சனவரி 25 : நற்செய்தி வாசகம்

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-18
அக்காலத்தில்
இயேசு பதினொருவருக்கும் தோன்றிக் கூறியது: “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.
நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————–
“கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்கள் ஆவோம்”
பொதுக்காலத்தின் மூன்றாம் வாரம் செவ்வாய்க்கிழமை
I 2சாமுவேல் 6:12-15, 17-19
II மாற்கு 3:31-35
“கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்கள் ஆவோம்”
கேட்டார்; அதன்படி நடந்தார்:
நகரில் இருந்த பெரிய கிறிஸ்தவக் கோயில் அது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் அந்த வழியாகப் போன ஓர் இளம்பெண், ‘ஞாயிறுதோறும் இந்தக் கோயிலில் அப்படி என்னதான் நடக்கின்றது; அதையும் பார்த்துவிடுவோம்’ என்று ஆர்வமிகுதியால் கோயிலுக்கு உள்ளே சென்றாள். அவள் கோயிலுக்கு உள்ளே சென்ற நேரம், அருள்பணியாளர் மறையுரை ஆற்றிக்கொண்டிருந்தார். அந்த மறையுரை அவருக்கு மிகவும் பிடித்துப்போகவே அவள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டாள். மற்றொரு நாளில் கடவுளின் வார்த்தையை அவரைப் பற்றி அறியாத மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற தூண்டுதல் அவளுக்கு ஏற்பட்டதும், அவள் அதைச் செயல்படுத்த முடிவு செய்தாள்.
இதை அறிந்த அவளுடைய பெற்றோர் அதிர்ந்து போயினர். ஏனெனில், அவளுடைய குடும்பம் பிற சமயத்தைச் சார்ந்தது; மிகவும் வசதியானது. அதைவிடவும் அவள் ஒருவருக்கு மண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாள். இந்நிலையில் அவளுடைய எண்ணத்தை மாற்றுவதற்கு அவளுடைய பெற்றோரும், அவளுக்கு மண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த இளைஞனும் எவ்வளவோ முயற்சி செய்தார்கள். அப்பொழுதும் அவள் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், அவளுக்கு மண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த இளைஞன, “எல்லாவற்றையும் விட இயேசுதான் முக்கியம் என்று இவள் நினைக்கின்றாள் எனில், அந்த இயேசுவுக்காக நானும் எனது வாழ்வை அர்ப்பணிக்கின்றேன்” என்றான். இதற்குப் பிறகு இருவரும் மணமுடித்து, ஒன்றிணைந்து சீனாவிற்குச் சென்று, நற்செய்தி அறிவித்தனர்.
ஆம், இந்த நிகழ்வில் வரும் இளம்பெண் கடவுளின் வார்த்தையைக் கேட்டது மட்டுமல்லாமல், அவரது திருவுளத்தின்படி நடந்து, சீனாவிற்குச் சென்று நற்செய்தி அறிவித்து இயேசுவின் உண்மையான உறவினர் ஆனார். இன்றைய இறைவார்த்தை யார் உண்மையான உறவினர் என்ற கேள்விக்குப் பதில் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இறையாட்சிப் பணிக்குத் தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்த பிறகு இயேசு குடும்பம், இரத்த உறவுகள் போன்ற குறுகிய வட்டத்தைக் கடந்து செயல்பட்டார். இதனால் அவருக்கு கடவுளின் திருவுளத்தின்படி நடக்கின்ற ஒவ்வொருவரும் அவரது தாயாகவும் சகோதரர் சகோதரிகளும் ஆனார்கள்.
நற்செய்தியில் ஒருவர், “அதோ, உம் தாயும் சகோதர்களும் சகோதரிகளும் வெளியே நின்றுகொண்டு உம்மைத் தேடுகிறார்கள்” என்று சொல்லும்போது, இயேசு, “கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்கிறார். இயேசு சொல்லும் இவ்வார்த்தைகளின் மூலம் யாரெல்லாம் கடவுளின் திருவுளத்தின் படி நடக்கின்றாரோ, அவர் இயேசுவின் தாயும் சகோதர் சகோதரியும் ஆவார் என்பது தெளிவாகின்றது.
அதே நேரத்தில் யாரெல்லாம் கடவுளின் திருவுளத்தின்படி நடக்கவில்லையோ, அவர் இயேசுவின் இரத்த உறவினராக இருந்தாலும், இயேசுவுக்கு யாரோ ஒருவர்தான். இன்றைய நற்செய்திக்கு முந்தைய பகுதியில், பரிசேயர் இயேசுவைப் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகின்றார் என்று குறைகூறியிருப்பார்கள். பரிசேயர்கள், இனத்தின் அடிப்படையில் யூதர்கள்தான் என்றாலும், அவர்கள் கடவுளின் திருவுளத்தின் எதிராக நடந்ததால் அவர்கள் யாரோ போல் ஆகின்றார்கள். இதற்கு முற்றிலும் மாறாக, இன்றைய முதல் வாசகத்தில் தாவீது கடவுளின் பேழை ஒபேது – ஏதோமின் இல்லத்திலிருந்து கடவுளின் நகரான எருசலேமிற்குக் கொண்டு வருகின்றார். இவ்வாறு அவர் கடவுளின் திருவுளத்தின் படி நடக்கின்றார். கடவுளுக்கு மிக நெருக்கமானவராகின்றார்.
எனவே, நாம் யாராக இருந்தாலும் கடவுளின் திருவுளத்தின்படி நடப்போம். அதுவே நம்மைக் கடவுளின் உண்மையான உறவினராக்கும்.
சிந்தனைக்கு:
 ஒருவர் எங்கே பிறந்தார் என்பது முக்கியமல்ல, எப்படி வாழ்ந்தார் என்பது முக்கியம்.
 கடவுளின் உண்மையான உறவினராவதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
 கடவுளின் திருவுளத்தின்படி நடப்பதில் மரியா நமக்குச் சிறந்த எடுத்துக் காட்டு
இறைவாக்கு:
‘என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்’ (திபா 40:8) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் கடவுளின் திருவுளத்தை மகிழ்ச்சியோடு நிறைவேற்றி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.