மறைபரப்புப்பணி, விளம்பர முயற்சி அல்ல – திருத்தந்தை பிரான்சிஸ்
மறைபரப்புப்பணியானது, தூய ஆவியார் இலவசமாக வழங்கும் கொடை என்றும், எனவே, இப்பணியில் ஈடுபடுவோர், தங்கள் பணியையோ, தங்களையோ விளம்பரப்படுத்துவது கூடாது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று வெளியிட்ட ஒரு செய்தியில் கூறியுள்ளார்.
விண்ணேற்றப் பெருவிழா, ஓர் உந்து சக்தியாக…
மே 21, வியாழன்று, ஆண்டவரின் விண்ணேற்றப்பெருவிழா வத்திக்கானில் சிறப்பிக்கப்படும் வேளையில், பாப்பிறை மறைபரப்புப்பணி சபைகளைச் சேர்ந்த உறுப்பினர்களை சந்திக்க திட்டமிட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போதையச் சூழலில் அத்திட்டம் நிறைவேற இயலாமல் இருப்பதால், தன் எண்ணங்களை ஒரு செய்தியின் வழியே அவர்களிடம் பகிர்ந்துள்ளார்.
இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா, கிறிஸ்தவ வாழ்வுக்கும், பணிகளுக்கும் உந்து சக்தியைத் தரும் ஒரு ஊற்றாக விளங்குகிறது என்பதை, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியின் மகிழ்வு, பாப்பிறை மறைபரப்புப்பணி சபைகளின் இன்றைய நிலை, தவிர்க்கவேண்டிய தவறுகள், பயணத்திற்குப் பரிந்துரைகள், என்ற பல்வேறு தலைப்புக்களில் தன் செய்தியை வழங்கியுள்ளார்.
நற்செய்தியின் மகிழ்வு
நற்செய்தியின் மகிழ்வு என்ற தலைப்பில் தான் வழங்கியிருந்த திருத்தூது அறிவுரை மடலின் ஒரு சில எண்ணங்களை இச்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இலவசமாக நாம் பெற்றுள்ள கொடைகளுக்கு நன்றியறிந்திருப்பது, பணிவு கொண்டிருப்பது, நற்செய்தி பறைசாற்றலை எளிமையாக்குவது என்ற கருத்துக்களை, இப்பகுதியில் வலியுறுத்தியுள்ளார்.
நற்செய்தியை பறைசாற்றும் பணியில், இறைமக்களின் ஒட்டுமொத்த உணர்வைப் பிரதிபலிப்பது முக்கியம் என்பதையும், வறியோர், மற்றும், சிறியோர் மீது அக்கறை கொண்டிருப்பது அவசியம் என்பதையும், திருத்தந்தை இப்பகுதியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய நிலை
பாப்பிறை மறைபரப்புப்பணி சபைகள், திருமுழுக்கு பெற்ற விசுவாசிகளின் ஆர்வத்திலிருந்து பிறந்த ஓர் எதார்த்தம் என்பதை தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு கலாச்சாரங்களையும் வெளிப்படுத்தும் ஓர் உலகளாவிய அமைப்பாக இன்று இச்சபைகள் வளர்ந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
தவிர்க்கவேண்டிய தவறுகள்
மக்களின் ஆர்வத்தால் உருப்பெற்ற பாப்பிறை மறைபரப்புபணி சபைகள் என்ற அமைப்பு, தவிர்க்கவேண்டிய தவறுகள் என்ற பகுதியில், மக்களிடமிருந்து விலகி வாழ்வது, உயர்குடியினரின் மனநிலை கொண்டிருப்பது, தன் அமைப்பைப்பற்றிய சிந்தனைகளில் மூழ்கிப்போவது ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் இறைமக்களுடன் தன்னையே இணைத்துக்கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்வது, இவ்வமைப்பு பெற்றுள்ள வரங்களுக்கு நன்றியறிந்திருப்பது, உலகில் நிலவும் பல்வேறு எதார்த்தங்களுடன் தொடர்பு கொள்வது ஆகியவை இவ்வமைப்பினர் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செய்தியில் இறுதியில் தன் பரிந்துரைகளாக வழங்கியுள்ளார்.
Comments are closed.