வாசக மறையுரை (மே 26)
பொதுக்காலம் எட்டாம் வாரம்
புதன்கிழமை
I சீராக்கின் ஞானம் 36: 1-2a, 4-5a, 9-17
II மாற்கு 10: 32-45
“எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை”
தன்னைப் பெரியவரெனக் காட்டிக்கொள்ள விழைந்த பணக்காரர்:
பணக்காரர் ஒருவர் இருந்தார். ஒருநாள் இவர் ஒரு பெரிய செருப்புக் கடைக்குச் சென்று, கடை உரிமையாளரிடம், விலை உயர்ந்த செருப்பைக் கேட்டு வாங்கிக்கொண்டு போனார். போனவர் ஒருசில நாள்களிலேயே திரும்பி வந்தார். “வாங்கிக் கொண்டு போன செருப்பு என்னவாயிற்று, அறுந்துவிட்டதா?” என்றார் கடை உரிமையாளர். பணக்காரர், “இல்லை” என்று சொன்னதும், “அப்படியானால் செருப்பு காணாமல் போய்விட்டதா?” என்றார் கடை உரிமையாளர். அதற்கும், “இல்லை!” என்றே பதில் சொன்னார் பணக்காரர். “அப்படியானால் செருப்புக்கு என்னதான் ஆயிற்று?” என்று கடை உரிமையாளர் தன் குரலைச் சற்று உயர்த்திக் கேட்டபொழுது பணக்காரர் அவரிடம், “நீங்கள் எனக்குக் கொடுத்த நெருப்பு நான் நடந்து செல்கின்றபொழுது ‘கீச் கீச்’ என்று சத்தம் எழுப்பமாட்டேன் என்கிறது. இதனால் யாருமே என்னைத் திரும்பிப் பார்ப்பதில்லை. அதற்காகத்தான் எனக்கு இந்தச் செருப்பு வேண்டாம் என்று கொண்டு வந்திருக்கின்றேன்” என்றார்.
இதைக் கேட்டுச் செருப்புக்கடை உரிமையாளர், பதிலுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றார்.
வேடிக்கையாகச் சொல்லப்பட்ட கதையாக இருந்தாலும், இன்றைக்குப் பலர் தாங்கள் எவ்வளவு பெரிய ஆள் என்பதைக் காட்டவதற்கு எப்படியெல்லாமோ முயற்சி செய்கின்றார்கள் என்பதை எடுத்துக் கூறுவதாக இருகின்றது. இன்றைய இறைவார்த்தையில் வரும் மனிதர்களும் தங்களைப் பெரியவர்கள் எனக் காட்டிக் கொள்ள விழைகின்றார்கள். இவர்களுக்கு இயேசுவின் பதில் என்னவாக இருக்கின்றது என்று நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
சீராக்கின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகம், ஆண்டவராகிய கடவுள் தங்கள்மீது இரக்கம் காட்டவேண்டும் என்றும், ‘எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை’ எனறு கூறிக்கொண்டிருந்த தங்களுடைய பகைவர்களின் தலைகளை நசுக்க வேண்டும் என்றும் இஸ்ரயேல் மக்கள் கடவுளை நோக்கி எழுப்பும் இறைவேண்டலாக இருக்கின்றது. இந்த இறைவேண்டல் கி.மு. 190 ஆம் ஆண்டு மக்கபேயர்களின் எழுச்சிக்கு முன்பு எழுப்பப்பட்டதாக இருக்கின்றது.
அசீரியர்களும் பாபிலோனியர்களும் இஸ்ரயேல் மக்களைத் தண்டிக்கக் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட கருவிகள்தானே அன்றி, அவர்கள் ஒன்றும் பெரியவர்கள் இல்லை. இது புரியாமல் அவர்கள், எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்று ஆணவத்தில் ஆடினார்கள். முடிவில் அவர்கள் அழிவைச் சந்தித்தார்கள். நற்செய்தியில் சீடர்கள், தங்களுக்குள் யார் பெரியவர் என்ற விவாதத்தில் ஈடுபட்டபொழுது, இயேசு அவர்களிடம், உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும் என்கிறார். ஆகவே, நாம்தான் பெரியவர்கள் என்று ஆடாமல், இயேசுவைப் போன்று தாழ்ச்சியோடு இருந்து, எல்லாருக்கும் பணிசெய்வோம்.
சிந்தனைக்கு:
மேன்மை அடையத் தாழ்மையே வழி (நீமொ 15: 33)
தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர் (லூக் 18: 14)
அதிகாரம் என்பது ஒருவரை அடக்கியாள அல்ல, அன்புப் பணி செய்யவே என்பதை உணர்வது எப்போது?
ஆன்றோர் வாக்கு:
‘தாழ்ச்சியோடு இல்லாத எவரும் மற்றவரை ஒருபோதும் மதிப்பதில்லை’ என்பார் ஹென்றி பிரடெரிக் அமில். எனவே, நாம் ஆணவத்தோடு அல்ல, தாழ்ச்சியோடு வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.