ஜூன் 10 : நற்செய்தி வாசகம்

தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 20-26
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.
‘கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்’ என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ ‘முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; ‘அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.
ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.
உங்கள் எதிரி உங்களை நீதி மன்றத்துக்குக் கூட்டிச் செல்லும்போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————
“சினம் வேண்டாம்; நல்லுறவை ஏற்படுத்திகொள்வோம்”
பொதுக்காலம் பத்தாம் வாரம் வியாழக்கிழமை
I 2 கொரிந்தியர் 3: 15- 4; 1,3-6
II மத்தேயு 5: 20-26
“சினம் வேண்டாம்; நல்லுறவை ஏற்படுத்திகொள்வோம்”
குழந்தையும் தந்தையும்:
மேலைநாட்டில் தந்தை ஒருவர் தனது ஆறு மாதக் கைக்குழந்தையைத் தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டு போனார். வழியில் குழந்தை சத்தமாக அழத் தொடங்கியது. ‘சிறிது நேரத்தில் குழந்தை தன் அழுகையை நிறுத்திவிடும்’ என்று நினைத்துக்கொண்டிருந்த தந்தை, அது தொடர்ந்து அழுவதைப் பார்த்துவிட்டு, “டாம்! சும்மா வா! பொறுமையாய் வா! அடக்கிக் கொண்டு வா!” சொல்லிக்கொண்டே வந்தார்.
இதைக் கவனித்துகொண்டே வந்த ஒருவர், “மிஞ்சி மிஞ்சிப் போனால் உங்களுடைய குழந்தைக்கு ஒரு வயது இருக்குமா…? அதற்கு நீங்கள் பேசுவது புரியவே புரியாது. அப்படியிருக்கையில் அதனிடம் நீங்கள், “டாம்! சும்மா வா! பொறுமையாய் வா! அடக்கிக் கொண்டு வா! என்று சொன்னால், அது எப்படித் தன் அழுகையை நிறுத்தும்” என்றார். அவர் இவ்வாறு சொன்னதைக் கேட்ட தந்தை, “டாம் என்பது என்னுடைய பெயர். குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டு வருவதால், நான் பொறுமையிழந்தது சினத்தில் ஏதாவது செய்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், எனக்கு நானே ‘டாம்! சும்மா வா! பொறுமையாய் வா! அடக்கிக் கொண்டு வா!’ என்று சொல்லிக்கொண்டு வருகின்றேன்” என்றார். இதைக் கேட்டு அவரிடம் பேசியவர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற டாம் என்ற மனிதரைப் போன்றுதான் பலர் தங்களுக்கு வரும் சினத்தை அடக்குவதற்கு என்னவெல்லாமோ செய்கின்றார்கள். ஒருசிலர் சினத்தை அடக்க முடியாமல் வெடிக்கின்றார்கள். அதனால் அதன் விளைவுகளைத் தங்கள் வாழ்நாள் முழுவதும் சந்திக்கின்றார். நற்செய்தியில் இயேசு சினம் கொள்ளாமல், நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளச் சொல்கின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
விவிலியப் பின்னணி:
இயேசு தன் மலைப்பொழிவில் அடிக்கடி பயன்படுத்தும் சொற்றொடர், “நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்பதாகும். இன்றைய நற்செய்தியிலும் இயேசு அச்சொற்றொடரைப் பயன்படுத்துகின்றார். ஏனெனில் பத்துக் கட்டளைகளில், “கொலை செய்யாதே” (விப 20: 13) என்று சொல்லப்பட்டிருந்தது. அப்படிக் கொலை செய்வது மிகப்பெரிய குற்றமாகப் பார்க்கப்பட்டது; ஆனால், இயேசு கொலை செய்வது மட்டுமல்லமல், கொலைக்குக் காரணமாக இருக்கும் சினமும் குற்றம்தாம். ஆதலால், “தன் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்” என்கிறார்.
இயேசு மக்களிடம் சினம் கொள்ளவேண்டாம் என்று மட்டும் சொல்லவில்லை. அதற்கு மாற்றாக “நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்” என்கிறார். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் சினத்தால் பல உறவுகளை இழந்திருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில் நாம் நம் சகோதரர் சகோதரிகளிடம் சினம் கொள்வதைத் தவிர்த்து, நல்லுறவு ஏற்படுத்திக் கொண்டு வாழ முற்படுவோம்.
சிந்தனைக்கு:
 எவர் ஒருவர் சினம் கொள்கின்றாரோ, அவரை அழிக்க வேறு யாரும் தேவையில்லை; அந்தச் சினமே அவரை அழித்துவிடும் – திருவள்ளுவர்.
 சினம் என்பது ஒரு நிமிடப் முட்டாள்தனம்
 நாம் நம் சகோதரர் சகோதரிகளிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்பவர்களாக? அல்லது சினம் கொள்பவர்களா? சிந்திப்போம்.
இறைவாக்கு:
‘பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும்’ (எபே 4: 26) என்பார் புனித பவுல். எனவே, நாம் சினத்தைத் தவிர்த்து நல்லுறவுடன் வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.