ஆபிரகாமின் செபம் கற்றுத்தருவது

கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக, இத்தாலியில் விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகள் பெருமளவாகத் தளர்த்தப்பட்டுள்ளபோதிலும், மக்கள் கவனமுடன் செயல்படுமாறு அரசு விண்ணப்பித்துள்ள நிலையில், திருப்பீடமும், மக்கள் பெருங்கூட்டமாக கூடுவதைத் தவிர்க்கும் நோக்கத்தில், புதன் மறைக்கல்வியுரைகளை, திருத்தந்தையின் நூலகத்திலிருந்து காணொளி வழியாக தொடர்ந்து வழங்கி வருகிறது. செபம் குறித்த ஒரு தொடரை புதன் மறைக்கல்வியுரைகளில் வழங்கி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் ஐந்தாவது வாரமாகிய, ஜூன் 03, இப்புதனன்று, ஆபிரகாமின் செபம் குறித்து எடுத்துரைத்தார். ஆபிரகாமின் தளராத விசுவாசம் எவ்வாறு நமக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது என்பதை விளக்குவதாக, திருத்தந்தையின் மறைக்கல்வியுரை இருந்தது. முதலில், ‘ஆபிராமுடன் கடவுளின் உடன்படிக்கை’ என்பது குறித்துப் பேசும், தொடக்க நூலின் 15ம் பிரிவின் முதற்பகுதி பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது. அதன் பின் தன் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து அறிவித்தது: “ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்.” 2அப்பொழுது ஆபிராம், “என் தலைவராகிய ஆண்டவரே…… நீர் எனக்குக் குழந்தை ஒன்றும் தராததால் என் வீட்டு அடிமை மகன் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப் போகிறான்” என்றார். அதற்கு மறுமொழியாக, ஆபிராமுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்” என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார் (தொடக்க நூல் 15,1.3-6).

மறைக்கல்வியுரை

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, செபம் குறித்த நம் மறைக்கல்வித்தொடரில் இன்று, ஆபிரகாமின் செபம் குறித்து நோக்குவோம். விசுவாசத்தில் நம் தந்தையாகிய ஆபிரகாமில், நாம் இறைவனுடன் தொடர்புகொள்ளும் ஒரு புதிய வழிமுறையைக் காண்கிறோம். இறைவனின் குரலைக் கேட்கும் ஆபிரகாம், அவ்வார்த்தைகளிலும், இறைவனின் வாக்குறுதிகளிலும் நம்பிக்கை கொள்கிறார். தெய்வீக வாக்குக்கு முற்றிலும் அடிபணிந்தவராக, தன் கடந்தகால வாழ்க்கையை முற்றிலும் கைவிட்டு, கடவுள் எங்கெல்லாம் தன்னை வழிநடத்திச் செல்கிறாரோ, அங்கெல்லாம் செல்கிறார். அதாவது, தன் சொந்த மகனான ஈசாக்கையே பலிகொடுக்க கேட்கும் சோதனைக்கும்  உட்படுத்தப்படுகிறார். இத்தகைய, நம்பிக்கை மாறாநிலை எனும் மெய்ப்பற்றின்  வழியாக, இறைக்குடும்பத்தின் ஓர் அங்கத்தினராக அவர் மாறுகிறார், மற்றும், இறைவனோடு வாதாடவும் செய்கிறார், ஆனால், எப்போதும் விசுவாசத்தில் உறுதியுடையவராக இருந்தார். இறைவார்த்தைக்கு ஆபிரகாம் கீழ்ப்படிந்தது, மனிதரின் ஆன்மீக வளர்ச்சியில், ஓர் அறிவுசார்ந்த புதிய படியை காட்டி நிற்கிறது. ஆபிரகாமின் காலத்திலிருந்து, விசுவாசிகளின் வாழ்வு என்பது, இறையழைத்தல் என்பதன் பின்னணியில் நோக்கப்பட்டு, அதாவது, இறைவனின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, ஒருவர் தன் வாழ்வை வாழ்வதற்கு விடப்படும் தனிப்பட்ட அழைப்பாக அது நோக்கப்பட்டது. இவ்வாறு, ஆபிரகாமின் கடவுள், ‘என் கடவுள்’  என்பவராக மாறி, என் வரலாற்றின் ஆண்டவராகவும், என்னை ஒருபோதும் கைவிடாதவராகவும் மாறுகிறார். விசுவாசத்தோடு எவ்வாறு செபிப்பது என்பதை ஆபிரகாமிடம் இருந்து கற்றுக்கொள்வோம். இறைவனுக்கு செவிமடுக்கவும், அவரோடு பயணிக்கவும், உரையாடவும், ஏன், அவரோடு விவாதம் செய்யவும் கற்றுக்கொள்வோம். ஆனால், அதேவேளை, எப்போதும் இறைவார்த்தையை வரவேற்பவர்களாகவும், அவ்வார்த்தையை செயல்படுத்துபவர்களாகவும் வாழ்ந்திட தயார் நிலையில் இருப்போம்.

Comments are closed.