தேவமாதாவின் வணக்கமாதம் மே 22

சேசுகிறிஸ்து நாதர் கல்லறையிலிருந்து உயிர்த்து எழுந்தருளித் தம்முடைய திருத்தாயாருக்குக் காண்பிக்கிறார்!
தேவமாதா தமது திருமைந்தன் உயிர்த்ததைக்கண்டு அடைந்த பேரானந்தம்.
நம்முடைய ஆத்துமங்களுக்கு இரட்சகரான சேசுக் கிறிஸ்துநாதர் நரகக் கொடுமையையும் சாவினுடைய கொடூரத்தையும் வென்று கல்லறையைவிட்டு அளவில்லாத பிரதாபத்தோடு வெற்றி வீரராக உயிர்த்து எழுந்தார். அவ்வேளையில் தம்முடைய திருமாதாவை மறக்காமல் அன்னைக்குத் தாம் அடைந்த மகிமையோடு காணப்பட்டார் என்பது பக்தியுள்ள சத்தியமாம். சேசுக்கிறிஸ்துநாதர் சொல்லொணா கஸ்தி அவமானப்பாடுகளை அனுபவிக்கும் பொழுது அந்தப் பரம நாயகி அவரை விடாமல் மனோவாக்குக் கெட்டாத துக்க சாகரத்தில் அமிழ்ந்திருந்தார்கள். தமது திருச் சரீரத்தில் அனுபவித்த வருத்தம் அனைத்தையும் அன்னை தம்முடைய இருதயத்தில் அனுபவித்தார்கள். ஆகையால் உயிர்த்து எழுந்த சேசுக்கிறிஸ்துநாதர் அடைந்த கஸ்தி துன்பங்களுக்குத் தகுதியான ஆனந்த சந்தோஷத்தை அளிக்க வேண்டுமென்று எண்ணி அன்னைக்குத் தம்மைக் காண்பிக்கச் சித்தமானார். அவ்வாறே சர்வ நீதியுள்ள தயாபர சர்வேசுரன் தாம் மனிதருக்கு வழங்குகிற ஞான நன்மைகளை அவர்கள் தம்மைப்பற்றி அனுபவித்த வருத்தங்களுக்குத் தகுதியானபடி வழங்குகிறார். ஆகையால் உலக மீட்பரை முழு மனதோடு நேசித்து அவர் அடைந்த துன்பங்களுக்கு இரங்கி அவருடைய திருச்சிலுவையை சுமக்கிறது போல் அவரைப் பின்பற்றிக் கல்வாரி மட்டும் பின் செல்வோமானால் அவர் பொழிகிற ஞான சந்தோஷத்துக்கும் கொடுக்கிற உன்னத மகிமைக்கும் பங்குபற்றுபவர்களாக இருப்போம்.
தேவமாதா தம்முடைய திருமைந்தன் மட்டற்ற மகிமை பெற்றதைக் கண்டு அடைந்த ஆனந்தம்.
சேசுக்கிறிஸ்துநாதர் மட்டற்ற மகிமையோடு உயிர்த்ததைக்கண்டு தேவமாதா அடைந்த சொல்லிலடங்காத சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் ஆராய்ந்து பார்க்கக்கடவோம். அந்தப் பரமநாயகி தமது திருமைந்தன், சூரியனை மங்கச் செய்யும் பிரகாசத்தை அடைந்த அட்சம், சூட்சம், இலகு, பிரகாசம் என்ற மகிமை வரங்களைப் பெற்றதைக் கண்டு, தாம் முன்னர் அடைந்த வியாகுல வேதனைகளுக்குப் பதிலாக மட்டற்ற மகிழ்ச்சியால் பூரிக்கப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய திரு உடலில் வெற்றி அடையாளங்களைப் போல் இருக்கிற திருக்காயங்களை முத்தமிட்டார்கள். மோட்சவாசிகள் பேரின்ப வீட்டில் உணருகிற இன்ப சந்தோஷத்தை அனுபவித்தார்கள். அநித்திய உலகில் இருந்தபோதிலும் அவர்கள் மேலான இராச்சியத்திற்குரிய மனோவாக்குக் கெட்டாத பேரின்பத்தை, நுகர்ந்தார்கள். நமது ஒப்பற்ற அன்னை சொல்லொணா ஆனந்தத்தை அனுபவிக்கிறதைப்பற்றி வாழ்த்தி, நம்மை இவ்வுலக பாக்கியங்களை வெறுக்கச் செய்து தாம் அடைந்த மோட்ச ஆனந்தத்தை நாமும் அடையும்படி கிருபை செய்ய வேண்டுமென மன்றாடுவோமாக.
தேவமாதா தமது திருமைந்தனிடத்தில், அவரை விட்டுவிட்ட சீஷர்கள் திரும்பிச் சேருவதைக்கண்டு அடைந்த ஆனந்தம்.
சேசுநாதர் உயிர்த்ததற்குப் பின்னர் அப்போஸ்தலர்களும் மற்ற சீஷர்களும் அவரிடத்தில் திரும்பி வந்து சேருகிறதைக் கண்டு, தேவமாதா எவராலும் கண்டு பிடிக்கக்கூடாத சந்தோஷத்தை அடைந்தார்கள். அவர்கள் எல்லோரும் அர்ச். அருளப்பர் நீங்கலாகப் பயந்து ஓடிப்போய்த் தங்களுடைய மேய்ப்பன் சாகிற வேளையில் ஆட்டுக்குட்டிகள் சிதறிப் போகிறது போல் சிதறி இருந்தார்கள். சேசுக் கிறிஸ்துநாதர் உயிர்த்தெழுந்ததின் பின் அவர்கள் மன உறுதி அடைந்து புது மனிதராகித் தங்களது மேய்ப்பனிடத்தில் வந்து சேர்ந்தார்கள். நாமும் அடிக்கடி பாவங்கட்டிக் கொண்டு பசாசுக்கு அடிமையாகி சேசுக் கிறிஸ்துநாதரை மறுதலித்து விட்டு நமது திருத்தாயாருக்கு மிகுந்த கஸ்தி வருவித்தோம். எப்பொழுதும் மிகுந்த அன்போடும் ஆண்டவரை நேசித்துவரும் பரம நாயகிக்கு சந்தோஷம் வருவிப்போமாக. பரிசுத்த கன்னிகையே, எங்களுடைய பலவீனத்தால் ஒன்றும் கூடாமையால் எங்களைக் கைதூக்கி நாங்கள் பாவத்தில் ஒருக்காலும் வீழாதபடிக்குக் கிருபை செய்தருளும்.
அர்ச். பெர்நந்து தேவமாதாவை நோக்கி வேண்டிக்கொண்ட செபம்.
மிகவும் இரக்கமுள்ள தாயே! உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்தழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.
ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சியசிஷ்ட மரியாயே! பாவிகளுக்கடைக்கலமே! இதோ உமது அடைக்கலமாக ஒடி வந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.
இப்படி மூன்றுமுறை சொல்லவும் -1,பர. 3,அருள். திரி.
செபம்
எவ்வித சுகிர்த பாக்கியத்தாலும் நிறைந்த தாயாரே! உமது திருமைந்தன் உமக்குக் காணப்படும்பொழுது அந்த மகிமையான இராஜாவைத் தொடர்ந்து பிதா பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் ஆதித்தகப்பன், ஆதித்தாய் முதற்கொண்டு நாலாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்த புண்ணிய ஆத்துமாக்கள் எல்லாரும் உம்மைத் தங்கள் இராக்கினியாகவும், நல்ல உபகாரியாகவும் வாழ்த்திக் கொண்டிருந்தார்கள். நீர் அவர்களுக்குள்ளே ஆண்டவளாய் நின்று அவர்களைப் பார்க்க அதிக சந்தோஷமும் பாக்கியமும் அனுபவித்தீரே. நீசப் பாவியாகிய நானும் அவர்களோடு உம்மை மோட்ச இராக்கினியாக வாழ்த்தி, உமது திருமைந்தன் உயிர்த்ததினால் சந்தோஷப்படுகிறேன். நான் மீட்புப் பெறும் வரையிலும் என்னைக் கைவிடாதேயும் என்று பிரார்த்திக்கிறேன்.

Comments are closed.