அக்டோபர் 3 : நற்செய்தி வாசகம்

கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 2-16
அக்காலத்தில்
பரிசேயர் இயேசுவை அணுகி, “கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா?” என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.
அவர் அவர்களிடம் மறுமொழியாக, “மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?” என்று கேட்டார். அவர்கள், “மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்” என்று கூறினார்கள்.
அதற்கு இயேசு அவர்களிடம், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.’ இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.
பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர். இயேசு அவர்களை நோக்கி, “தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்” என்றார்.
சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று, அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————-
மறையுரைச் சிந்தனை (அக்டோபர் 03)
பொதுக்காலம் இருபத்து ஏழாம் ஞாயிறு
திருமணம் என்னும் திருவருட்சாதனம்
ஒருவன் மிகவும் அழகான ஒரு பெண்ணை மணமுடித்தான், அவள்மீது அளவுகடந்த பாசத்தையும் காட்டினான். இவ்வாறிருக்க ஒரு நாள் அவள் ஒரு தோல்நோய்க்கு ஆளானாள். அதனால் அவளது அழகு படிப்படியாக குறைவடையத் தொடங்கியது. அவ்வேளை அவளது கணவன் ஒரு பயணமொன்றை மேற்கொண்டிருந்தான். அவன் திரும்பி வரும்போது ஒரு விபத்துக்குள்ளாகி அவனது கண் பார்வையை இழந்திருந்தான். ஆனால் எவ்வித பிரச்சினையும் இன்றி அவர்களது மண வாழ்வு தொடர்ந்தது.
நாற்கள் செல்லச் செல்ல மனைவி தனது அழகும் படிப்படியாக குறைவடைந்து செல்வதை உணர்ந்தாள். ஆனால் குருடனான கணவனுக்கோ இது ஒன்றும் தெரியாது. இருவரும் அவர்களிடையே இருந்த அன்பில் எவ்வித வேறுபாடும் மாற்றமும் காட்டாது வாழ்ந்தனர். அவன் அவளை அதிகமாக நேசித்தான் அவளுடன் அன்பாக நடந்து கொண்டான். அவளும் அவனுடன் அவ்வாறுதான் இருந்தாள்.
அப்படியிருக்க ஒரு நாள் அவள் இறந்துவிட்டாள். அவளது மரணம் அவனை மிகவும் வேதனைப்படுத்தியது. தன் அன்பு மனைவியின் இறுதிச் சடங்கை நிறைவேற்றி அவளை அடக்கம் செய்த பின் அவன் தனி மனிதனாக அவ்விடத்தை விட்டு வீடு திரும்பினான். அவன் திரும்பி வரும்போது அவனுக்கு பின்னாலிருந்து ஒரு மனிதர் அவனை அழைத்து “எவ்வாறு நீ தனியே நடந்து செல்கிறாய்?” இது வரைக்கும் நீ உன் மனைவியின் உதவியுடன் அல்லவா நடந்தாய்?” எனக் கேட்டான். அதற்கு அவன், “நான் குருடன் இல்லை. எனது மனைவி நோய் வாய்பட்டுள்ளாள் என்பதை நான் அறிந்தால் அவள் மனம் காயப்படக்கூடும் என்பதால்தான் குருடன் போன்று பாசாங்கு செய்தேன். அவள் சிறந்ததொரு மனைவியாக இருந்தாள். அவள் பின்னடைவதற்கு ஒரு காரணமாக இருக்க பயப்பட்டேன். அதனால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்து இதற்கு முன் எவ்வளவு பாசமாக நடந்து கொண்டேனோ அவ்வாறே இது வரையும் அவளுடன் வாழ்ந்தேன்” எனப் பதிலளித்தான்.
உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் அடுத்தவரிடம் இருக்கும் குறைகள் பெரிதாகத் தெரிவதில்லை என்பதற்கு இந்த நிகழ்வு சான்று.
பொதுக்காலத்தின் இருபத்து ஏழாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் திருமணத்தின் புனிதத் தன்மையையும் அதன் பிரிவுபடாத தன்மையையும் நமக்கு எடுத்துக் கூறுகின்றன. நாம் அதைக் குறித்து சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

Comments are closed.