மே 8 – செபமாலை அன்னை மரியாவிடம் சிறப்பு மன்றாட்டு

நண்பகல் வேளையில், பொம்பேய் (Pompeii) நகரில் உள்ள செபமாலை அன்னை மரியா திருத்தலத்தில் மேற்கொள்ளப்படும் சிறப்பு செபமாலை பக்தி முயற்சியைக் குறித்து, பொம்பேய் பேராயர் தொம்மாஸோ கபூத்தோ (Tommaso Caputo) அவர்கள், வத்திக்கான் செய்திக்கு பெட்டியொன்றை வழங்கியுள்ளார்.
கோவிட் 19 தொற்றுக்கிருமியிலிருந்து பாதுகாப்பு
ஒவ்வோர் ஆண்டும் மே 8ம் தேதியன்று செபமாலை அன்னை மரியாவிடம் எழுப்பப்படும் சிறப்பு மன்றாட்டு, இவ்வாண்டு, உலகெங்கும் பரவியுள்ள கோவிட் 19 தொற்றுக்கிருமியால் துன்புறும் மனித குலத்தை, அன்னை மரியாவிடம் ஒப்படைத்து மன்றாடப்படும் என்று பேராயர் கபூத்தோ அவர்கள் கூறினார்.
1883ம் ஆண்டு, பொதுநிலையினரான அருளாளர் பார்தோலோ லொங்கோ (Bartolo Longo) அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு செபம், மே மாதம் 8ம் தேதியன்றும், அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிறன்றும் பொம்பேய் திருத்தலத்தில் மேற்கொள்ளப்படும் சக்தி வாய்ந்த ஒரு மன்றாட்டாக எழுந்து வந்துள்ளது என்பதை, பேராயர் கபூத்தோ அவர்கள் சுட்டிக்காட்டினார்.
மரியன்னை மீதும், செபமாலை பக்தி மீதும் ஆழ்ந்த பற்று கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மே மாதம் முழுவதும் செபமாலை சொல்வதற்கு அழைப்பு விடுத்திருப்பது, மக்களுக்கு பெரும் ஆறுதலாகவும், தூண்டுதலாகவும் அமைந்துள்ளது என்று பேராயர் கபூத்தோ அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.
வலைத்தளங்களில் ‘தொடர் செபமாலை’ முயற்சி
கடந்த சில மாதங்களாக, முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியே, ‘தொடர் செபமாலை’ என்ற ஒரு முயற்சி நடைபெற்று வருவதைக் குறித்து தன் பேட்டியில் குறிப்பிட்ட பேராயர் கபூத்தோ அவர்கள், ஒவ்வொரு நாளும் காலை 7 மணி முதல், இரவு 10 மணி வரை, நடைபெறும் இந்த தொடர் செபமாலையில் ஒவ்வொருவரும் அவரவர் இல்லங்களில் இருந்தவண்ணம், அவர்களுக்கு வசதியான நேரத்தில் செபமாலை சொல்லி, அதனை அடுத்தவருக்கு அனுப்பி, அடுத்தவர், இந்த முயற்சியைத் தொடர வழிவகுத்து வருவது அழகான செயல்பாடு என்று கூறினார்.
“மரியாவுக்கு காலை வணக்கம்”
மே 8ம் தேதி வெள்ளியன்று, பொம்பேய் செபமாலை அன்னை மரியாவின் திருத்தலத்தில், காலை 6.30 மணிக்கு, “மரியாவுக்கு காலை வணக்கம்” என்ற பக்தி முயற்சியுடன் துவங்கும் செபங்கள், அன்றைய நாள் முழுவதும் தொடரும் என்றும், இவ்வாண்டு, மக்கள் இணைந்து வர இயலாத சூழல் இருப்பதால், வலைத்தளங்கள், தொலைக்காட்சிகள் வழியே, மக்கள் இந்த முயற்சியில் கலந்துகொள்ளலாம் என்றும் பேராயர் கபூத்தோ அவர்கள் தன் பேட்டியில் கூறினார்

Comments are closed.