ஜுன் 4 : நற்செய்தி வாசகம்

நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28b-34.
அக்காலத்தில் மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு சதுசேயர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக’ என்பது முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை” என்றார். அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், “நன்று போதகரே, ‘கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை’ என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்துவதும் எரிபலிகளையும் வேறு பலிகளையும் விட மேலானது” என்று கூறினார். அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், “நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை” என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————–
முதன்மையான கட்டளை
நிகழ்வு
பிரான்ஸ் நாட்டின் மன்னராக இருந்தவர் மாவீரன் நெப்போலியன். இவர் யாரையும் மதிப்பதே கிடையாது; ஆனால், இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த மருத்துவரும் விஞ்ஞானியுமான ஜென்னர்மீது தனி மதிப்புக் கொண்டிருந்தார்.
இது குறித்து ஒருசிலர் மாவீரன் நெப்போலியனிடம், “யாரையும் மதிக்காத நீங்கள், எதிரிநாட்டு மருத்துவர் ஜென்னர்மீது மட்டும் தனி மதிப்புக் கொண்டிருக்கின்றீர்களே…! அது எப்படி…?” என்று கேட்டார்கள். அதற்கு நெப்போலியன் அவர்களிடம், “ஒரு மன்னருக்கு அழகு, அவர் போரில் ஆயிரக்கணக்கான பேரைக் கொன்று குவிப்பது. அவரால் கொன்றுகுவிக்கப்பட்ட மனிதர்களைக் காப்பாற்ற முடியாது; ஆனால், மருத்துவர் ஜென்னரோ, கொள்ளைநோயால் மக்கள் இறக்காத வண்ணம் மருந்து கண்டுபிடித்திருக்கின்றார். இறைவன்மீது மிகுந்த அன்பும் நம்பிக்கையும் கொண்டவரான மருத்துவர் ஜென்னர், கொள்ளைநோயால் மக்கள் இறக்காது இருக்க மருந்து கண்டுபிடித்திருக்கின்றார் என்றால், அவர் மக்கள்மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கவேண்டும். அதனால்தான் அவரால் கொள்ளைநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் இறக்காமல் இருக்க, மருந்து கண்டு பிடிக்க முடிந்திருக்கின்றது. அதனாலேயே அவர்மீது எனக்குத் தனிமதிப்பு இருக்கின்றது” என்றார்.
இறைவன்மீது அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்த மருத்துவர் ஜென்னர், மனிதர்கள்மீதும் மிகுந்த அன்புகொண்டிருந்தார். அந்த அன்புதான் அவரைக் கொள்ளை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கத் தூண்டியது. இன்றைய நற்செய்தி வாசகம் இறைவனையும் அதற்கு இணையாக மனிதர்களையும் அன்பு செய்யவேண்டும் என்றோர் அழைப்புத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
முதன்மையான கட்டளை எது?
நற்செய்தியில், இயேசுவிடம் வருகின்ற மறைநூல் அறிஞர் ஒருவர், “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்கின்றார். இயேசுவிடம் இக்கேள்வியைக் கேட்கின்றவர், சாதாரண ஒரு யூதர் அல்லர்; மறைநூல் அறிஞர். அப்படியானால், அவர் மறைநூலைக் குறித்து நன்கு அறிந்தவர் என்றுதான் சொல்லவேண்டும். அப்படியிருந்தும் அவர் ஏன் இயேசுவிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்கவேண்டும் என்ற கேள்வி நமக்கு எழலாம். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இயேசுவை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிடவேண்டும். இரண்டு, இயேசுவின் பார்வையில் எது முதன்மையான கட்டளை எனத் தெரிந்துகொள்ளவேண்டும்.
மக்கள் நடுவில் இயேசு அடைந்துவந்த புகழையும் செல்வாக்கையும் கண்டு பொறாமைப்பட்ட பரிசேயர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் இயேசுவை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிடவேண்டும்… அவருக்கு அவப்பெயரை உண்டாக்கவேண்டும் என்பதற்காகப் பல்வேறு விதமான கேள்விகளைக் கேட்டார்கள். அதில் ஒன்றுதான் இன்றைய நற்செய்தியில் கேட்கப்பட்ட கேள்வி. மாற்கு நற்செய்தி மறைநூல் அறிஞர் இயேசுவிடம் கேள்வி கேட்பதாக வருகின்றது; ஆனால், மத்தேயு நற்செய்தியில் பரிசேயர்களிடம் இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவிடம் கேள்வி கேட்பதாக வருகின்றது (மத் 22: 34-35). அப்படியானால், மறைநூல் அறிஞர் இயேசுவிடம் கேள்வி கேட்பதன்மூலமாக அவரைச் சிக்க வைக்க நினைத்தார் என்று உறுதியாகச் சொல்லலாம்.
அடுத்ததாக, பரிசேயர்கள் நடுவில் எது முதன்மையான கட்டளை என்பது தொடர்பாக அடிக்கடி விவாதம் நடக்கும். இந்நிலையில் மக்களால் மதிக்கப்பட்ட இயேசு, முதன்மையான கட்டளை என்று எதைச் சொல்கின்றார் என்று தெரிந்துகொள்வதாக, அவர்கள் மறைநூல் அறிஞரை அனுப்பி, கேள்வியைக் கேட்கின்றார்கள்.
இறையன்பும் பிறரன்புமே ஒருவரை இறையாட்சிக்கு உட்படுத்தும்
முதன்மையான கட்டளை எது என மறைநூல் அறிஞர் தன்னிடம் கேள்வியைக் கேட்டதும், இயேசு இணைச்சட்ட நூல் 6: 4 யையும் லேவியர் நூல் 19: 18 யையும் இணைத்து இறையன்பும் பிறரன்புமே முதன்மையான கட்டளை என்றும் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று இணையான கட்டளை என்றும் சொல்கின்றார். இயேசு இவ்வாறு சொன்னதும், அவரிடம் கேள்வி மறைநூல் அறிஞர், இயேசு சொன்னதை ஆமோதித்துவிட்டு, இறையன்பும் பிறரன்பும் எரிபலிகளையும் வேறு பலிகளையும் விட மேலானவை என்று கூறுகின்றார். அப்பொழுதுதான் இயேசு அவரிடம், நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை.
ஆம், கடவுளையும் அடுத்திருப்பவரையும் அன்பு செய்கின்ற ஒருவர் இறையாட்சிக்கு மிக நெருக்கமாகவும், ஏன், இறையாட்சிக்கு உட்படுபவராகவும் இருக்கின்றார் என்று உண்மை. எனவே, நாம் கடவுளையும் அவருடைய சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர்களையும் முழுமையாய் அன்புசெய்யக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனை
‘அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக!’ (எபே 3: 17) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் இறைவனை, அடுத்திருப்பவரை அன்பு செய்யக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.