தேவமாதாவின் வணக்கமாதம் மே 09

கர்த்தர் மனித அவதாரம் எடுத்த பரம இரகசியத்தில் புனித கன்னிமரியாயின் மகிமையை விளக்குகிறது
1. இந்தப் பரம இரகசியத்தில், பரிசுத்த கன்னி மாமரி உலகத்துக்கெல்லாம் இராக்கினியாக நியமிக்கப்பட்டார்கள்.
சுதனாகிய சர்வேசுரன் கன்னிமரியாயின் உதரத்தில் மனித உருவை எடுத்து அன்னைக்கு மெய்யான மைந்தனானார். அன்னையுடைய மைந்தன் அரசர்க்கெல்லாம் அரசருமாய் சகலருக்கும் ஆண்டவருமாய் அளவில்லாத மகிமைப் பிரதாபம் உடையவருமாய் இருந்தாலும், அவர் மற்றப் பிள்ளைகளைப் போல் தமது தாயாராகிய கன்னிமாமரியாயிக்குக் கீழ்ப்படிந்ததினால் அந்தப் பரிசுத்த கன்னிகை ஆண்டவருக்கு ஆண்டவளுமாய் எல்லோருக்கும் இராக்கினியுமாய் எண்ணரிய மகிமை பெற்றவராக இருக்கிறார்கள் என்று சொல்ல அவசியமில்லை. ஆகையால் அதிசயத்துக்குரிய தேவமாதா உயர்ந்த அரியணையில் இருக்கிறதையும் சம்மனசுகள் மாத்திரமல்ல, மோட்ச அரசராகிய சேசுநாதர் முதலாய் அவர்கள் விருப்பத்திற்கு இசைந்து நடப்பதைக் குறித்து மகிழ்ச்சியுற்று அன்னைக்கு கீழ்ப்படிந்த குமாரனை ஆராதித்துத் தேவமாதாவுக்குக் கொடுக்கப்பட்ட மகிமையைப்பற்றித் தோத்திரம் சொல்லுவோமாக.
2. சகல வரப்பிரசாதங்களினாலும் அலங்கரிக்கப்பட்ட பரம இரகசியம்.
கன்னிமாமரியாள் தமது திரு உதரத்தில் சுதனாகிய, சர்வேசுரனைக் கர்ப்பந்தரித்த வேளையில் உலக செல்வங்களை அடையாமல், சகல ஞான செல்வங்களையும் சம்பூரணமாய் பெற்றுக் கொண்டார்கள் என்பதற்கு சந்தேகமில்லை. இதில் அறிய வேண்டியதாவது இந்தப் பரிசுத்த கன்னிகையானவர்கள் சர்வேசுரனுடைய தாயாவதற்கு முன்னே சகல வரப்பிரசாதங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தாலும், ஞான செல்வமாகிய இந்த வரப்பிரசாதங்கள் அன்னைக்கு சொந்தப் பொருள் என்று எண்ணாமல் சர்வேசுரனுக்குச் சொந்த நன்மை என்று சொல்ல வேண்டியிருந்தது. அன்னை தேவதாயார் ஆன பின்னர் சகல ஞான செல்வங்களையும் உடையவருமாய் சர்வ வரப்பிரசாதங்களுக்குக் காரணமுமாய் இருக்கிற சுதனாகிய சர்வேசுரன் அன்னையின் மைந்தனாதலால் அவர் கொண்டிருக்கிற ஞான நன்மைகளையெல்லாம் பங்கிடும் மத்தியஸ்தியாக விளங்குகின்றார்கள் அன்னை. அப்படி இருக்க, கன்னிமாமரியாள் மோட்ச நன்மைகளை நமக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்கள் என்பது பற்றி நம்பிக்கையோடு நமக்குத் தேவையான வரப்பிரசாதங்களை மிகுந்த தாழ்ச்சியுடன் அன்னையிடம் கேட்போமாக.
3. சர்வேசுரனுடைய தாயாக உயர்த்தப்பட்ட பரம இரகசியம்.
சுதனாகிய சர்வேசுரன் மனித அவதாரம் எடுத்து உற்பவித்த நேரத்தில் கன்னிமாமரியாள் மற்ற மனிதர்களைப்போல் ஆண்டவருக்கு அடிமையாய் இருந்தாலும் தமது தேவதாய் தத்துவத்தில் தன்னைச் சுதந்திரத்தினால் சகல மோட்சவளால் வணங்கப்படவுள்ளார். அப்படிப்பட்ட தன்மை எவ்வளவு மேன்மையாய் இருக்கிறதென்று சொல்ல வேண்டுமானால் சர்வேசுரன் அன்றி வேறொருவராலும் சொல்ல முடியாது. சம்மனசுகள் முதலாய் அன்னையைக் குறித்து சதாகாலமும் பிரசங்கம் செய்து அன்னையுடைய உன்னத தன்மையை சொல்லிக் காட்டுவதற்கு துடிதுடித்தாலும் தகுந்த விதமாய் அன்னையைக் கொண்டாடவும் புகழவும் சக்தியற்றவர்களாய் இருப்பார்கள். இப்பேர்ப்பட்ட மகிமையும் வல்லபமுள்ள பரம தேவதாயை நாமும் நம்மால் கூடினமட்டும் ஸ்துதிப்போமானால் அன்னை நமக்குத் தேவையான உதவிகளைக் கொடுக்கத் தவறமாட்டார்களென நம்பிக்கையாய் இருக்கக்கடவோம்.
செபம்
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே! சகல வரப்பிரசாதங்களுக்கும் காரணமாயிருக்கிற சேசுநாதரை நீர் பெற்றதினால் சகல ஞான செல்வங்களும் உடையவர்களாகி அவைகளை மனிதருக்குக் கொடுக்க உமக்கு வல்லபமும் மனதும் இருக்கிறதைப்பற்றி நான் மகிழ்ச்சியுற்று ஆறுதலடைகிறேன். ஆகையினால் என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் உமக்கு ஒப்புக்கொடுத்து தேவரீர் என் எளிமைத்தனத்தைப் பார்த்து இரங்கி என் ஜீவிய காலத்திலும் மரண வேளையிலும் எனக்கு வேண்டிய அனுக்கிரகங்களைக் கொடுக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன்.
அர்ச். பெர்நந்து தேவமாதாவை நோக்கி வேண்டிக்கொண்ட செபம்.
மிகவும் இரக்கமுள்ள தாயே! உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்தழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.
ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சியசிஷ்ட மரியாயே! பாவிகளுக்கடைக்கலமே! இதோ உமது அடைக்கலமாக ஒடி வந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.
இப்படி மூன்றுமுறை சொல்லவும் -1,பர. 3,அருள். திரி.
இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :
சேசுக்கிறிஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாய் இருக்கத்தக்கதாக. தேவதாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
எட்டாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :
முடிந்தால் ஓர் எளியவருக்கு துணி கொடுக்கிறது. முடியாவிட்டால் ஆறுதலாவது சொல்லுகிறது.
பரிசுத்த தமத்திருத்துவத்திற்கு மகிமை உண்டாவதாக !!! பரிசுத்த திருக்குடும்பமே துணை

Comments are closed.