மற்றவர்களை நோக்கி, கரங்களை விரித்தவண்ணம் செல்வோம்

பிரேசில் நாட்டின் Rio de Janeiro நகர் Corcovado மலையில் விரிந்த கரங்களுடன் மீட்பர் இயேசு திருவுருவச் சிலை அமைக்கப்பட்டதன் 90வது ஆண்டு நிறைவையொட்டி, அந்நாட்டு தலத்திருஅவைக்கு சிறப்புச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கரங்களை விரித்தவண்ணம் மலைமேல் நிற்கும் இயேசு மீட்பரின் திருஉருவச்சிலை சொல்லித்தரும் பாடம், நாமும் மற்றவர்களை நோக்கி, கரங்களை விரித்தவண்ணம் செல்லவேண்டுமேயொழிய, கரங்களை இறுக்கக் கட்டியவர்களாக அல்ல, என தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களால், பிரேசில் நாட்டு தலத்திருஅவைக்கு, குறிப்பாக Rio de Janeiro நகர் மக்களுக்கென அனுப்பப்பட்டுள்ள திருத்தந்தையின் இச்செய்தி, ஒப்புரவு, மற்றும் உடன்பிறந்த நிலையின் முக்கியத்துவத்தை  வலியுறுத்துவதாக உள்ளது.

எவரும் கைவிடப்பட்டவர்களாக, புறக்கணிக்கப்பட்டவர்களாக, மறக்கப்பட்டவர்களாக உணரப்படாத, நீதியான ஒரு சமூகத்தை ஒவ்வொரு நகரிலும், உலகம் முழுவதும் கட்டியெழுப்ப, விரிந்த கரங்களுடன், இயேசு, உடன்பிறந்த நிலைக்கு அழைப்பு விடுக்கிறார் என உரைக்கிறது, திருத்தந்தையின் செய்தி.

ஒவ்வொருவரும் தாங்கள் எந்த நிலையில் இருந்தாலும், உடன்பிறந்த நிலையைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கரங்களைக் கட்டியவராக அல்ல, மாறாக, ஒவ்வொருவரையும் நோக்கி கரங்களை விரித்தவர்களாக செயல்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்.

உடன்பிறந்த நிலையை கட்டியெழுப்புவதற்கு, முதலில், ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் தேவை என்பதையும் வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னலம் நிரம்பிய பாராமுகம், மற்றும், வன்முறை எதிர்ப்புகளையும் தாண்டி, மக்களிடையேயும் தலைமுறைகளுக்கிடையேயும் உரையாடல்களை ஊக்குவிப்போம் எனவும் விண்ணப்பித்துள்ளார்.

இயேசுவோடு நெருக்கமாக இருக்கும்போது, அது மற்றவர்களுடன் நாம் நெருக்கமாக இருக்க உதவுகிறது எனக்கூறி, அன்னைமரியாவின் பரிந்துரைகளை வேண்டி, தன் செய்தியை நிறைவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

Comments are closed.