வாசக மறையுரை (செப்டம்பர் 29)
பொதுக்காலம் இருபத்து ஆறாம் வாரம்
புதன்கிழமை
I நெகேமியா 2: 1-8
II லூக்கா 9: 57-62
யார் இறையாட்சிக்கு உட்படத் தகுதியில்லாதவர்?
கப்பல்களைக் தீயிட்டு எரித்தவர்:
1519 ஆம் ஆண்டு. ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த ஹெர்னாண்டோ கார்டெக்ஸ் (Hernando Cortez) மெக்சிகோவைக் கைப்பற்ற, அந்நாட்டில் உள்ள துறைமுக நகரான வெரா குருஸ் (Vera Cruz) என்ற இடத்தில் தன் வீரர்களோடு, பதினொரு கப்பல்களில் தரையிறங்கினார். அவர் வெரா குருசில் தரையிறங்கியதும், பயணத்திற்கு உதவிய பதினொரு கப்பல்களையும் தீக்கிரையாக்கினார்.
இதைக் கண்டு வீரர்கள் யாவரும் திகைத்துப்போய் நிற்க ஹெர்னாண்டோ கார்டெக்ஸ் அவர்களிடம், “கப்பல்கள் இருக்கின்ற தைரியத்தில் நீங்கள் எதிரி நாட்டவரோடு போரிடாமல் திரும்பிச் செல்வதற்கு வாய்ப்பிருக்கின்றது அல்லவா! திரும்பிச் செல்ல கப்பல்கள் இல்லையென்றால், எப்படியும் எதிரிநாட்டவரோடு போரிட்டு, நாட்டைக் கைப்பற்றவதைத் தவிர வேறு வழியில்லை என்ற எண்ணம் ஏற்படும், அதனால்தான் நான் அப்படிச் செய்தேன்” என்றார்.
ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த ஹெர்னாண்டோ கார்டெக்சைப் பொறுத்தவரையில், தன்னுடைய வீரர்கள் முன்னோக்கிச் செல்லவேண்டும் என்பதாகத்தான் இருந்ததே ஒழிய, பின்வாங்க வேண்டும் என்பதாக இல்லை. அதனால்தான் அவர் தன்னுடைய படைவீரர்களும் தானும் வந்திருந்த பதினொரு கப்பல்களைத் தீக்கிரையாக்கினார்.
போருக்குச் செல்பவர் மட்டுமல்ல, இயேசுவைப் பின்பற்றுகின்றவரும்கூட, திரும்பிப் பார்க்கக்கூடாது. அப்படித் திரும்பிப் பார்ப்பவர் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்லர் என்கிறது இன்றைய இறைவார்த்தை. நாம் அது குறித்துச் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசுவின் ஆளுமை, அவர் ஆற்றிய பணிகள், புரிந்த வல்ல செயல்கள் யாவற்றையும் பார்த்த பலர் அவரைப் பின்பற்ற விரும்பினார்கள். இதில் ஒருசிலர், இயேசுவைப் பின்பற்றிச் சென்றால், அவருக்குக் கிடைக்கும் பெயரும் புகழும் தங்களுக்கும் கிடைக்கும் என்று நினைத்தார்கள். அப்படித்தான் இன்றைய நற்செய்தியில் வரும் முதல் மனிதர் இயேசுவிடம், “நீர் எங்கே சென்றாலும், நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்கிறார். ஆனால், இயேசு அவரிடம், “…..மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றதும், அவர் தன் முடிவை மாற்றிக்கொண்டு தன் வழியில் சென்றுவிடுகின்றார்.
அடுத்ததாக, இயேசுவைப் பின்பற்ற விரும்பும் எவரும் அவருக்கு முதன்மையான இடம் கொடுக்கவேண்டும் (மத் 10: 37). இந்த உண்மையை உணராமல், இன்றைய நற்செய்தியில் வரும் மூன்றாவது நபர், “…..முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடை பெற்று வர அனுமதியும்” என்கிறார். எனவே, இயேசு அவரிடம், “கலப்பையில் கை வைத்த பின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்லர்” என்கிறார்.
வீட்டிற்குச் சென்று விடைபெற்று வருகின்றேன் என்று சொன்ன அந்த மனிதர், அங்கிருப்பவர்களின் பேச்சைக் கேட்டுத் தன் முடிவை மாற்றிக் கொள்ளலாம் என்பதால்தான் இயேசு அப்படிச் சொல்கின்றார். இயேசுவைப் பொறுத்தளவில் யாரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது (மத் 6: 24). ஆதலால், இயேசுவைப் பின்பற்ற விரும்பும் ஒருவர் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இயேசுவுக்கு முதன்மையான இடம் தரவேண்டும்.
சிந்தனைக்கு:
திரும்பிப் பார்த்த லோத்தின் மனைவி உப்புத்தூண் ஆனாள் (தொநூ 19: 26).
ஒரே மனம், ஒரே இலக்கு என்று வாழ்பவர்களால் மட்டுமே உயர்ந்த இலட்சியங்களை அடைய முடியும்.
முழு மனத்தோடு ஆண்டவரைத் தேடுவோர் பேறுபெற்றோர் (திபா 119: 2).
இறைவாக்கு:
‘என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன்பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன் (பிலி 3:
என்பார் இயேசு. எனவே, நாம் நம்முடைய வாழ்க்கையில் இயேசுவுக்கு முதன்மையான இடம் கொடுத்து வாழ்ந்து, அவரது உண்மையான சீடராகி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.