வாசக மறையுரை (பிப்ரவரி 17)
பொதுக் காலத்தின் ஆறாம் வாரம்
வியாழக்கிழமை
I யாக்கோபு 2: 1-9
II மாற்கு 8: 27-31
“ஆள்பார்த்துச் செயல்படுவது பாவம்”
இயேசு எல்லாரையும் அன்பு செய்கிறார்:
ஸ்டீபன் ஃபண்டர்பர்க் (Stephen Funderburk) என்ற ஆங்கிலக் கவி எழுதிய மிகவும் பிரபலமான ஒரு கவிதை “Jesus Loved Them All”. இக்கவிதை ஃபண்டர்பர்க் காணும் கனவைப் பற்றியது.
ஒருநாள் ஸ்டீபன் ஃபண்டர்பர்க் ஒரு கனவு காண்கிறார். அந்தக் கனவில் விண்ணகத்தில் இயேசு வீற்றிருக்கின்றார். அவருக்கு முன்பாக கறுப்பினத்தவர், வெள்ளையினத்தவர், ஏழைகள், பணக்காரர்கள், மாற்றுத் திறனாளிகள் எனப் பலரும் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் தாங்கள் செய்த நற்செயல்களால் அல்ல; மாறாகக் கடவுளின் அருளாலும் இரக்கத்தாலும் விண்ணகத்திற்கு வந்தவர்கள். அவர்கள் அனைவரையும் இயேசு எந்தவொரு வித்தியாசமும் பார்க்காமல் அன்பு செய்கிறார்.
இக்காட்சி ஸ்டீபன் ஃபண்டர்பர்க்கிற்கு வியப்பைத் தருகின்றது. ‘அது எப்படி இயேசுவால் எல்லாரையும் அன்பு செய்ய முடிகின்றது?” என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, ‘எல்லாரையும் அன்பு செய்வதால்தான் அவர் கடவுளாக இருக்கின்றார்’ என்று அமைதியானார்.
ஸ்டீபன் ஃபண்டர்பர்க் எழுதிய கவிதையின் மூலம், நாம் அறிந்துகொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அதுதான்: இயேசு எல்லாரையும் அன்பு செய்கின்றார் என்பதாகும். இயேசு எல்லாரையும் அன்பு செய்கின்றார் எனில், அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழும் ஒவ்வொருவரும் அவரைப்போன்று ஆள்பார்த்துச் செயல்படாமல், எல்லாரையும் அன்பு செய்யவேண்டும். அது குறித்து இன்றைய இறைவார்த்தை எடுத்துக் கூறுகின்றது. நாம் அதைப் பற்றிச் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஒருவர் சார்ந்திருக்கும் இனம், நாடு, அவரிடம் உள்ள பணம், செல்வாக்கு, அதிகாரம் போன்றவற்றைக் கொண்டு மனிதர்களை மதிப்பிடும் போக்கு இன்றைக்கு நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. யாக்கோபு வாழ்ந்த காலக்கட்டத்திலும் இத்தகைய நிலை இருந்தது. யாக்கோபு இருந்த யூதச் சமூகத்தில் இருந்தவர்கள், ஒருவர் செல்வம் படைத்தவர என்றால், அவருக்கு ஒருவிதமான மதிப்பும், ஒருவர் ஏழை என்றால், அவருக்கு ஒருவிதமான மதிப்பும் தந்துகொண்டிருந்தார்கள். இவ்வாறு அவர்கள் ஆள்பார்த்துச் செயல்பட்டார்கள். இதைப் பார்த்துத்தான் யாக்கோபு, “நீங்கள் ஆள்பார்த்துச் செயல்பட்டால், நீங்கள் செய்வது பாவம்” என்கிறார்.
ஆள்பார்த்துச் செயல்படுவது ஏன் பாவம் எனில், கடவுள் ஆள்பார்த்துச் செயல்படாதவர். ஆகையால், அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழும் எல்லாரையும் அன்புகொண்டு வாழவேண்டும். நற்செய்தியில் இயேசு, எல்லார்மீதும் கொண்ட அன்பின் வெளிப்பாடாக, அவர்களுக்காகப் பாடுகள் பட்டு, இறக்கப்போவதை முன்னறிவிக்கின்றார். இயேசுவுக்கு மக்கள்மீது உண்மையான அன்பு இருந்ததாலேயே அவரால் மக்களுக்காக உயிரைத் தர முடிந்தது. எனவே, நாம் இயேசுவைப் போன்று எல்லாரையும் அன்பு செய்து, ஆள்பார்த்துச் செயல்படாமல் இருப்போம்.
சிந்தனைக்கு:
ஒருவரை உண்மையாய் அன்பு செய்யும் யாரும் அவரது வெளித்தோற்றத்தைப் பார்ப்பதில்லை. வெளித்தோற்றத்தைப் பார்ப்பவர் யாரும் உண்மையாய் அன்பு செய்வதில்லை.
ஒவ்வொருவருக்குள்ளும் தூய ஆவியார் குடிகொண்டிருக்கின்றார் என்பதை உணர்வோமெனில், அடுத்தவரை நாம் இழிவாக நடக்க மாட்டோம்.
மற்றவரைப் புறக்கணிக்கும் யாரையும் கடவுள் புறக்கணித்து விடுவார்
இறைவாக்கு:
‘தீயவர் தம் தீவினையில் சிக்கிக் கொள்வர்; நேர்மையாளரோ மகிழ்ந்து களிகூர்வர்’ (நீமொ 29:6) என்கிறது நீதிமொழிகள் நூல். எனவே, நாம் தீயவராய் அல்லாமல், நேர்மையாளராய் வாழ்ந்து, எல்லாரையும் அன்புசெய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.