இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
செபமாலை மாதமான இம்மாதத்தின் 14-ஆம் நாளான இன்று, கடவுளைப் போல இரக்கம் மிகுந்தவர்களாகவும், அன்புமிக்கவர்களாக இருக்க பிராத்திப்போம். இதன் மூலம்
நாம் அனைவரும் இறையாட்சிக்குள் பிரவேசிக்க இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
இன்றைய திருப்பலி முதல் வாசகத்தில், ‘கடவுள் யூதருக்கு மட்டுமா கடவுள்? பிற இனத்தாருக்கும் அவர் கடவுள் அல்லவா? ஆம், பிற இனத்தாருக்கும் அவரே கடவுள். ஏனெனில் கடவுள் ஒருவரே.” என திருத்தூதர் பவுல் கூறுகிறார்.
அனைத்து இனத்தவருக்கும், மதத்தினருக்கும் நம் இறைவனே கடவுளாவார். பிற மதத்தினர் அனைவரும் தங்களது இறுதிக்காலத்துக்கு முன்னரே நம் இறைவனைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்ள வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
குடும்ப அமைதி, சமாதானம், குடும்ப முன்னேற்றம் ஆகியவற்றிற்கு குடும்ப செபமாலை மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து அனுதினமும் குடும்ப செபமாலையை தொய்வில்லாமல் இல்லங்களில் செபிக்க இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
மறைசாட்சியாக மரித்த திருத்தந்தையும், இன்றைய புனிதருமான முதலாம் கலிஸ்துவை நம் திருச்சபைக்குத் தந்த நம் இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.