மே 9 : நற்செய்தி வாசகம்

என்னைக் காண்பது, தந்தையைக் காண்பது ஆகும்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 7-14
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கி: “நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்” என்றார்.
அப்போது பிலிப்பு அவரிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார். இயேசு அவரிடம் கூறியது: “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ‘தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால், என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள்.
நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
யோவான் 14: 7-14
“நான் சொல்வதை நம்புங்கள்”
நிகழ்வு
துறவி ஒருவர் இருந்தார். இவரிடத்தில் சீடன் ஒருவன் இருந்தான். அவன் கொஞ்சம் முட்டாளாக இருந்தும், அவனைத் துறவி தன்னுடைய சீடனாக வைத்திருந்தார். அதற்கு முக்கியமான காரணம், அவன் மிகவும் நம்பிக்கைக்குரியவனாக இருந்தான். சீடனுக்குப் பக்கத்து ஊர்; அதனால் அவன் ஒவ்வொரு நாளும் வீட்டுக்குப் போய்விட்டுத் திரும்பி துறவி இருந்த ஆசிரமத்திற்கு வந்தான். இடையில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதை அவன் படகில் சவாரி செய்து கடந்து வந்தான்.
ஒருநாள் துறவி தன்னுடைய சீடனைக் குறித்துக் கேள்விப்பட்ட ஒரு செய்தியைப் பற்றி மிகவும் வியப்படைந்தார். அச்செய்தி வேறொன்றும் இல்லை; தன்னுடைய சீடன் ஆற்றின்மீது நடந்து வருகின்றான் என்பதுதான். உடனே துறவி, ‘இவன் சரியான முட்டளாயிற்றே! இவன் எப்படி ஆற்றின்மீது நடக்க முடியும்! ஒருவேளை இது வதந்தியாக இருக்கும்!’ என்று அதைத் தட்டிக் கழிக்கப் பார்த்தார்; ஆனால் இச்செய்தியைப் பற்றி பலரும் பேசிக்கொண்டதால், துறவி அந்தச் சீடனை அழைத்து, “நான் உன்னைப் பற்றிக் கேள்விப்படுவது உண்மையா?” என்றார். “ஆமாம்” என்று அமைந்த குரலில் சொன்னான் சீடன்.
“அது எப்படி உன்னால் ஆற்றில் நடந்து செல்ல முடிகின்றது?” என்று துறவி வியப்போடு கேட்க, சீடன் மிகவும் பொறுமையாகச் சொன்னான்: “குருவே! இது ஒன்றும் பெரிய செயலில்லை; நீங்கள் என்னிடத்தில் சொன்னது போன்று, நான் உங்களுடைய பெயரை நம்பிக்கையோடு உச்சரித்துக்கொண்டு ஆற்றில் நடந்து சென்றேன். என்னால் மிக எளிதாக ஆற்றில் நடக்க முடிந்தது.” தன்னுடைய சீடன் இவ்வாறு சொன்னதைக் கேட்டு, இன்னும் வியப்படைந்த துறவி, “என்ன! என்னுடைய பெயரை நம்பிக்கையோடு சொன்னால், ஆற்றை எளிதாகக் கடந்துவிட முடியுமா…? சரி வா நாம் இருவரும் ஆற்றுக்குப் போவோம்” என்று சொல்லிக்கொண்டு, சீடனைத் தன்னோடு அழைத்துக் கொண்டு ஆற்றுக்குப் போனார்.
ஆற்றை அடைந்ததும், சீடனை கரையில் நிறுத்திவிட்டு, துறவி தன்னுடைய பெயரை நம்பிக்கையோடு உச்சரித்துக்கொண்டே ஆற்றில் நடக்கத் தொடங்கினார். தொடக்கத்தில் சீராக நடக்கத் தொடங்கிய துறவிக்கு, ‘நாம் ஆற்றில் நடப்பது, கனவா? நனவா?’ என்று மெல்லிசாக ஐயம் வந்து. எப்பொழுது துறவிக்கு இப்படியோர் ஐயம் வந்ததோ, அப்பொழுதே ஆற்றுக்குள் மூழ்கத் தொடங்கினார். தன்னுடைய குரு ஆற்றில் விழுந்து மூழ்குவதைப் பார்த்த சீடன்தான், கரையிலிருந்து ஓடிச்சென்று, துறவியைக் காப்பாற்றிக் கரை சேர்த்தான்.
இந்தக் கதையில் வரும் சீடனுக்குத் துறவியின் பெயரில் நம்பிக்கை இருந்தது. அதனால் அவனால் எளிதாக ஆற்றில் நடக்க முடிந்தது; துறவிக்கோ அவருடைய பெயரில் அவருக்கே நம்பிக்கை இல்லை. அதனால் அவர் ஆற்றில் விழுந்து மூழ்கினார். நற்செய்தியில் இயேசு, என்மீது நம்பிக்கை கொள்பவர் நான் செய்யும் செயல்களையும்; ஏன் அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார் என்று கூறுகின்றார். இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளின் பொருளென்ன என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நாம் ஏன் இயேசு சொல்வதை நம்பவேண்டும்?
நற்செய்தியில் இயேசு, “நான் சொல்வதை நம்புங்கள்” என்கின்றார். இயேசு சொல்வதை நம்புவதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இயேசு கட்புலனாக கடவுளின் சாயல் (கொலோ 1: 15). ஆகையால், இயேசுவை அறிவது என்பது தந்தையை அறிவதாக இருக்கின்றது; இயேசுவைக் காண்பது தந்தையைக் காண்பதாக இருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் இயேசுவும் தந்தையும் ஒன்றாய் இருக்கின்றார்கள் (யோவா 10: 30). அப்படியிருக்கையில், இயேசுவை நம்புவது தந்தையை நம்புவதாக இருக்கின்றது.
இரண்டு, இயேசு சொல்வதை நம்புகின்றபொழுது, அவர் செய்யும் செயல்களையும் ஏன்; அவற்றையும்விட பெரியவற்றையும் நம்மால் செய்யவேண்டும். இதை இன்றைய நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு மிக அழகாக எடுத்துக் கூறுகின்றார். எனவே நாம் ஆண்டவர் இயேசு சொல்வதை நம்வுவோம். நம்புவதோடு மட்டுமல்லாமல் அதன்படி வாழ்வோம்.
என்ன நாம் இயேசு சொல்வதை நம்பத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனை
‘உங்களிடம் நம்பிக்கை இருந்தால் கொஞ்சமாவது எதையாவது செய்யலாம்; ஆனால், உங்களிடம் நம்பிக்கை இல்லையென்றால், அதைக்கூடச் செய்யமுடியாது’ என்பார் ஆங்கிலக் கவியான சாமுவேல் பட்லர் (1612-1680). ஆகையால், நாம் ஆண்டவர்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு, அவருக்கு உகந்த வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.