மே 22 : நற்செய்தி வாசகம்

உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 20-23a
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார். இப்போது நீங்களும் துயருறுகிறீர்கள். ஆனால் நான் உங்களை மீண்டும் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும். உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது. அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————
யோவான் 16: 20-23a
“உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது”
நிகழ்வு
காட்டில் இருந்த மான் ஒன்று தன்னுடைய குட்டியுடன் மலை உச்சியில் மேய்ந்துகொண்டிருந்தது. தற்செயலாக அது தனக்கு இடப்பக்கம் பார்த்துபொழுது, சிங்கம் ஒன்று அதன்மீதும் அதன் குட்டியின்மீது பாய்ந்து தாக்குவதற்குத் தயாராக இருந்தது. உடனே அது தனக்கு வலப்பக்கம் பார்த்தது; அங்கோ வேடன் ஒருவன் அதன்மீது அம்பை எய்வதற்குக் குறிபார்த்துக் கொண்டிருந்தான். சிறிதும் பதற்றமடையாமல் மான் தனக்கு முன்பக்கம் பார்த்தது, அங்கு ஒரு பெரிய நீர்வீழ்ச்சி இருந்தது; பின்பக்கம் அது பார்த்தபொழுது காட்டுத் தீ எரிந்துகொண்டிருந்தது.
இப்படி நான்கு பக்கங்களும் ஆபத்துகள் சூழ்ந்திருப்பதை அறிந்த மான் சிறிதும் பதற்றமடையாமல், வழக்கம்போல் தன் குட்டியோடு புல்லை மேய்ந்துகொண்டிருந்தது. அதற்கு நன்றாகவே தெரிந்திருந்தது, தான் பதற்றமடைந்தால், தன்னோடு இருக்கும் குட்டியும் பதற்றமடையும்; பிறகு நிலைமை மோசமாகிவிடும் என்பதால், ‘எப்படியும் சாகத்தான் போகிறோம், அதனால் நிம்மதியாகச் சாவோம்’ என்று பதற்றமின்றி புல்லை மேய்ந்தது.
அந்த நேரத்தில் வானத்தில் மேகம் கூடிவர, திடீரென இடி இடித்து மின்னல் வெட்டி, மழை பெய்யத் தொடங்கியது. இதனால் மானைக் குறிபார்த்து அம்புவிடக் காத்துக் கொண்டிருந்த வேடன் பதற்றத்தில் அம்பைத் தவறவிட்டான். அதுவோ அவனுடைய கையிலிருந்து பாய்ந்து சென்று, எதிரே இருந்த சிங்கத்தின்மீது பாய்ந்தது. இதனால் சிங்கம் சரிந்து கீழே விழுந்தது. இன்னொரு பக்கம் திடீரென்று பெய்த மழையால் காட்டுத் தீ அணைந்துபோனது. இதனால் எந்தவோர் ஆபத்தும் இல்லாமல், மான் தன்னுடைய குட்டியுடன் அங்கிருந்து பாதுகாப்பான ஓர் இடத்திற்குச் சென்றது.
இந்தக் கதையில் வரும் மானுக்கு நான்கு பக்கங்களிலிருந்தும் ஆபத்துகள் இருந்தன. அப்படியிருந்தபொழுதும், அது பதற்றமடையாமல் வழக்கம் போல் இருந்தது. இதனால் சூழ்நிலை அதற்கு ஏதுவாகி, அது எல்லா ஆபத்துகளிலிருந்தும் தப்பித்தது. ஆம், நம்மைச் சுற்றிலும் இதுபோன்ற ஆபத்துகள் வரலாம். நம்மிடமிருந்து மகிழ்ச்சியைப் பறித்துக் கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் வரலாம். ஆனாலும், நாம் அவற்றிற்கு இடங்கொடாமல் மன உறுதியோடு இருந்தால், யாராலும் நம்முடைய மகிழ்ச்சியை நம்மிடமிருந்து பறித்துக் கொள்ளவோ, நீக்கிவிடவோ முடியாது.
நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம், உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கடவுளிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வேண்டும்
இயேசு தன்னுடைய சீடர்களிடம் தொடர்ந்து பேசுகின்றபொழுது, “உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது” என்கின்றார். நம்முடைய மகிழ்ச்சியை நம்மிடமிருந்து யாரும் நீக்கிவிடாமல் இருக்க, நாம் இரண்டு முதன்மையான செயல்களைச் செய்யவேண்டும். ஒன்று, கடவுளிடம் அல்லது இயேசுவிடம் நம்பிக்கை கொள்வது. இரண்டு, மன உறுதியோடு இருப்பது.
யோவான் நற்செய்தி 14:1 இல் இயேசு இவ்வாறு கூறுவார்:” நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளின் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்.”. ஆம். கடவுளிடம் நம்பிக்கை கொண்டு வாழ்கின்றபொழுது, கற்பாறையாகவும் கோட்டையாகவும் இருந்து (திபா 18: 2), அவர் நம்முடைய மகிழ்ச்சியை யாரும் நீக்கிவிட முடியாதசெய்து பார்த்துக் கொள்வார்.
மன உறுதியோடு இருக்கவேண்டும்
நம்முடைய மகிழ்ச்சியை நம்மிடமிருந்து யாரும் நீக்கிவிடாதவாறு இருக்க நாம் செய்யவேண்டிய இரண்டாவது செயல் நம்மீது நம்பிக்கை வைத்து, மனமனவுறுதியோடு இருக்கவேண்டும்.
இன்றைய சூழலில் நம்மிடம் உள்ள மகிழ்ச்சியை நீக்கிவிட அல்லது பறித்துக்கொள்வதற்கு நம்மைச் சுற்றிலும் உள்ள மனிதர்கள், இயற்கைப் பேரிடர்கள், எதிர்பாராமல் வரும் கொள்ளை நோய்கள் ஆகியவை எல்லாம் நம்மிடமுள்ள மகிழ்ச்சியைப் பறித்துக் கொள்வதற்கான காரணிகளாக இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழநிலையில் நாம் மன உறுதியோடு இருக்கவேண்டும் (மத் 24: 13) மேலே சொல்லப்பட்ட கதையில் வரும் மானுக்குச் சுற்றிலும் ஆபத்துகள் இருந்தன; ஆனாலும், அது பதற்றமடையாமல், மன உறுதியோடு இருந்தது. அதனால் யாரும் எதிர்பாராத விதமாக அதுவும் அதனுடைய குட்டியும் காப்பாற்றப்பட்டன. நாமும் பிரச்சனைகளுக்கு நடுவில் மனவுறுதியோடு இருந்தால், நம்முடைய மகிழ்ச்சியை யாரும் நம்மிடமிருந்து பறித்துக் கொள்ளமுடியாது என்பது உறுதி.
ஆகையால், நாம் இறைவன்மீது நம்பிக்கை வைத்து, மன உறுதியோடு வாழக் கற்றுக்கொள்வோம். அதனால் நம்முடைய வாழ்க்கை எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கும்.
சிந்தனை
‘நம்பிக்கை கொண்டான் பதற்ற மடையான்’ (எசா 28: 16) என்கிறது இறைவார்த்தை. ஆகையால், நாம் இறைவன்மீது நம்பிக்கை வைத்து, மன உறுதியோடு வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறைவன் தருகின்ற மகிழ்வையும் இறையருளையும் நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.