செப்டம்பர் 29 : நற்செய்தி வாசகம்

கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 47-51
அக்காலத்தில்
நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்துக் கூறினார். நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று அவரிடம் கேட்டார். இயேசு, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.
அதற்கு இயேசு, “உம்மை அத்தி மரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார். மேலும் “வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவரிடம் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————–
மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 29)
அதிதூதர்களான தூய மிக்கேல், கபிரியேல் மற்றும் இரபேல் திருவிழா
நம் ஒவ்வொருவருக்காகவும் ஒரு தூதர் நியமிக்கப்பட்டுள்ளார் என்கிறது வேதம்.
இந்த தூதர்கள் ஒவ்வொரு பணியையும் மேற்கொண்டு வருவதை பார்க்கின்றோம்.
மிக்கேல் போராடினார். கபிரியேல் அறிவித்தார், ரபேல் குணமாக்கினார் என்கிறது வேதம்.
இந்த தூதர்களின் வழியே நம்மை காத்து, குணமாக்கி, பராமரித்து வருகின்றார் என்பதை நம்புவோம்.
நடமாடும் தூதுவர்களாவோம் நாமும்.
மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 29)
அதிதூதர்களான தூய மிக்கேல், கபிரியேல் மற்றும் இரபேல் திருவிழா
கி.பி.404 ஆண்டு சிபான்றோ நாட்டு மக்கள் பக்கத்து நாட்டவரிடமிருந்து பல்வேறு விதமான அச்சுறுத்தல்களைச் சந்தித்தார்கள். எப்போது வேண்டுமானாலும் தங்கள் நாட்டின்மீது பக்கத்து நாட்டவரால் போர்மூளும் என்றதொரு நிலை ஏற்பட்டது. இதனால் சிபான்றோ நாட்டு மக்கள் தங்கள் ஆயரை அணுகி, தூய மிக்கேல் அதிதூதரிடம் தங்களுக்காக மன்றாடும்படி கேட்டுக்கொண்டார்கள். அதன்படி ஆயரும் சிபான்றோ மக்களுக்காக தூய மிக்கேல் அதிதூதரிடம் பரிந்துபேசினார்.
அடுத்தநாள் காலை எதிரி நாட்டவர் சிபான்றோ நாட்டு மக்கள்மீது போர்தொடுக்கத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத விதமாக வானத்திலிருந்து இடியும், மின்னலும், பெரு மழையும் விழுந்தது. இதனைச் சற்றும் எதிர்பார்த்திராத எதிரிநாட்டுப் படையினர் பின்வாங்கத் தொடங்கினார்கள். இதனால் சிபான்றோ நாட்டின்மீது போர்மூளும் அபாய நிலையானது நின்றுபோனது.
மக்கள் அனைவரும் தூய மிக்கேல் அதிதூதர் வழியாக கடவுள் தங்களுக்குச் செய்த நன்மைகளுக்கு நன்றிபண் பாடினார்கள். இன்றைக்கும் கூட சிபான்றோ மக்கள் கடவுளிடமிருந்து தூய மிக்கேல் அதிதூதர் வழியாக பல்வேறு நன்மைகளைப் பெற்று வருகிறார்கள்.
இன்று திருச்சபையானது அதிதூதர்களான தூய மிக்கேல், கபிரியல் மற்றும் இரபேல் ஆகியோரின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. தொடக்கத்தில் இந்த மூன்று முதன்மைத் தூதர்களின் விழா வேறு வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வந்தது. தூய மிக்கேல் அதிதூதரின் விழா செப்டம்பர் 29 ஆம் தேதி அன்றும், தூய கபிரியல் அதிதூதரின் விழா மார்ச் 24 ஆம் தேதியிலும் தூய இரபேல் அதிதூதரின் விழா அக்டோபர் 21 ஆம் தேதியிலும் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் ரோம் நகரில் அனைத்துப் புனிதர்களுக்குமான ஆலயம் கட்டப்பட்ட பிறகு மூன்று அதிதூதர்களின் விழாக்களும் ஒன்று சேர்க்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலை ஏற்பட்டது.
இந்த மூன்று அதிதூதர்களின் விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் இறைவார்த்தை நமக்குத் தரும் செய்தி என்னவென்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
தூதர்கள் என்றால் அவர்கள் கடவுளின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு கடவுளின் பணியை சீராகச் செய்யக்கூடியவர்கள் (திருப்பாடல் 103:20). அந்த வகையில் பார்க்கும்போது தூய மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகிய மூன்று முதன்மைத் தூதர்களும் இறைவார்த்தைக்குக் கட்டுப்பட்டு, அவர் சொன்ன பணியைச் சிறப்பாக செய்தார்கள்.
தூய மிக்கேல் அதிதூதரைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்போது இவர் இறைவாக்கினர் தானியேல் புத்தகத்திலும், திருத்தூதரான தூய யூதா புத்தகத்திலும், திருவெளிப்பாடு நூலிலும் அதிகமாக இடம்பெறுகிறார். திருவெளிப்பாடு நூலில் விண்ணகத்தில் கடவுளின் தூதர்களுக்கும், அவருக்கு எதிரானவர்களுக்கும் எதிராகக் கலகம் ஏற்படும்போது இவர்தான் கடவுளின் தூதர்படைக்குத் தலைமை தாங்கி, எதிரிகளிடமிருந்து வெற்றியைப் பெற்றுத் தருகின்றார். “ஆண்டவருக்கு நிகர் யார்?” என்ற தன்னுடைய பெயருக்கு ஏற்ப தூய மிக்கேல் அதிதூதர் கடவுளின் பெயரை விளங்கச் செய்பவராக இருக்கின்றார்; பகைவர்களிடமிருந்தும், தீய ஆவிகளிடமிருந்தும் நம்மை மீட்பவராக இருக்கின்றார்.
இன்றைக்கும்கூட நமது வீட்டு வாசலில் தூய மிக்கேல் அதிதூதரின் படத்தைத்தான் வைத்திருக்கிறோம். காரணம் அவர் நம்மைத் தீய ஆவிகளிடமிருந்து விடுக்கின்றார் என்பதனால்தான். இவர் திருத்தந்தையின் பாதுகாவல் தூதர் என்றும் அறியப்படுகின்றார்.
அடுத்ததாக தூய கபிரியேல் அதிதூரைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்போது இவர் “ஆண்டவரின் செய்தியை எடுத்துரைக்கக் கூடியவராக” இருக்கின்றார். திருமுழுக்கு யோவானின் பிறப்பை சக்கரியாவிடமும், ஆண்டவர் இயேசுவின் பிறப்பை அன்னை மரியாளிடமும் இவர்தான் எடுத்துரைத்தார். இறைவாக்கினர் தானியேல் புத்தகத்திலும் இவர் இஸ்ரயேல் மக்களுக்கு விடுதலைச் செய்தியை அறிவித்ததாக நாம் வாசிக்கின்றோம் (தானி 8:16).
இவ்வாறு அதிதூதரான தூய கபிரியேல் கடவுளின் செய்தியை மக்களுக்கு எடுத்துரைக்கக்கூடியவராக விளங்குகின்றார். இறைவனின் அன்புமக்களாகிய நாம் நம்மோடு வாழும் மக்களுக்கு நல்ல செய்தியை எடுத்துரைக்கின்றவர்களாக இருக்கின்றோமா என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நிறைவாக வரும் தூய இரபேல் அதிதூதரைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்போது இவர் ‘கடவுள் குணப்படுத்துகிறார்” என்ற தன்னுடைய பெயருக்கு ஏற்ப விளங்குகின்றார். குறிப்பாக வர் தோபித்து நூலில் அதிகமாக இடம்பெறுகின்றார். தொபியாசுக்கு வழிதுனையாகவும்ம், அவர் திருமணம் செய்துகொண்ட பெண்ணிடமிருந்து தீய ஆவியை ஓட்டுவதற்குக் காரணமாகவும், இன்னும் சிறப்பாக தோபித்து மீண்டுமாகப் பார்வை பெறுவதற்கும் காரணமாக விளங்குகின்றார்.
புதிய ஏற்பாட்டில் வரும் பெத்சாய்தா குளத்தை கலக்கி, அதில் இறங்கும் மக்களுக்கு குனம்தரும் தூதர் இவர்தான் என்று சொல்லப்படுகின்றார். இவ்வாறு தூய இரபேல் கடவுள் அளிக்கும் நலவாழ்வை, சுகத்தை எல்லா மக்களுக்கும் அளிக்கக்கூடியவராக விளங்குகின்றார்.
ஆகவே அதிதூதர்களான தூய மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகியோரின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் நாமும் கடவுளுக்குக் கீழ்படிந்து வாழ்வோம். அதேநேரத்தில் தீமையை எதிர்த்துப் போராடுவோம், மக்களுக்கு நற்செய்தியை அறிவிப்போம், உடல் உள்ள நோயால் வருந்தும் மக்களுக்கு மருந்தாய் விளங்குவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.