நற்செய்தி வாசக மறையுரை (மே 02)

பாஸ்கா காலம் மூன்றாம் வாரம் சனிக்கிழமை
யோவான் 6: 60-69
நிலைவாழ்வளிக்கும் இயேசுவின் வார்த்தைகள்
நிகழ்வு
ஆப்பிரிக்கா மக்கள் நடுவில் மருத்துவப் பணியையும் இறைப்பணியையும் ஒரு சேரச் சேர்த்துச் செய்தவர் டேவிட் லிவிங்ஸ்டன் (1813-1873).
இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவரான இவர், 1852 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவிற்குச் சென்றபொழுது, தன்னோடு 180 பவுண்டுகள் எடைகொண்ட 73 நூல்களை எடுத்துச் சென்றார். காட்டுப் பகுதியில் அந்த 73 நூல்களையும் தூக்கிச்செல்வது மிகவும் சிரமமாக இருக்கின்றது என்பதை இவர் உணர்ந்தார். ஆதலால், இவர் அந்த 73 நூலில் தேவையில்லாத நூல்களை ஒன்றாக ஆங்காங்கே வீசி எறிந்துகொண்டே வந்தார். இவ்வாறு இவர் வீசி எறிந்துகொண்டு வந்ததில், இவரிடம் இருந்த 72 நூல்கள் இல்லாமல் போயின. ஒரே ஒரு நூல் மட்டும்தான் இவரிடத்தில் இருந்தது. அந்த நூல் வேறு எந்த நூலும் அல்ல; திருவிவிலியம்தான்.
ஆம், திருவிவிலியத்தைத்தான் டேவிட் லிவிங்க்ஸ்டன் என்றட மறைப்பணியாளர் தன்னோடு கடைசிக்குவரைக்கும் வைத்திருந்தார். அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது, இந்த உலகில் வேறு எந்த நூலும் தராத வாழ்வு தரும் வார்த்தைகளைத் திருவிவிலியம் தரும் என்று. நற்செய்தியில், சீமான் பேதுரு, இயேசுவிடம், “வாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன” என்கின்றார். பேதுரு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதையும், இப்படிப்பட்ட வார்த்தைகள் எப்படிப்பட்ட சூழலில் உதிர்க்கப்பட்டன என்பதையும் இப்பொழுது நாம் சிந்திப்போம்.
இயேசு சொன்னதை நம்ப மறுத்த சீடர் பலர்
இயேசு, கப்பர்நாகுமில் உள்ள தொழுகைக்கூடத்தில், என் சதையை உண்டு, என்னுடைய இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார் என்று பேசினார். இதைக் கேட்டுவிட்டு, அவருடைய சிடரில் பலர், “இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம்” என்கின்றார்கள். யோவான் இங்குக் குறிப்பிடும் ‘சீடர் பலர்’ இயேசுவைப் பின்தொடர்ந்து வந்த பலரைக் குறிப்பதாக இருக்கின்றது (யோவா 4:1). இவர்கள் இயேசுவைப் பல காரணங்களுக்காகப் பின்தொடர்ந்து வந்திருக்கலாம்.
‘இயேசு, இஸ்ரயேல் மக்களுக்கு உரோமையரிடமிருந்து அரசியல் விடுதலைப் பெற்றுத்தருவார்… நாம் அவருடைய அரசபையில் உறுப்பினராக இருக்கலாம்’ என்று எண்ணத்தோடும், ‘இயேசுவைப் பின்தொடர்ந்தால் பெயரும் புகழும் கிடைக்கும்’ என்ற எண்ணத்தோடும்… இப்படிப் பல்வேறு எண்ணங்களோடும் காரணங்களோடும் இயேசுவைப் பின்தொடர்ந்த ‘இந்தச் சீடர்கள்’ இயேசுவின் சீடராக இருப்பதற்குக் கொடுக்கவேண்டிய விலையை நிச்சயம் உணர்ந்திருக்கவும் மாட்டார்கள் (லூக் 14: 25-33); இயேசு, நிலைவாழ்வு அளிக்கும் உணவு பற்றிப் பேசியதையும் உணர்ந்திருக்கமாட்டார்கள். அதனால்தான் இவர்கள் இயேசுவுக்கு எதிராக முணுமுணுக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்களிடம் இயேசு, “….மானிட மகன் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்” என்கிறார்.
இயேசு இப்படிச் சொன்னபிறகு, அவருடைய சீடருள் பலர் அவரை விட்டு விலகிச் செல்கின்றார்கள். இதற்குப் பின்புதான் பேதுருவிடமிருந்து ‘அந்த முக்கியமான வார்த்தைகள்’ வருகின்றன. அது பற்றித் தொடர்ந்து சிந்திப்போம்.
இயேசு சொன்னதை நம்பிய பேதுரு
தன்னுடைய சீடர்களில் பலர் தன்னை விட்டு விலகிச் சென்றபிறகு, இயேசு பன்னிரு சீடரிடமும், “நீங்களும் போய்விட நினைக்கின்றீர்களா?” என்று கேட்கின்றார். இயேசு பன்னிரு சீடரிடமும் இவ்வாறு கேட்பது, இயேசு யாரையும் தன்னுடைய சீடராக இருக்கவேண்டும் என்று வலுக்கட்டாயமாக பிடித்து வைத்துக்கொண்டிருக்கவில்லை என்பதையும், ஒவ்வொருவருடைய சுதந்திரத்தையும் அவர் மதிக்கின்றார் என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.
இயேசு இவ்வாறு தன்னுடைய பன்னிரு சீடரிடம் கேட்டபிறகு, பேதுரு, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமாணவர்” என்கின்றார். இங்குப் பேதுரு சொல்லக்கூடிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அவ்வளவு ஆழமான பொருள் இருக்கின்றது. ஆம், பேதுரு இயேசுவை ஆண்டவர் என்றும் அவருக்கு இணை வேறு யாரும் இல்லை என்றும், நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் அவரிடம் உள்ளன என்றும், அவர் கடவுளுக்கு அப்பர்ணமானவர் என்றும் குறிப்பிடுவது, நமது கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. மேலும் இங்குப் பேதுரு சொல்லக்கூடிய வார்த்தைகள் ஒத்தமை நற்செய்தி நூல்களில் இடம்பெறும் வார்த்தைகளையும் ஒத்துப் போகின்றன (மத் 16: 16; மாற் 8:29; லூக் 9: 20).
ஆகையால், பேதுரு இயேசுவைப் பற்றிச் சொல்வது போன்று, இயேசுவிடம் நிலைவாழ்வு அளிக்கின்ற வார்த்தைகள் இருக்கின்றன. அதனால் நாம் இயேசுவின் வார்த்தைகளை வாசித்து, வாழ்வாக்குவோம். அதன்மூலம் அவர் தரும் நிலைவாழ்வைப் பெறுவோம்.
சிந்தனை
‘உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு மிகுதியான நலவாழ்வு உண்டு; அவர்களை நிலைகுலையச் செய்வது எதுவுமில்லை’ (திபா 119: 165) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நமக்கு நலவாழ்வையும் உறுதியையும் தரும் ஆண்டவரின் வார்த்தையை வாசித்து, அதன்படி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.