நினைவுகளை மறந்து வாழ்வது கிறிஸ்தவம் அல்ல

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியின் துவக்கத்தில், கலைஞர்களுக்காக வேண்டிக்கொள்வோம் என்ற விண்ணப்பத்தை முன்வைத்தார்.

அழகை புரிந்துகொள்ள உதவும் கலைஞர்கள்

மே 6ம் தேதி புதனன்று, செபத்தை மையப்படுத்தி தான் வழங்கிய மறைக்கல்வி உரையின் இறுதியில், கலைஞர்களைப் பற்றி குறிப்பிட்டதற்காக, ஒரு சில கலைஞர்கள் தனக்கு நன்றி கூறியிருந்தனர் என்பதை, இவ்வியாழன் திருப்பலியின் துவக்கத்தில் குறிப்பிட்ட திருத்தந்தை, அழகு என்ற எண்ணத்தை புரிந்துகொள்ளாமல் நற்செய்தியைப் புரிந்துகொள்ள முடியாது என்றும், அந்த அழகை நாம் புரிந்துகொள்ள உதவும் கலைஞர்களை இறைவன் ஆசீர்வதிக்க வேண்டிக்கொள்வோம் என்றும் குறிப்பிட்டார்.

செபத்தை மையப்படுத்திய மறைக்கல்வி பாடங்களின் வரிசையை இப்புதனன்று துவங்கிய திருத்தந்தை, தர்மம் கேட்டு வாழ்ந்த பர்த்திமேயுவின் வேதனையும், நம்பிக்கையும் நிறைந்த குரலைப் பற்றி விளக்கிக் கூறியபின், படைப்பு ஒவ்வொன்றுமே இறைவனை நோக்கி குரல் எழுப்புகின்றன என்றும், அவை எழுப்பும் மௌனமான குரல்களை, கலைஞர்கள் பல வழிகளில் பொருள்கொண்டு, அவற்றை தங்கள் படைப்பின் வழியே வெளிக்கொணர்கின்றனர் என்றும், தன் மறைக்கல்வி உரையின் இறுதியில் கூறியிருந்தார்.

திருத்தந்தை வெளிப்படுத்திய இந்த எண்ணத்திற்காக கலைஞர்கள் அவருக்கு நன்றி கூறியுள்ளதை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அழகைப் புரிந்துகொள்ள உதவும் அவர்களுக்காக வேண்டிக்கொள்வோம் என்ற விண்ணப்பத்துடன் தன் திருப்பலியைத் துவக்கினார்.

வரலாற்றின் ஓர் அங்கமாக விளங்கும் இயேசு

மேலும், இவ்வியாழனன்று வாசிக்கப்பட்ட முதல் வாசகத்தில் (தி.பணிகள் 13:13-25), திருத்தூதர் பவுல், இயேசுவை, ஒரு குறிப்பிட்ட மக்களினத்தின் வரலாற்றுடன் இணைத்துப் பேசியதை சுட்டிக்காட்டி, நாம் அனைவருமே வரலாற்று நினைவுகளை மறந்துவிடக்கூடாது என்பதை தன் மறையுரையின் மையக்கருத்தாகக் கூறினார்.

கிறிஸ்தவ மறை, இறையியல், மற்றும் நன்னெறியியல் ஆகியவற்றைக் கூறும் கொள்கைத் திரட்டு அல்ல, மாறாக, அது, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்களினத்தின் வரலாறு என்றும், ஒவ்வொரு கிறிஸ்தவரும் இந்த மக்களினத்தின் உறுப்பினர் என்றும் வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை

Comments are closed.