#வாசக_மறையுரை (ஜனவரி 25)

இத்தனை ஆண்டுகளும் குறைதான் கூறியிருக்கிறாய்:
துறவற வாழ்க்கை வாழ விரும்பிய இளைஞன் ஒருவன் ஒரு துறவு மடத்திற்குச் சென்று, அங்கிருந்த தலைமைத் துறவியிடம் தன்னைச் சீடராக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டான். தலைமைத் துறவி அவனிடம், “ஓராண்டில் இரண்டு வார்த்தைகள்தான் பேசவேண்டும். இந்த நிபந்தனைக்கு நீ கட்டுப்பட்டால் இங்கிருக்கலாம்” என்றார். இளைஞனும் அதற்குச் சரியென்று ஒப்புக்கொண்டு, அங்கே தங்கி, பயிற்சி பெறத் தொடங்கினான்.
நாள்கள் வேகமாக ஓடின. முதல் ஆண்டு முடிந்ததும் அவன் தலைமைத் துறவியிடம் வந்து, “படுக்கை சரியில்லை” என்றான். இரண்டாமாண்டு முடிவில், “சாப்பாடு சகிக்கலை” என்றான். மூன்றாம் முடிவில், “இங்கிருந்து கிளம்புகின்றேன்” என்றான். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந் தலைமைத் துறவி, “இத்தனை ஆண்டுகளும் நீ குறை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கின்றாய். இப்படிப்பட்ட நீ உன் விருப்பம் போல் இங்கிருந்து கிளம்பலாம்” என்றார்.
ஆம், பலருக்கு இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞனைப் போன்று ஏதாவது குறைகூறிக் கொண்டே இருக்கவேண்டும்! நற்செய்தியில், பரிசேயர் இயேசுவைப் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுவதாகக் குறைகூறுகின்றார்கள். இதற்கு இயேசுவின் மறுமொழி என்னவாக இருந்தது என்பது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
தூய ஆவியாரால் நிரப்பட்ட இயேசு (திப 10:38), இறையாட்சிப் பணியை மிகத் திறம்படச் செய்துவந்தார். இதைப் பார்த்துவிட்டு பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். பரிசேயர்களோ அவர்மீது கொண்ட காழ்ப்புணர்வினால் அவர் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார் என்று குறை கூறுகின்றார்கள்.
இன்றைக்கு இருக்கின்ற பலரும் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு என்னவெனில், ஒருவரோடு போட்டிபோட முடியாவிட்டால், உடனே அவரைப் பற்றி அவதூறைப் பரப்புவதுதான். பரிசேயர்களால் இயேசுவோடு போட்டிபோட முடியவில்லை என்பதால் அல்லது அவரது வளர்ச்சி அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அவர்கள் இயேசுவைப் பற்றி இப்படித் தவறாகப் பேசுகிறார்கள். அப்போதுதான் இயேசு அவர்களிடம், “வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டிற்குள் நுழைய முடியாது…” என்ற உருவகத்தைக் கூறி, சாத்தானைத் தான் வென்றுவிட்டதால், தான் சாத்தனைவிடப் பெரியவர் என்று கூறுகின்றார். இதை வேறு வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால், இயேசுவோடு கடவுள் உடனிருந்தார். அதனால்தான் அவரால் சாத்தானை வெல்ல முடிந்தது என்று சொல்லலாம்.
முதல் வாசகத்தில் படைகளின் கடவுளாகிய தாவீதோடு இருந்தார் என்று வாசிக்கின்றோம். கடவுள் தாவீதோடு இருந்தால்தான் அவரால் எதிரிகளை வெற்றி கொள்ள முடிந்தது. ஆகவே, உண்மையை அறியாமல் பரிசேயர்கள் எப்படி இயேசுவைக் குறைகூறினார்களோ, அப்படி நாம் மற்றவர்களைக் குறை கூறாமல், அவர்களைப் பற்றி நல்லவற்றைப் பேசும் நல்ல மனம் பெறுவோம்.
சிந்தனைக்கு:
 குறை காண்போரின் வாழ்வில் நிம்மதி இருப்பதில்லை
 கடவுளைத் தவிர யாருக்கும் ஒருவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அடுத்தவரைப் பற்றிக் குறைகூறாதிருப்போம்.
 நிறைகளை மட்டும் காண்போர் நிறைவான வாழ்க்கை வாழ்கின்றனர்.
இறைவாக்கு:
‘பிறர் உங்களைவிட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள்’ (உரோ 12:10) என்பார் புனித பவுல். எனவே, நாம் குறைகளைப் பார்க்காமல், மற்றவர் நம்மைவிட மதிப்புக்குரியவர் என எண்ணி, நல்லவற்றைப் பார்த்து, நல்லவற்றைச் செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.