இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் திருத்தந்தையின் மறைக்கல்வியுரை

அன்பு சகோதரரே, சகோதரிகளே, இறைவேண்டல் குறித்த நம் மறைக்கல்வித்தொடரில் இன்று, இறைவேண்டலில் நிலைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்து சிந்திப்போம். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் (1தெச.5,15-20) என்ற புனித பவுலின் வார்த்தைகளை ஆழ்ந்து தியானித்த திருஅவையின் ஆன்மீக எழுத்தாளர்கள், இடைவிடாது தொடர்ந்து இறைவேண்டலிலேயே நிலைத்திருப்பது சாத்தியமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். இரஷ்ய தவ வாழ்வுப் பாரம்பரியம், ‘இயேசு கிறிஸ்துவே, இறைமகனே, பாவியாகிய என் மீது இரக்கமாயிரும்’ என்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கும், இதயத்தின் இறைவேண்டலை உருவாக்கியது. இந்த வார்த்தைகள், நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்றுபோல் இன்றியமையாத ஒன்றாக மாறின.   கிரேக்க துறவி Evagrius அவர்களோ, நாம் நம் தினசரி வேலைகளில் கவனமாக ஈடுபட்டிருந்தாலும், நம் இதயத்தில் இடைவிடாது நிலைத்து எரிந்து கொண்டிருக்கும் தீபத்திற்கு, இறைவேண்டலை ஒப்பிடுகிறார்.

இவ்வாறு, இறைவேண்டல், வாழ்வின் பின்னணியில் இருந்துகொண்டு, நம் வாழ்வின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆழமான அர்த்தத்தை வழங்கிக்கொண்டிருக்கிறது. நமக்கென நேரத்தை ஒதுக்க கடவுளால் முடிகின்றபோது, நாமும் அவருக்கென நேரத்தை ஒதுக்க முடியும். இறைவேண்டலையும் தினசரி பணிகளையும் சமநிலைப்படுத்தி, ஆன்மீகப் பலனை அடைய முடியும் என்பதை, ஆழ்நிலை தியான துறவு இல்லப் பாரம்பரியம் நமக்குக் கற்றுத்தருகிறது. இந்த சமநிலைப்பாட்டை நம் வாழ்விலும் ஏற்பதன் வழியாக, நாமும்,  இறைவனோடு ஒன்றிப்பில் வளர்வதோடு, தெய்வீக அன்பின் நெருப்பு நம் இதயங்களில் தொடர்ந்து எரிந்துகொண்டிருப்பதை காக்க முடியும்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 11ம் தேதி, இவ்வெள்ளிக்கிழமையன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட உள்ள, இயேசுவின் தூய்மைமிகு இதயம் பெருவிழா குறித்து நினைவூட்டி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Comments are closed.