செபம் என்பது விசுவாசத்தின் உயிர் மூச்சு
இயேசு மலை மீது நின்று வழங்கிய எட்டு பேறுகள் குறித்து கடந்த சில வாரங்களாக தன் புதன் மறைக்கல்வித்தொடரை வழங்கி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 06, இப்புதனன்று, ‘செபம்’ குறித்த ஒரு புதிய தொடரைத் துவக்கினார். செபத்தின் வல்லமை பற்றி விளக்குவதற்கு, முதலில், எரிகோவை விட்டு வெளியில் செல்லும்போது, பர்த்திமேயு என்ற பார்வையற்ற இரந்துண்பவருக்கும், இயேசுவுக்கும் இடையே இடம்பெற்ற நிகழ்வு குறித்த, மாற்கு நற்செய்தி பகுதி வாசிக்கப்பட்டது. பின், திருத்தந்தையின் மறைக்கல்வியுரை தொடர்ந்தது.
இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, “இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கத்தத் தொடங்கினார். பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால், அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார். இயேசு நின்று, “அவரைக் கூப்பிடுங்கள்” என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, “துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்” என்றார்கள். அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார். இயேசு அவரைப் பார்த்து, “உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், “ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்” என்றார். இயேசு அவரிடம், “நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார். (மாற்கு 10,46-52)
அன்பு சகோதரர்களே, சகோதரிகளே,
இன்று நாம் ‘செபம்’ குறித்த ஒரு புதிய மறைக்கல்வித்தொடரைத் துவக்குகின்றோம். செபம் என்பது நம்பிக்கையின் உயிர் மூச்சாகும். அது இறைவனில் நம்பிக்கைக் கொண்டோரின் இதயங்களிலிருந்து, இறைவனை நோக்கி எழும் அழுகுரலாகும் . எரிகோவில் இரந்துண்டு வாழ்ந்த பர்த்திமேயு குறித்த நற்செய்தி நிகழ்வில் இதை நாம் காண்கிறோம். தான் பார்வையற்றவராக இருந்தாலும், தான் அமர்ந்திருக்கும் பாதையில் இயேசு நடந்து வருவதை உணர்ந்தவராக, “இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்”(மாற்கு 10:47), என்று தொடர்ந்து கத்திக்கொண்டிருந்தார், பர்த்திமேயு. ‘தாவீதின் மகனே’, என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியதன் வழியாக, பர்த்திமேயு, மெசியாவாகிய இயேசுவின் மீது, தான் கொண்டிருந்த நம்பிக்கையை அறிக்கையிடுகிறார். பர்த்திமேயுவின் அழைப்புக்குச் செவிமடுத்த இயேசு, அவரை அழைத்துவரச் செய்து, அவரைப் பார்த்து, “உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்கிறார். ‘நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்’ என பர்த்திமேயு இயேசுவைப் பார்த்துக் கேட்க, இயேசு அவரிடம், “நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” (மாற்கு 10, 52), என உரைக்கிறார். நாம் மீட்படைவதற்காக எழுப்பப்படும் நம்பிக்கையின் அழுகுரல், இறைவனின் இரக்கத்தையும், வல்லமையையும் நம்மை நோக்கித் திருப்புகிறது என்பதை இந்த எரிகோ நிகழ்வு நமக்கு சுட்டிக்காட்டுகிறது. கிறிஸ்தவர்கள் மட்டுமே செபிப்பதில்லை, மாறாக, இவ்வுலகப் பயணத்தின் அர்த்தம் குறித்து தேடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் செபித்துக்கொண்டுதானிருக்கிறார்கள். பர்த்திமேயுவைப்போல் நாமும் நம் விசுவாசப் பயணத்தைத் தொடரும்வேளையில், செபத்தில் நிலைத்திருப்போம். குறிப்பாக, நம் வாழ்வின் இருள்சூழ்ந்த வேளைகளில், இறைவனை நோக்கி நம்பிக்கையுடன் ‘இயேசுவே, எனக்கு இரங்கும், இயேசுவே, எம்மீது இரங்கியருளும்’ என்று வேண்டுவோம்.
Comments are closed.