சனவரி 4 : நற்செய்தி வாசகம்

இயேசு அப்பம் பெருகச் செய்து, தாம் இறைவாக்கினர் எனக் காட்டுகிறார்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 34-44
அக்காலத்தில்
இயேசு படகிலிருந்து கலிலேயா கடற்கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். இதற்குள் நெடு நேரமாகிவிடவே, சீடர் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, ஏற்கெனவே நெடுநேரம் ஆகிவிட்டது. சுற்றிலுமுள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது அவர்களே வாங்கிக் கொள்ளுமாறு நீர் மக்களை அனுப்பிவிடும்” என்றனர்.
அவர் அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்று பதிலளித்தார். அவர்கள், “நாங்கள் போய் இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கி இவர்களுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும் என்கிறீரா?” என்று கேட்டார்கள். அப்பொழுது அவர், “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள்” என்று கூற, அவர்களும் பார்த்துவிட்டு, “ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன” என்றார்கள்.
அவர் எல்லாரையும் பசும்புல் தரையில் அமரச் செய்யும்படி சீடர்களைப் பணித்தார். மக்கள் நூறு பேராகவும், ஐம்பது பேராகவும் வரிசை வரிசையாய் அமர்ந்தனர். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார். அவ்வாறே அந்த இரு மீன்களையும் எல்லாருக்கும் பகிர்ந்தளித்தார். அனைவரும் வயிறார உண்டனர். பின் எஞ்சிய அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். அப்பம் உண்ட ஆண்களின் தொகை ஐயாயிரம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————————
“கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்”
திருக்காட்சி விழாவிற்குப் பின் வரும் செவ்வாய்க்கிழமை
I 1யோவான் 4: 7-10
II மாற்கு 6: 34-44
“கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்”
குழதைக்காக தன்னையே தந்தவர்:
அந்தத் தாய்க்கு மூன்று குழந்தைகள். அவர் தன் மூன்று குழந்தைகளை எந்தளவுக்கு அன்பு செய்தாரோ, அந்தளவுக்கு அவர் ஏழை எளியவரை அன்பு செய்து வந்தார். புனித வின்சென்ட் தெ பவுல் சபையில் உறுப்பினரான இருந்த அவர் இறையன்புக்கும் பிறரன்புக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வந்தார்.
இந்நிலையில் அவர் கருவுற்றார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்துப் பார்த்துவிட்டு, “நீங்கள் கருவுற்று இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. அதனால் கருவை உடனே கலைத்துவிடுங்கள். இல்லையென்றால் உங்களுக்கு வந்திருக்கும் நோயினால் உங்கள் ஆபத்து ஏற்படும்” என்று எச்சரித்தார்கள். இதற்கு அந்தத் தாய், “என்னுடைய உயிர் போனாலும் பரவாயில்லை; நான் என்னுடைய வயற்றில் வளரும் கருவை ஒருபோதும் கலைக்க மாட்டேன்” என்று தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார்.
இதையடுத்து 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் நாள் அவர் தனது நான்காவது குழந்தையைப் பெற்றெடுத்தார். மறுவாரத்திலேயே அதாவது, ஏப்ரல் 28 ஆம் நாள் இறந்து போனார்.
ஆம், வயிற்றில் வரும் கருவைக் கலைத்துவிட்டு, தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்றொரு நிலை வந்தபோது, தன்னுடைய உயிரை விடவும் வயிற்றில் வரும் குழந்தையே மேலானது என்று அதற்காகத் தன்னுடைய இன்னுயிரைத் தந்தார் அந்தத் தாய். இவர் இப்படிப் பிறரன்புக்கும் இறையன்பும் எடுத்துக்காட்டாக விளங்கியதால், 2004 ஆம் ஆண்டு, மே 16 ஆம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இவருக்குப் புனிதர் பட்டம் அளித்தார். அவர்தான் புனித கியான்னா பிரெட்டா மொல்லா (St. Ginna Beretta Molla)
அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள் என்று யோவான் இன்றைய முதல்வாசகத்தில் கூறுகின்றார். ஏழை எளியவரை அன்பு செய்து, தன் குழந்தைக்காகத் தன்னையே தந்தவர் என்ற அடிப்படையில் கியன்னா பிரட்டா மொல்லாவைக் கடவுளிடமிருந்து பிறந்தவர் என்று உறுதியாகச் சொல்லலாம். நாம் கடவுளிருந்து பிறந்தவர்கள் என்பதை நிரூபிக்க என்ன செய்வது என்று இப்போது சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
“ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக” என்ற வார்த்தைகளுடன் தொடங்கும் இன்றைய முதல் வாசகம், “அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கின்றார்” என்கிற வரிகளில் அதன் உச்சத்தை அடைகின்றது.
கடவுள் அன்பாய் இருக்கின்றார் என்பதற்குச் சான்றாக இருக்கின்றது இன்றைய நற்செய்தி வாசகம். நற்செய்தியில் இயேசு, ஆயனில்லா ஆடுகள்போன்று இருந்த மக்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பிக்கின்றார். அத்தோடு அவர் நின்றுவிடாமல், பசியோடு இருந்த அவர்களுக்கு உணவளிக்கின்றார். இயேசு பகிர்ந்தளித்த அல்லது பலுகச் செய்த அப்பங்களை உண்ட ஆண்களின் தொகை மட்டும் ஐயாயிரம் என்றால், பெண்கள் மற்றும் குழந்தைகளைச் சேர்த்தால் எப்படியும் இருபதாயிரம் பேர் வரலாம். அத்தனை பேருக்கும் இயேசு அன்போடு உணவளிக்கின்றார்.

Comments are closed.