நோயுற்றோரையும், நோய்களையும் புரிந்துகொண்டு செயல்படுங்கள்

பொதுநலன் மற்றும் சமூகவளர்ச்சி குறித்த உண்மை நிலைகளை ஆராயும் நோக்கத்தில், இத்தாலியின் மருத்துவமனை மருந்தகங்கள், மற்றும், மருந்து தயாரிப்புப் பணிகளின் கூட்டமைப்பினர் நடத்திய தேசியக் கருத்தரங்கில் கலந்துகொண்டோருக்கு, அவர்களின் அர்ப்பண வாழ்விற்கு தேவையான மூன்று அறிவுரைகளை வழங்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அர்ப்பணத்தில் தொடர்ந்து செயல்பட, மூன்று வழிகள்

கோவிட் பெருந்தொற்றால், பல நலவாழ்வுத் திட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் இடம்பெற்றுவருவதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, மருத்துவமனைகளில் மருந்துவழங்கும் பணியாளர்கள், தங்கள் அர்ப்பணத்தில் தொடர்ந்து செயல்பட, மூன்று வழிகளை முன்வைக்க விரும்புவதாக தெரிவித்து, முதல் வழியை, சமாரியர் உவமையிலிருந்து எடுத்துக்கொள்ளலாம் என உரைத்தார்.

பொறுமை, விடாமுயற்சி, நுணுக்கமான செயல்பாடு ஆகிய பண்புகளுடன் இடம்பெறும் மருந்தகப் பணியாளர்களின் சேவை, இறைவேண்டுதல், மற்றும் அன்புடன் இணையும்போது, ஒவ்வோர் நாள் வாழ்விலும் புனிதத்துவத்தை பிறப்பிக்கிறது என்பதை, அவர்களுக்குரிய முதல் பாதையாக எடுத்துரைத்தார் திருத்தந்தை.

அக்கறையுடன் செயல்படுபவர்களாக…

மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மருந்துக்களை வழங்கும் பணியில் ஈடுபடுவோர், ஆய்வுகள், சோதனைகள் போன்றவற்றில் ஈடுபடுவதோடு, நோயுற்றோரையும் அவர்களின் நோய்களையும் புரிந்துகொண்டு, அக்கறையுடன் செயல்படுபவர்களாக உள்ளனர் என்பதை, தன் இரண்டாவது பாதையாக எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூன்றாவதாக, இவர்கள், பணியின் நன்னெறி கோட்பாடு குறித்து எடுத்துரைத்தார்.

ஒரு நோயாளியின் உயிரைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் மருந்துகளை வழங்கும் பணியாளர்கள், எப்போதும் கவனமுடன் செயல்படவேண்டியவர்களாக உள்ளனர், அதேவேளை, பல வேளைகளில், தங்களுக்காக போராட இயலாத எளிய மக்களுக்கு எதிராக நிகழும் அநீதி நிலைகளை எதிர்த்து நிற்கவேண்டிய சுழலும் அவர்களுக்கு உருவாகலாம் என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

கருக்கலைத்தல், உண்மையிலயே ஒரு கொலை

குறிப்பாக, கருக்கலைத்தல் நிலைகள் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, கருச்சிதைவை மேற்கொள்வது உண்மையிலயே ஒரு கொலை என்பதால் அதில் உடந்தையாக இருப்பது அனுமதிக்கப்படாதது என்பதையும், கருக்கலைத்தல் என்பது எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்வாக முடியாது என்பதையும் எடுத்தியம்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சமூக நீதி பற்றியும் எடுத்துரைத்த திருத்தந்தை, இன்றைய சமுதாயத்தில், பயன்படுத்தி தூக்கியெறியும் கலாச்சாரம் பெருகியுள்ளதையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் தேவையையும், அறிவியலுக்கும், மனச்சான்றிற்கும் விசுவாசமாக இருக்கவேண்டிய தேவையையும், சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் இறுதி அறிவுரையாக, மருத்துவப்பணியாளர்கள் அனைவரும், ஒவ்வொருநாளும், குறைந்தது, 10 நிமிடங்கள் விவிலியத்தை வாசிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Comments are closed.