ஜுன் 13 : நற்செய்தி வாசகம்

நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 33-37
அக்காலத்தில்
இயேசு கூறியது: “ ‘பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்’ என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின் அரியணை. மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது பேரரசரின் நகரம்.
உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது. ஆகவே நீங்கள் பேசும் போது ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————-
மறையுரைச் சிந்தனை (ஜூன் 13)
பொய்யாணை இடாதீர்கள்!
அந்த ஊரில் விவசாயி ஒருவர் இருந்தார். அவர் வசதி படைத்தவராக இல்லாவிட்டாலும் கூட நிறைவான வாழ்க்கை வாழ்கின்ற அளவுக்கு இறைவன் அவரை ஆசிர்வதித்திருந்தார்; அவர் தன்னிடம் கேட்கின்ற மனிதர்களுக்கு எப்போதும் முகங்கோணாமல் உதவி செய்யக்கூடியவராகவும் இருந்தார்.
ஒருநாள் விவசாயிடத்தில் அவ்வூரில் இருந்த கசாப்புக் கடைகாரர் ஒருவர் அழுதுகொண்டே வந்தார். அவர் விவசாயிடம், “ஐயா! என்னுடைய தந்தை சிறிது நேரத்திற்குக் முன்பாக இறந்து போய்விட்டார். அவருடைய ஈமச் சடங்கினைச் செய்கின்ற அளவுக்கு என்னுடைய கையில் போதிய பணமில்லை; நீங்கள்தான் எனக்கு ஒரு முப்பதாயிரம் ரூபாய் பணம் கொடுக்கவேண்டும். அப்படி நீங்கள் பணம் கொடுத்தால், அதை ஒரே மாதத்தில் திருப்பித் தந்துவிடுகிறேன். இது என்னுடைய தாயின்மீது சத்தியம்” என்றார். விவசாயியோ தன்னுடைய மகளின் திருமணச் செலவுக்காக கையில் குறைவான அளவில்தான் பணம் வைத்திருந்தார். இப்படிப்பட்ட நிலையில் இவரிடம் இவ்வளவு பணத்தைக் கொடுத்தால், அடுத்து என்ன செய்வது’ என்று ஒருகணம் யோசித்துப் பார்த்தார். சரி அவசரத்துக்குத் தானே பணம் கேட்கிறார், தந்து உதவுவோம் என்று அவரிடத்தில் முப்பதாயிரம் ரூபாயை எடுத்துக்கொடுத்தார். அப்படிக் கொடுக்கும்போது அவர், “மகளின் திருமண காரியத்திற்காக வைத்திருந்த பணத்தைத்தான் உனக்குத் தருகிறேன், அதனால் தவறாமல் குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தைத் தந்துவிடு” என்று சொல்லிவிட்டுத் தந்தார். கசாப்புக் கடைக்காரரும் விவசாயி சொன்னதற்கு சரி என்று சொல்லிவிட்டு பணத்தை வாங்கிகொண்டு போனார்.
கசாப்புக் கடைக்காரர் விவசாயிக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப, குறிப்பிட்ட தேதியில் பணத்தை அவரிடத்தில் கொடுக்கவில்லை, விவசாயியோ மேலும் ஒருவார காலம் பொறுத்துப் பார்த்தார். அப்படியும் கசாப்புக் கடைக்காரர் அவரிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து கொடுக்கவில்லை. சரி நேரடியாகவே அவருடைய வீட்டிற்குச் சென்று, பணத்தை அவரிடத்தில் கேட்டுப் பார்ப்போம் என்று அவருடைய வீட்டிற்குச் சென்றபோது, கசாப்புக் கடைக்காரர் விவசாயி தன்னுடைய வீட்டிற்கு வருவது தெரிந்து வீட்டை விட்டு வெளியேறினார். கசாப்புக் கடைக்காரர் இப்படியெல்லாம் நடந்துகொள்வதை அறிந்து விவசாயி மனவேதனை அடைந்தார்.
இப்படி பொறுத்துப் பொறுத்துப் பார்த்த விவசாயி ஒருகட்டத்தில் அவர் கசாப்புக் கடைக்காரர்மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் கசாப்புக் கடைக்காரர் பணத்ததை வாங்கிக்கொண்டு ஏமாற்றிய குற்றத்திற்காக, நீதிமன்றம் வாங்கிய தொகையைவிட ஒரு மடங்கு அபராதம் விதித்து அவருக்குத் தண்டனை வழங்கியது. (சில மாதங்களுக்கு முன்பாக தினகரன் பத்திரிக்கையில் வந்த நிகழ்வு இது).
மனிதர்கள் எப்படி கொடுத்த வாக்குறுதிகளை மீறுபவர்களாகும், ஆணையிட்டுக் கூறியதற்கு எதிராகச் செயல்படுபவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக இருக்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பொய்யாணை இடவேண்டாம் என்கிறார். எதற்காக என்றால், இயேசு வாழ்ந்த காலத்தில் நிறையப் பேர் ஆண்டவர் மீதும் விண்ணகத்தின் மீதும் மண்ணகத்தின் மீதும், எருசலேம் மீதும் ஆணையிட்டுப் பேசினார்கள். இப்படி செய்ததால் அவர்கள் தேவையில்லாமல் ஆண்டவரையும் உள்ளே இழுத்தார்கள். அதனால்தான் இயேசு ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மீதும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின் அரியணை. மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது பேரரசரின் நகரம்…” என்கிறார். எதன்மீதும் ஆணையிடக்கூடாது என்பது இயேசு வலியுறுத்திக்கூறும் செய்தியாக இருக்கின்றது.
ஆண்டவருக்குக் வாக்குறுதி கொடுத்தால் அதனை மீறக்கூடாது என்பது பழைய ஏற்பாடு சொல்லும் பாடமாக இருக்கின்றது (எண் 30:2), ஆனால், இஸ்ரயலரோ தாங்கள் கடவுளுக்குக் கொடுத்த வாக்குறிதியை மறந்தார்கள், பொய்யான தெய்வங்களை வழிபாட்டு, போலியான வாழ்க்கை வாழத் தொடங்கினார்கள். அதனாலே கடவுள் அவர்களைத் தண்டிக்கின்றார்.
ஆகையால், நாம் இறைவன்மீது எக்காரணத்தைக் கொண்டும் ஆணையிடக் கூடாது, அதே நேரத்தில் இறைவனுக்கு கொடுத்த வாக்குறிதிகளை நாம் மீறக்கூடாது. இன்றைக்கு நிறையப் பேர் இறைவன் மீது ஆணையிட்டு ஒரு காரியத்தைச் செய்கிறார்கள். ஆனால், காலப்போக்கில் அவற்றை மறந்துவிட்டு, தங்கள் விருப்பம் போல் வாழத் தொடங்கி விடுகிறார்கள்.
எனவே, நாம் இறைவன்மீது ஆணையிடுகின்ற தவறான போக்கினை விடுவோம், நாம் கடவுளுக்கும் பிறருக்கும் கொடுக்கின்ற வாக்குறுதிகளுக்கு உண்மையுள்ளவர்களாக இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.