பொதுக்காலம் இருபத்து ஏழாம் ஞாயிறு (அக்டோபர் 03)

I தொடக்க நூல் 2: 18-24
II எபிரேயர் 2: 9-11
III மாற்கு 10: 2-16
“இருவரும் ஒரே உடலாய் இருப்பர்”
நிகழ்வு
“என் கணவருடைய போக்கு எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை; அவருடைய நடவடிக்கைகள் நாளுக்கு நாள் எல்லைமீறிப் போகின்றன. அதனால் நான் அவரை எந்தளவுக்குக் காயப்படுத்த முடியுமோ, அந்தளவுக்குக் காயப்படுத்திவிட்டு, அவரை விவாகரத்து செய்ய வேண்டும்” என்று, அமெரிக்காவில் இருந்த ஒரு பிரபல மனநல மருத்துவரிடம் (ஜார்ஜ் டபிள்யூ. கிரேன்) முறையிட்டுக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.
“அம்மா! நீங்கள் சொல்வதுபோல் செய்துவிடலாம். அதற்கு முன்பாக, நான் சொல்வதுபோல் நீங்கள் செய்யுங்கள். அப்படிச் செய்தால் உங்கள் கணவரை எந்தளவுக்குக் காயப்படுத்த முடியுமோ, அந்தளவுக்குக் காயப்படுத்தலாம்” என்று சொல்லிவிட்டு, அந்த மனநல மருத்துவர் தொடர்ந்து பேசினார்: “நீங்கள் உங்கள் கணவரை முழுமையாக அன்பு செய்வதுபோல், அன்பு செய்யுங்கள். எப்பொழுது அவர் உங்களை முழுமையாக அன்பு செய்வது போல் உங்களுக்குத் தெரிகிறதோ, அப்பொழுது நீங்கள் அவரை விவாகரித்து செய்துவிடுங்கள். அப்படிச் செய்தால் நீங்கள் அவரை மிகவும் காயப்படுத்தலாம்.”
மனநல மருத்துவர் இவ்வாறு சொன்னதற்குச் சரி என்று ஒப்புக்கொண்டு, தன் வீட்டிற்குத் திரும்பிப் போனார் அந்த பெண்மணி. போனவர் ஒருசில மாதங்கள் கழித்து மனநல மருத்துவரிடம் திரும்பி வந்தார். அவருடைய முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிவதைப் பார்த்த மனநல மருத்துவர், “நீங்கள் விரும்பியது போல், உங்கள் கணவரை விவாகரத்து செய்துவிட்டீர்களா?” என்று ஆர்வமாய்க் கேட்டார். “இல்லை” என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்த அந்தப் பெண்மணி, “நான் என் கணவரை முழுமையாக அன்பு செய்வதுபோல் அன்பு செய்கையில், அவர் என்னை முழுமையாக அன்புசெய்யத் தொடங்கிவிட்டார். அதனால் நான் அவரை உண்மையாக அன்பு செய்வதால், விவாகரித்து என்ற பேச்சக்கே இடமில்லாமல் போய்விட்டது” என்றார்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த மனநல மருத்துவர், “கணவன் மனைவிடம் உண்மையான அன்பு குடிகொண்டிருக்கும்போது, நீங்கள் சொல்வது போன்று விவகாரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று சொல்லி முடிந்தார்.
ஆம், திருமண வாழ்வில் கணவனும் மனைவியும் ஓருடலாய் வாழ்ந்து, ஒருவர் மற்றவரிடம் உண்மையான அன்புகாட்டினால் விவகாரத்து அல்லது மணமுறிவு என்ற பேச்சுக்கு இடமில்லை. இதையே இந்த நிகழ்வும், பொதுக்காலத்தின் இருபத்து ஏழாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு உணர்த்துகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.
கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?
இந்த கேள்வியோடுதான் இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்குகின்றது. இயேசு இக்கேள்விக்கு என்ன பதிலளித்தார் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்பதற்கு முன், இக்கேள்வியை யார் கேட்டார், எந்த இடத்தில் வைத்து இக்கேள்வி கேட்கப்பட்டது? என்பன பற்றித் தெரிந்துகொள்வது நல்லது. இயேசு கலிலேயாவைவிட்டு, யூதேயாப் பகுதிகளுக்கு வருகின்றார் (மத் 19: 1). இந்தப் பகுதியைப் ஆண்டுவந்தவன் வேறு யாருமல்லன், தன் சகோதரன் பிலிப்பின் மனைவியோடு வாழ்ந்து வந்த ஏரோது அந்திப்பா என்பவன்தான். இவன், “நீர் உன் சகோதரனின் மனைவியை வைத்திருப்பது முறையல்ல” (மத் 14: 4) என்று சொன்ன திருமுழுக்கு யோவானைக் கொன்றுபோட்டவன். ஆகவே, முறையின்றி வாழும் ஏரோது அந்திப்பாவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் மணவிலக்கு பற்றிய கேள்வியை இயேசுவிடம் கேட்டால், அவர் ஏதாவது சொல்வார். அதைக் கொண்டே, அவரைத் தீர்த்துக் கட்டிவிடலாம் என்ற எண்ணத்தோடு பரிசேயர்கள் இயேசுவிடம் இந்தக் கேள்வியைக் கேட்கின்றார்கள்.
இதில் இன்னொரு செய்தியை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். முதல் நூற்றாண்டில் யூதர்கள் நடுவில் மணவிலக்கு குறித்து இருவேறு கருத்துகள் நிலவின. மணவிலக்கு செய்ய எந்தவொரு காரணமும் தேவையில்லை என்று ஒருபிரிவினரும், தகுந்த காரணமின்றி மணவிலக்கு செய்யக்கூடாது என்று இன்னொரு பிரிவினரும் சொல்லி வந்தனர். இந்நிலையில் இயேசு இரண்டு கருத்துகளில் எந்தக் கருத்தைத் சொன்னாலும், அவரைச் சிக்கலில் மாட்டிவிடலாம் என்ற தந்திரத்தோடு பரிசேயர்கள் இயேசுவிடம் இக்கேள்வி கேட்கின்றபோது, அவர் அவர்களிடம், “மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?” என்று கேள்வியை அவர்களிடம் கேட்கின்றார்.
தன்னிடம் கேள்வி கேட்பவரிடம் திருப்பிக் கேள்விகேட்டுப் பதிலளிப்பது இயேசுவின் பாணி. கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது தொடர்பாகப் பரிசேயர்கள் கேள்வி கேட்டதும், இயேசு பதிலுக்கு ஒரு கேள்வியை கேட்க, அப்பொழுது பரிசேயர்களிடமிருந்து வரும் பதில்தான், “மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்” (இச 24: 1-4) என்பதாகும். இங்கே, எந்தவொரு காரணமின்றிக் கடின உள்ளத்தோடு யூதர்கள் தம் மனைவியை விலக்கிவிட்டதாலேயே, மணவிலக்குச் சான்றிதழ் எழுதி, அவரை விலக்கிவிடலாம் என்று மோசே கூறியிருப்பார். இது, தகுந்த காரணம் இல்லாமல் ஒருவர் தன் மனைவியை விலக்கிவிட முடியாது என்பதால், பெண்களுக்கு ஒருவகையில் பாதுகாப்பு அளித்தது. இதைப் பரிசேயர்கள் தங்கள் வசதிக்கேற்றாற்போல் பயன்படுத்தி வந்தார்கள். இதனால் இயேசு மோசேயின் சட்டம் அல்லது கட்டளையைவிட மேலான ஒரு கட்டளையைத் தருகின்றார். அது என்ன என்று பார்ப்போம்.
கணவனும் மனைவியும் ஒன்றித்து, ஒரே உடலாக வாழ விருப்பும் கடவுள்
ஒவ்வொன்றையும் படைத்த பின் நல்லதெனக் கண்ட ஆண்டவர் (தொநூ 1: 31), மனிதனைப் படைத்துவிட்டு, அவன் தனிமையாக இருப்பது நல்லதன்று என்று காண்கின்றார். ஆகவே, அவர் அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன் என்று ஏவாவை உருவாக்குகின்றார். ஏவாவை மனிதன் காணுகின்றபோதுதான், “இவளே என் எலும்பின் எலும்பும் சதையும் சதையும் ஆளவள்” என்கிறான். மேலும் அவன் தன் மனைவியுடன் ஒன்றித்து, ஒரே உடலாய் இருக்கின்றான்.
இந்த உண்மையைப் பரிசேயர்களிடம் எடுத்துக்கூறும் இயேசு, மோசே உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டு மணவிலக்குச் சான்றிதழ் எழுதி, ஒருவரை விலக்கிவிடலாம் என்று சொல்யிருக்கலாம். ஆனால், கடவுள், கணவனும் மனைவியும் ஒன்றித்து, ஒரே உடலாய் வாழவேண்டும் என்றுதான் விரும்புகின்றார் என்று, மணமுறிவு என்பது இறைவனின் விருப்பதற்கு எதிரானது என்று சொல்லாமல் சொல்கின்றார். இதன்மூலம் இயேசு, கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா? என்று பரிசேயர்கள் கேட்ட கேள்விக்குச் சரியான பதிலளிதத்தோடு மட்டுமல்லாமல், இக்கேள்வி மூலம் இயேசுவைச் சூழ்ச்சியால் வீழ்த்தவேண்டும் என்ற அவர்களின் எண்ணத்தையும் அவர் முறியடிக்கின்றார்.
ஒருவர் மற்றவருடைய நலனுக்காகத் துன்பங்களை ஏற்கவேண்டும்
கணவனும் மனைவியும் ஒரே உடலாய், ஒன்றித்து வாழவேண்டும் என்று இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் கூறுகின்ற அதே வேளையில், இன்றைய இரண்டாம் வாசகம், ஒருவர் மற்றவருக்காகத் துன்பங்களைத் தாங்கிக் கொண்டால், கணவன் மனைவியினுடைய வாழ்க்கை மட்டுமல்ல, எல்லாருடைய வாழ்க்கையும் நன்றாக இருக்கும் என்கிறது.
“அனைவருடைய நலனுக்காகவும் கிறிஸ்து சாவுக்கு உட்பட வேண்டியிருந்தது” என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில், எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் கூறுகின்றார். நாம் அனைவரும் நலமாக இருக்க இயேசு சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டார் என்ற பின்னணியில் கணவனும் மனையியும் உள்ளார்ந்த அன்பினால் ஒருவர் மற்றவருக்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொண்டால் அவர்களது இல்லறம் நல்லறமாகும். அப்போது இந்த அகிலமே செழிக்கும் என்பது உறுதி. ஆகையால், நமது (இல்லற) வாழ்வு சிறக்க, அன்பினால் உந்தப்பட்டு, ஒருவர் மற்றவருக்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்வோம்.
சிந்தனை:
‘ஒரு குடும்பம் கிறிஸ்துவை மையப்படுத்தி வாழ்ந்தது எனில், கிறிஸ்து அந்தக் குடும்பத்தை ஒன்றிணைத்து, அவர்களது வாழ்வை ஒளிமயமானதாய் மாற்றுவார்’ என்பார் திருந்தந்தை பிரான்சிஸ். எனவே, நாம் கிறிஸ்துவை மையப்படுத்தி வாழ்ந்து, நமது குடும்பங்களை ஒளிமயமானதாய் மாற்றி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.