்கை.

இறுதிவார்த்தைப்பாடு எடுத்த ஒரு துறவிக்கு அசாதாரண சூழல்களில் வழங்கப்படும் தனி அனுமதிகள், இறுதிவார்த்தைப்பாட்டிற்கு முன்னர், புதுப்பிக்கப்படும் வார்த்தைப்பாடு எடுத்த துறவு சபை அங்கத்தினர், துறவு சபையிலிருந்து வெளியே வர விரும்பும்போது வழங்கப்படும் அனுமதிகள், துறவு சபையிலிருந்து ஒருவரை வெளியேற்றுவதில் அதன் தலைவருக்கும் அவைக்கும் இருக்கும் உரிமை, மற்றும் வெளியேற்றப்படுபவர் முறையிடுவதற்கான உரிமை, மறைக்கல்விப் பாடங்களை வெளியிடுவதில் ஆயர் பேரவைகளின் அதிகாரம், திருப்பலிகளுக்காகப்  பெறும் ஊதியத்தை குறைக்கும் அதிகாரம் எனப் பத்து முக்கியத் தலைப்புகளில் திருத்தங்களையும் விளக்கங்களையும் தன் Moto Proprio அறிக்கையில் முன்வைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.