வெள்ளிக்கிழமை. நற்செய்தி வாசகம்

எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 52-59
அக்காலத்தில்
“நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?” என்ற வாக்குவாதம் யூதர்களிடையே எழுந்தது.
இயேசு அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.” இயேசு கப்பர்நாகுமில் உள்ள தொழுகைக்கூடத்தில் இவ்வாறு கற்பித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை.
“மானிட மகனின் சதையை உண்டு, இரத்தத்தைக் குடிப்போருக்கு நிலைவாழ்வு”
இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர் பேராயர் ஜான் கார்மல் ஹீனன் (1905- 1965). இவர் வெஸ்ட்மின்ஸ்டரில் பேராயராக இருந்தபொழுது, ஒரு மாலைத் திருப்பலியில் நற்கருணையைப் பற்றி மிக உருக்கமாக மறையுரை ஆற்றினார். இவருடைய மறையுரைக் கேட்டு கோயிலில் இருந்த எல்லாரும் வியந்து போனார்கள்.
திருப்பலி முடிந்த பிறகு எல்லாரும் கோயிலிருந்து கலைந்துசென்றார்கள்; பேராயர் மட்டும் கோயிலில் தனியாக இருந்தார். அன்றைக்குக் கத்தோலிக்கர் அல்லாத, பிற சபையைச் சார்ந்த பெண்மணி ஒருவர் அக்கோயிலுக்கு வந்திருந்தார். அவர், பேராயர் நற்கருணையைப் பற்றி மறையுரை ஆற்றியதைக் கேட்டிருந்தார். அவருக்கு, பேராயர் பெயருக்காக நற்கருணை பற்றி அவ்வளவு வல்லமையோடு பேசினாரா அல்லது நம்பிக்கையோடுதான் அவ்வளவு வல்லமையோடு பேசினாரா என்பதைத் தெரிந்து கொள்வதற்கு ஆர்வமாக இருந்தது. அதனால் அவர் கோயிலில் இருந்த ஒரு பெரிய தூணுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, பேராயர் என்ன செய்கின்றார் என்று உன்னிப்பாகக் கவனித்தார் .
பேராயரோ நற்கருணை ஆண்டவரைத் தலைதாழ்த்தி வணங்கி ஆராதித்துவிட்டு, அவருக்கு முன்பாக முழந்தாள் படியிட்டு சிறிதுநேரம் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் கண்களை மூடி உருக்கமாக வேண்டிவிட்டுக் கோயிலை விட்டு வெளியே வந்தார். பேராயர் வெளியே வருவதைப் பார்த்துவிட்டு, அந்தப் பிறசபையைச் சார்ந்த பெண்மணியும் வெளியே வந்தார். அதற்குள் பேராயர் அந்தப் பெண்மணியைப் பார்த்துவிட்டு, அந்தப் பெண்மணியை அழைத்து, “நீங்கள யார், எங்கிருந்து வருகின்றீர்கள்?” என்று விசாரித்தார். அந்தப் பெண்மணியோ, எல்லாவற்றையும் பேராயரிடம் எடுத்துச் சொல்லிவிட்டு, இறுதியாக, “ஆயர்ப் பெருந்தகையே! நற்கருணையைப் பற்றி நீங்கள் ஆற்றிய மறையுரையையும் நற்கருணை ஆண்டவரிடம் நீங்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையையும் பார்த்துவிட்டு அப்படியே மெய்ம்மறந்து போனான். இதனால் எனக்குள், ‘நானும் கத்தோலிக்கத் திருஅவையில் சேர்ந்து, ஓர் உண்மையான கத்தோலிக்கக் கிறிஸ்தவராக வாழவேண்டும்’ என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கின்றது” என்றார். உடனே பேராயர் அவருக்குத் திருமுழுக்குக் கொடுத்து, அவரைக் கத்தோலிக்கத் திருஅவையில் சேர்த்தார்.
இந்த நிகழ்வில் வருகின்ற பேராயர் ஹீனன், பெயருக்கு நற்கருணை ஆண்டவரைப் பற்றிப் பேசவில்லை. மாறாக, அவர்மீது நற்கருணை ஆண்டவர்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த நம்பிக்கையைத் தன்னுடைய வாழ்க்கையில் வாழ்ந்துகாட்டினார். அதனால்தான் அவரால் நற்கருணையின்மீது நம்பிக்கையில்லாத பிற சபையைச் சார்ந்த ஒரு பெண்மணியைக் கத்தோலிக்கத் திருஅவையில் சேர்க்க முடிந்தது. ஆம், ‘என் சதையை உண்டு, என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார்’ என்று ஆண்டவர் இயேசு சொன்னது, நற்கருணையை உண்டு, முன்பு வாழ்ந்த அதே வாழ்க்கையை வாழ்வதல்ல; நற்கருணை ஆண்டவர் உணர்த்தும் விழுமியங்களின்படி வாழ்வது. இத்தகைய உண்மைகளை எடுத்துச் சொல்லும் இன்றைய நற்செய்தி வாசகத்தைக் குறித்துச் சிந்திப்போம்.
சதையை உண்டு இரத்தத்தைக் குடிப்பது என்றால் என்ன?
நற்செய்தியில் இயேசு, கப்பர்நாகுமில் இருந்த தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களிடம், “என் சதையை உண்டு, என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்” என்கின்றார். இயேசு இங்கு என்ன சொல்கின்றார் என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் இன்றியமையாதது.
இயேசுவின் சதையை உண்டு, அவருடைய இரத்தத்தைக் குடிப்பது என்பதில், இரண்டு உண்மைகள் இருக்கின்றன. ஒன்று, இயேசு நமக்காகப் பாடுபட்டு, இறந்து உயிர்த்தெழுந்தார் என்பதை நம்புவது. இரண்டு, இதனை நம்புவதோடு மட்டுமல்லாமல், நம்முடைய வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுவது. வேறுவிதமாகச் சொல்வதென்றால், இயேசுவை உள்வாங்கி மறுகிறிஸ்துவாக வாழ்வது. இதைத்தான் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுகின்றார்.
சதையை உண்டு, இரத்தத்தைக் குடிப்போர் பெறும் பேறுபலன்கள்
இயேசுவின் சதையை உண்டு, அவருடைய இரத்தத்தைக் குடிக்கின்றபொழுது அல்லது மறு கிறிஸ்துவாக வாழ்கின்றபொழுது, என்ன நடக்கும் என்பதை இயேசு தொடர்ந்து பேசுகின்றார். ஆம், நாம் இயேசுவின் சதையை உண்டு, அவருடைய இரத்தத்தைக் குடித்து, மறு கிறிஸ்துவாக வாழ்கின்றபோது மூன்று நன்மைகளைப் பெறுகின்றோம். ஒன்று, இயேசு நம்மை உயிர்த்தெழச் செய்வார். இரண்டு, இயேசுவோடு நாம் ஒன்றித்திருப்போம். மூன்று, இயேசுவால் நாம் வாழ்வோம்.
ஆகையால், இத்தகைய நன்மைகளை நாம் பெறுவதற்கு இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கைக்கேற்ப வாழ முயற்படுவோம்.
சிந்தனை.
‘ஆண்டவரிடம் கொள்ளும் நம்பிக்கையே, ஆன்மாவிற்கு வைட்டமினாக இருக்கின்றது. அந்த வைட்டமின் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது’ என்பார் மகால்லா ஜாக்சன் என்பவர். ஆகையால், நாம் இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கைக்கு ஏற்ப வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.