மே 26 : நற்செய்தி வாசகம்

எருசலேமில் மானிட மகன் தலைமைக் குருக்களிடமும் மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 32-45
அக்காலத்தில்
சீடர்கள் எருசலேமுக்குப் போகும் வழியில் சென்றுகொண்டிருந்தார்கள். இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார். சீடர் திகைப்புற்றிருக்க, அவரைப் பின்பற்றிய ஏனையோர் அச்சம் கொண்டிருந்தனர். அவர் மீண்டும் பன்னிருவரை அழைத்துத் தமக்கு நிகழ இருப்பவற்றைக் குறித்துப் பேசத் தொடங்கினார்.
அவர், “இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிட மகன் தலைமைக் குருக்களிடமும் மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார்; அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து அவரைப் பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள்; அவர்கள் ஏளனம் செய்து, அவர்மீது துப்பி, சாட்டையால் அடித்து அவரைக் கொலை செய்வார்கள். மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்” என்று அவர்களிடம் கூறினார்.
செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், “போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்கள். அவர் அவர்களிடம், “நான் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவரை நோக்கி, “நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்” என்று வேண்டினர்.
இயேசுவோ அவர்களிடம், “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?” என்று கேட்டார்.
அவர்கள் அவரிடம், “இயலும்” என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, “நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப் புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்” என்று கூறினார்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர். இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், “பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர், உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————-
“எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை”
பொதுக்காலம் எட்டாம் வாரம் புதன்கிழமை
I சீராக்கின் ஞானம் 36: 1-2a, 4-5a, 9-17
II மாற்கு 10: 32-45
“எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை”
தன்னைப் பெரியவரெனக் காட்டிக்கொள்ள விழைந்த பணக்காரர்:
பணக்காரர் ஒருவர் இருந்தார். ஒருநாள் இவர் ஒரு பெரிய செருப்புக் கடைக்குச் சென்று, கடை உரிமையாளரிடம், விலை உயர்ந்த செருப்பைக் கேட்டு வாங்கிக்கொண்டு போனார். போனவர் ஒருசில நாள்களிலேயே திரும்பி வந்தார். “வாங்கிக் கொண்டு போன செருப்பு என்னவாயிற்று, அறுந்துவிட்டதா?” என்றார் கடை உரிமையாளர். பணக்காரர், “இல்லை” என்று சொன்னதும், “அப்படியானால் செருப்பு காணாமல் போய்விட்டதா?” என்றார் கடை உரியாளர். அதற்கும், “இல்லை!” என்றே பதில் சொன்னார் பணக்காரர். “அப்படியானால் செருப்புக்கு என்னதான் ஆயிற்று?” என்று கடை உரிமையாளர் தன் குரலைச் சற்று உயர்த்திக் கேட்டபொழுது பணக்காரர் அவரிடம், “நீங்கள் எனக்குக் கொடுத்த நெருப்பு நான் நடந்து செல்கின்றபொழுது ‘கீச் கீச்’ என்று சத்தம் எழுப்பமாட்டேன் என்கிறது. இதனால் யாருமே என்னைத் திரும்பிப் பார்ப்பதில்லை. அதற்காகத்தான் எனக்கு இந்தச் செருப்பு வேண்டாம் என்று கொண்டு வந்திருக்கின்றேன்” என்றார்.
இதைக் கேட்டுச் செருப்புக்கடை உரிமையாளர், பதிலுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றார்.
வேடிக்கையாகச் சொல்லப்பட்ட கதையாக இருந்தாலும், இன்றைக்குப் பலர் தாங்கள் எவ்வளவு பெரிய ஆள் என்பதைக் காட்டவதற்கு எப்படியெல்லாமோ முயற்சி செய்கின்றார்கள் என்பதை எடுத்துக் கூறுவதாக இருகின்றது. இன்றைய இறைவார்த்தையில் வரும் மனிதர்களும் தங்களைப் பெரியவர்கள் எனக் காட்டிக் கொள்ள விழைகின்றார்கள். இவர்களுக்கு இயேசுவின் பதில் என்னவாக இருக்கின்றது என்று நாம் சிந்திப்போம்.
விவிலியப் பின்னணி:
சீராக்கின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகம், ஆண்டவராகிய கடவுள் தங்கள்மீது இரக்கம் காட்டவேண்டும் என்றும், ‘எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை’ எனக் கூறிக்கொண்டிருந்த தங்களுடைய பகைவர்களின் தலைகளை நசுக்க வேண்டும் என்றும் இஸ்ரயேல் மக்கள் கடவுளை நோக்கி எழுப்பும் இறைவேண்டலாக இருக்கின்றது. இந்த இறைவேண்டல் கி.மு. 190 ஆம் ஆண்டு மக்கபேயர்களின் எழுச்சி முன்பு எழுப்பப்பட்டதாக இருக்கின்றது.
அசீரியர்களும் பாபிலோனியர்களும் இஸ்ரயேல் மக்களைத் தண்டிக்க கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட கருவிகள்தானே அன்றி, அவர்கள் ஒன்றும் பெரியவர்கள் இல்லை. இது புரியாமல் அவர்கள், எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்று ஆணவத்தில் ஆடினார்கள். முடிவில் அவர்கள் அழிவைச் சந்தித்தார்கள். நற்செய்தியில் சீடர்கள், தங்களுக்குள் யார் பெரியவர் என்ற விவாதத்தில் ஈடுபட்டபொழுது, இயேசு அவர்களிடம், உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும் என்கிறார். ஆகவே, நாம்தான் பெரியவர்க்ள என்று ஆடாமல், இயேசுவைப் போன்று தாழ்ச்சியோடு இருந்து, எல்லாருக்கும் பணிசெய்வோம்.
சிந்தனைக்கு:
 மேன்மை அடையத் தாழ்மையே வழி (நீமொ 15: 33)
 தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர் (லூக் 18: 14)
 அதிகாரம் என்பது ஒருவரை அடக்கியாள அல்ல, அன்புப் பணி செய்யவே என்பதை உணர்வது எப்போது?
ஆன்றோர் வாக்கு:
‘தாழ்ச்சியோடு இல்லாத எவரும் மற்றவரை ஒருபோதும் மதிப்பதில்லை’ என்பார் ஹென்றி பிரடெரிக் அமில். எனவே, நாம் ஆணவத்தோடு அல்ல, தாழ்ச்சியோடு வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.