நற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 13)

பொதுக்காலம் பத்தாம் வாரம்
சனிக்கிழமை
மத்தேயு 5: 33-37
“ஆணையிடவே வேண்டாம்”
நிகழ்வு
ஒரு நகரில் பெருஞ்செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவர் கிறிஸ்தவரும்கூட. நன்றாக இருந்த அவர் திடீரெனப் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் விழுந்தார். அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள், ‘இனிமேல் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று சொல்லிக் கைவிரித்துவிட்டனர். இதனால் அந்தச் செல்வந்தர் தன்னுடைய பிள்ளைகள் மூலம் பங்குத்தந்தையை அழைத்து, “சுவாமி! எனக்காக மன்றாடுங்கள். உங்களுடைய மன்றாட்டினால் நான் நலமடைந்துவிட்டால், கோயில் கட்டுமானப் பணிக்காக ஒருகோடி உரூபாய் வரைத் தருகிறேன். இதை நான் கும்பிடுகின்ற அந்த அந்தோனியார் மேல் ஆணையாகச் சொல்கின்றேன்” என்றார். உடனே பங்குத்தந்தைச் செல்வந்தருக்காக உருக்கமாக இறைவனிடம் வேண்டிவிட்டுச் சென்றார்.
பங்குத்தந்தை அந்தச் செல்வந்தருக்காக இறைவனிடம் வேண்டிவிட்டுச் சென்ற நேரம், அந்தச் செல்வந்தர், வெகு விரைவிலேயே நலமடைந்து வீடு திரும்பினார்.
இது நடந்து ஓரிரு மாதங்கள் கழித்து பங்குத்தந்தையும் செல்வந்தரும் கோயிலில் சந்தித்துக் கொண்டார்கள். இருவரும் பேசிக்கொண்டிருக்கையில், பங்குத்தந்தை மெல்லப் பேச்சை எடுத்தார். “ஐயா! நீங்கள் மருத்துவமனைவில் இருக்கும்பொழுது ‘நான் மட்டும் பிழைத்துக்கொண்டால், கோயில் கட்டுமானப் பணிக்காக ஒரு கோடி உரூபாய் வரைக்கும் தருவேன்’ என்று ஆணையிட்டுக் கூறினீர்களே! இப்பொழுது என்னுடைய கையில் பணம் இல்லாததால், கோயில் கட்டுமானப் பணிகள் தொய்வடைந்துவிட்டன. நீங்கள் கொடுப்பதாக ஆணையிட்டுச் சொன்ன அந்த ஒரு கோடி உரூபாயைத் தந்தால் கோயில் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெறும்” என்றார் .
பங்குத்தந்தை இப்படிச் சொன்னதுதான் தாமதம், செல்வந்தர் தன்னுடைய குரலைச் உயர்த்தி, “என்ன! நான் கோயில் கட்டுமானப் பணிக்கு ஒருகோடி உரூபாய் தருவதாகச் சொன்னேனா…! நாம் கும்பிடுகின்ற அந்த அந்தோனியார் மேல் ஆணை! அப்படியெல்லாம் நான் சொல்லியிருக்க மாட்டேன்” என்று சாதித்தார். இதைக் கேட்ட பங்குத்தந்தைக்கு ஏதோ போல் ஆயிற்று. ‘போயும் போயும் இந்த மனிதரையா நம்பினேன்!’ என்று அவர் தன்னையே நொந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் வரும் செல்வந்தர் எப்படி எதற்கெடுத்தாலும் அந்தோனியார் மேல் ஆணையிட்டாரோ அல்லது சத்தியம் செய்தாரோ, அப்படித்தான் இன்றைக்குப் பலர் யாரோ ஒருவர்மீது ஆணையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய செயல் தவறானது என்பதை நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுகின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பொய்யர்கள்தான் ஆணையிடுவார்கள்
‘பொய்யாணை இடாதீர், ஆணையிட்டு நேர்ந்துகொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்’ என்று பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கின்றது (விப 20: 7; லேவி 19: 12; எண் 30: 2; இச 5: 11, 6:13, 23: 21-23). ஆண்டவர் இயேசு இதை மேற்கோள் காட்டிவிட்டு, விண்ணுலகின்மீதோ, மண்ணுலகின்மீதோ, எருசலேமின்மீதோ, தலைமுடியின் மீதோ.. எதன்மீதும் ஆணையிட வேண்டாம் என்று கூறுகின்றார்.
எதன்மீதும் ஆணைவிட வேண்டாம் என்று இயேசு சொல்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, நமக்கு எதன்மீதும் அதிகாரம் கிடையாது; இயேசுவுக்கு மட்டுமே எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கின்றது (மத் 28: 18). அதனால் நாம் எதன்மீதும் ஆணையிடக் கூடாது. இரண்டாவதாக, ஆணையிடும் யாரும் தங்களுடைய பொய்யை, போலித்தனத்தை மறக்கவே ஆணையிடுகின்றார்கள். அதனால் நாம் எதன்மீதும் ஆணையிடக்கூடாது என்கின்றார் இயேசு.
உண்மை பேசுபவர்களின் பேச்சு ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ என்றே இருக்கும்
ஆணையிடக் கூடாது என்று சொன்ன இயேசு, ஒருவருடைய பேச்சு எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்துப் பேசுகின்றார். “நீங்கள் பேசும்போது, ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடமிருந்து வருகின்றது” என்று சொல்வதன் மூலம் நம்முடைய பேச்சு உண்மையானதாய், நன்மையானதாய் இருக்கவேண்டும் என்று எடுத்துக் கூறுகின்றார் இயேசு.
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம்முடைய பேச்சு எப்படி இருக்கின்றது என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். “சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்” என்று நம்முடைய சொற்கள் அல்லது வார்த்தைகள் எப்படி இருக்கவேண்டும் என்று கூறுவார் திருவள்ளுவர். ஆகையால், நாம் பயனில்லா சொற்களைத் தவிர்த்து, பயனுடைய சொற்களைப் பேசுவோம். அதன்மூலம் இயேசுவுக்குச் சான்று பகர்ந்து வாழ்வோம்.
சிந்தனை
‘கோழைகளைத் தவிர வேறு எவரும் பொய் செல்வதில்லை’ என்பார் மர்ஃபி என்ற அறிஞர். ஆம், கோழைகள் தான் பொய்சொல்வார்கள்; பொய்யாணையும் இடுவார்கள். பலசாலிகள் அல்லது ஆண்டவருடைய வழியில் நடப்பவர்கள் ஒருபோதும் பொய் சொல்வதில்; பொய்யாணையும் இடுவதில்லை. நாம் எப்பொழுதும் இயேசுவின் வழியில் நடந்து உண்மை பேசுபவர்களாவோம் அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.