இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். ஜுன் 9

இயேசுவின் திருஇருதயம் ஆத்தும இரட்சண்ய ஆலுவலுக்கு மாதிரிகை.
தங்கள் பக்திக் காரியங்களை பிரமாணிக்கமாய் நிறைவேற்றுவதினால் , திவ்விய இரட்சகர் மட்டில் தங்களுக்கு உண்மையான அன்பிருக்கிறதென்று பல கிறித்தவர்கள் எண்ணிக் கொள்ளலாம். இவ்வகைப் பிரமாணிக்கமான அந்தஸ்து நல்லதுதான். என்றாலும் இதில் கிறித்தவர்களுக்குரிய கடமையெல்லாம் அடங்கி விட்டதென்று நினைக்கக் கூடாது. பக்திக்குரிய காரியங்களை பிரமாணிக்கமாய் அனுசரிக்கிறது கிறித்தவர்களுக்குரிய கடமைகளில் ஒரு சிறு பங்குதான். இறைவனின் எண்ணம் முழு இருதயத்தோடு இறைவனை அன்பு செய்கிறதுமல்லாமல் உன் அயலானையும் அவர் நிமித்தம் அன்பு செய் என்பதுதான். இந்த இரண்டு கற்பனைகளும் ஒரே கற்பனை. நாம் மீட்படைய இந்தக் கற்பனையை முழுதும் கடைபிடிக்க வேண்டும். நம்முடைய அயலாரை நாம் அன்புச் செய்யாமலும், அவர்களுடைய ஆத்தும் இரட்சண்யத்துக்காக உழைக்காமலும், பிறரன்பு கற்பனையை அலட்சியம் செய்தால் தேவ சித்தத்திற்கு விரோதமாய் நடக்கிறோம். இறைவனுக்குத் துரோகம் செய்கிறோம்.
சேசுவின் திரு இருதயமானது நமக்கு காண்பிக்கிற நன்மாதிரிகைகளைச் சற்று ஆராய்வோம். அவர் தமது தேவ பிதாவை அளவு கடந்த விதமாய்ச் சிநேகித்தார். தவிர, தமது பரம பிதாவும் ஆத்துமங்களின் பேரில் வைத்திருந்த அணை கடந்த அன்பை அறிந்த நமதாண்டவர், அந்த ஆத்துமங்களை நித்திய சாபத்திலே நின்று மீட்கவும், தாம் தமது பிதாவின் பேரில் வைத்த சிநேகத்தைக் காண்பிக்கவும், தம்மைத்தாமே பூரண பலியாக ஒப்புக்கொடுத்து மானிட உருவம் கொண்டு நிந்தை அவமானமும் துன்பமும் நிறைந்த வாழ்வு வாழ்ந்து மிகக் கொடூரமான பாடுகளை அனுபவித்து தமது இரத்தமெல்லாம் சிந்தி, நமது மீட்புக்காகச் சிலுவையில் உயிர் விட்டார்.
திவ்விய இயேசு பொதுத்தீர்வை நாளில் திருவுளம் பற்றும் வார்த்தைகளைக் கவனிப்போமானால், நாம் கடவுளை அன்புச் செய்தோமா என்பதைப்பற்றியல்ல, நமது அயலாரை அன்புச் செய்து அவர்களுடைய இரட்சண்யத்துக்காக முயற்சி செய்தோமா என்பதைப் பற்றி அதிகமாய்க் கணக்கு கொடுக்க நேரிடுமென்று நினைக்க வேண்டியிருக்கிறது. நமது அயலாருடைய ஞான நன்மைக்காகவும் ஆத்தும இரட்சண்யத்துக்காகவும், நம்மை முழுதும் கையளிப்பதுதான். இந்த ஞான நன்மையை முற்றிலும் நமக்குப் பிரியமானவர்களுக்குத் தேட வேண்டும். அப்படியே பக்தியுள்ள தாய், தகப்பன் தங்கள் குடும்பத்தின் ஆசீர்வாதத்திற்காக தங்களாலான முயற்சி எடுக்க வேண்டும். தங்கள் குழந்தைகளைப் பரிசுத்தத்தனத்திலும், உறுதியான பக்தியிலும் வளரும்படி கவனித்து தீய நண்பர்களுடன் அவர்கள் பழகாதபடியும் அவர்களுக்கு நற்படிப்பினையை நாளுக்குநாள் ஊட்டி, தங்கள் வார்த்தையிலும், செயலிலும் அவர்களுக்குச் சகலத்திலும் நன்மாதிரிகையாயிருந்து நசரேத்தூரில் வாழ்ந்துவந்த பரிசுத்த திருக்குடும்பத்தைப் போல் நடந்து வர வேண்டும். நமக்கு கிடைக்கும் நல்ல பத்திரிகைகள், புத்தகங்களைக் கிறித்தவர்களிடத்திலும், மற்றவர்களிடத்திலும் கொடுத்து வாசிக்கச் செய்ய வேண்டும். படிப்பில் தேர்ச்சியில்லாத கிறிஸ்தவர்கள் பிறர் ஆத்தும் இரட்சண்யத்துக்காக உழைக்க வேண்டும்.
தர்மம் செய்தல்:
சில கிறிஸ்தவர்களுக்கு இறைவன் மிகுந்த செல்வத்தைக் கொடுத்திருக்கிறார். இதை வீண் செலவு செய்ய அல்ல. ஆனால் நமது செல்வத்தைக் கொண்டு ஆத்தும் இரட்சண்யத்துக்கு உதவியான பிறரை பிறரன்பு பணிகளைச் செய்து நிலைநிறுத்தி அவைகளை வளர்ச்சி செய்யும்படியாகவே கொடுத்தார்கள். சிலரிடம் அவ்வளவு செல்வம் இல்லாவிட்டாலும் அவர்கள் இருதயத்தில் சேசுவின் திரு இருதய அன்பு பற்றுதலும் ஆத்துமங்களை இரட்சிக்க வேண்டுமென்கிற ஆவலுமுண்டு. அவர்களும் தர்மம் செய்ய பணம் மிச்சம் பிடிக்கலாம். வீண் ஆடம்பர செலவுகளைக் குறைத்து தர்மம் செய்வார்களேயானால் சேசுவின் திருஇருதய ஆசீர்வாதம் அவர்களுக்கும் குடும்பத்துக்கும் நிறைவாய் கிடைக்கும்.
செபம்:
ஆத்தும இரட்சண்யத்துக்கு செபம் முக்கியம். பாவிகள் மனம் திரும்ப செபத்தால் முடியும். இது எல்லோராலும் கூடும். ஏழைகள் முதலாய் இதைச் செய்யலாம்.
புத்திமதி.
நீ வேலை செய்யும்போது அவர்கள் மத்தியில் இருக்கிறாய். ஆத்தும் இரட்சண்ய அலுவலைப் பற்றி சில வார்த்தைகள் நட்போடும், பிறரன் போடும் சொல்வானேயாகில் உடன் பலன் கிடைக்காவிட்டாலும் அவர்கள் இறக்கும் போதாகிலும் அவர்கள் மனந்திரும்புவர். இவ்வித நல்ல தருணங்களை வீணில் இழந்து போகாதே

Comments are closed.