நம் உலகில் அனைத்து மக்களுக்கும் மாண்புடையத் தொழில் தேவை!

இவ்வுலகிற்குப் புதுப்பிக்கப்பட்ட நமது அர்ப்பணிப்புத் தேவை என்றும், மனித சமூகத்திற்குள் படைப்பின் பராமரிப்பு மற்றும் ஒன்றிப்பு மற்றும் ஒருவருக்கொருவர்மீதான பாதுகாப்பிற்காக, பழைய மற்றும் இளைய தலைமுறையினரை ஒருங்கிணைக்கக்கூடிய ஒரு புதிய சமூக ஒப்பந்தம் நமக்குத் தேவை என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 8, இப்புதனன்று, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்திற்கான திருப்பீடத் துறை ஏற்பாடு செய்துள்ள “கவனிப்பு என்பது வேலை, வேலை என்பது கவனிப்பு” என்ற  தலைப்பில் நிகழும் கலந்துரையாடலின் பங்கேற்பாளர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு குறிப்பிட்டார் திருத்தந்தை.

கடந்த ஆறு ஆண்டுகளாக, சிந்தனை, உரையாடல் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நீங்கள், நமது உலகத்தின் அனைத்து மக்களுக்கும் நீதியான, நியாயமான மற்றும் மாண்புக்குரியத் தொழிலுக்கான புதுமையான செயல் மாதிரிகளை முன்மொழிந்துள்ளீர்கள் என்றும் அவர்களைப் பாராட்டினார் திருத்தந்தை.

இந்தச் செயல் மாதிரிகள் வழியாக, ஒட்டுமொத்தச் சமுதாயத்திற்கும் முக்கியமான ஐந்து விடயங்களை நீங்கள் அடையாளம் கண்டுள்ளீர்கள் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவற்றைக் குறித்து அவர்களுக்குச் சுருக்கமாக விளக்கிக் கூறினார்.

முதலாவதாக, மாண்புடையத் தொழில் மற்றும் சுரங்கத் தொழில்கள் பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை, பணிச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் ஆகியவை இணைக்கப்பட வேண்டியது அவசியம் என்றும், சம்பந்தப்பட்டவர்களின் உடல் மற்றும் மன நலம் மற்றும் அவர்களின் பாதுகாப்புக் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இரண்டாவதாக, மாண்புடையத் தொழில் மற்றும் உணவுப் பாதுகாப்புக் குறித்து பேசிய திருத்தந்தை, 2023-ஆம் ஆண்டிற்குள் 59 நாடுகளிலும், மற்றும் பல நிலப்பகுதிகளிலும் 28 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படுவர் என்றும்,  அதனை சரிசெய்ய அவசர நிவாரண முயற்சிகள் தேவைப்படுகின்றன என்றும் கூறிய உலகளாவிய உணவு நெருக்கடி (Global Food Crisis) அறிக்கைச் சுட்டிக்காட்டி தனது மேலான கருத்துக்களை விவரித்தார்.

இதனைத் தொடர்ந்து மாண்புடையத் தொழிலுக்கும் இடம்பெயர்வுக்கும் இடையிலான உறவு, மாண்புடையத் தொழிலுக்கும் சமூக நீதிக்கும் இடையிலான உறவு மற்றும், மாண்புடையத் தொழில் மற்றும் நீதியான சுற்றுச்சூழல் மாற்றம் குறித்தும் தனது சிந்தனைகளை அவர்களுடன் விரிவாகப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.

Comments are closed.