இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றைய முதல் வாசகம் எடுக்கப்பட்ட புனித யோவான் எழுதிய முதல் திருமுகத்தில்
“கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்து கொள்கிறோம்.” என கூறப்பட்டுள்ளது.
தூய ஆவியின் வழிநடத்துதல் நமக்கு நாள் முழுவதும் இருக்க, பரிசுத்த ஆவி செபத்தை பலமுறை மனதிற்குள் செபிக்கும் பழக்கத்தை நாம் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
“பிள்ளைகளே, நீங்கள் கடவுளைச் சார்ந்தவர்கள். நீங்கள் அந்தப் போலி இறைவாக்கினர்களை வென்று விட்டீர்கள்; அவர்கள் உலகைச் சார்ந்தவர்கள். எனவேதான் உலகு சார்ந்தவற்றையே பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிசாய்க்கிறது.” என முதல் வாசகத்தில் புனித யோவான் கூறுகிறார்.
தம்மை பரிசுத்தவான்களாகவும் மற்றவர்களை பாவிகளாகவும் கருதும் போலி இறைவாக்கினர்கள் உலகு சார்ந்தவற்றை மட்டும் பேசுவர். கடவுளைச் சார்ந்த நாம் கடவுள் பணித்தவற்றில் மட்டும் கவனம் செலுத்த இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
இன்றைய நற்செய்தி வாசகத்தில், “பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வருந்திய நோயாளர், பேய் பிடித்தோர், மதிமயங்கியோர், முடக்குவாதமுற்றோர் ஆகிய அனைவரும் அவரிடம் அழைத்து வரப்பட்டனர். அவர் அவர்களைக் குணமாக்கினார்.” என மத்தேயு கூறுகிறார்.
அழைத்து வரப்பட்ட அனைவரும் விசுவாசத்தில் நிலைத்திருந்து குணம் பெற்றனர். நோயுற்ற அனைவரும் குணம் பெற விசுவாசத்தில் நிலைத்து நிற்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை மக்களை அதிகம் பாதிக்காமல் இருக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும் இறைவனின் மோட்ச பாக்கியத்தை விரைவில் அடைய வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.