திருத்தந்தையின் மறையுரை – இறைவனில் மகிழ்வு கொள்ள

திருப்பலி வாசகங்களில் மகிழ்வு பல வழிகளில் கூறப்பட்டுள்ளது என்பதை தன் மறையுரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதுப் பணிகள், புனித பவுலின் மடல்கள், நெகேமியா நூல், மற்றும் புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் எழுதிய திருத்தூது அறிவுரை மடல் ஆகியவற்றிலிருந்து எடுத்துக்காட்டுகளை பகிர்ந்துகொண்டார்.

இயேசுவின் காயங்கள், ஒரு கருவூலம்

சீடர்கள் நடுவே தோன்றிய இயேசு, அவர்கள் அச்சத்தைப் போக்க பயன்படுத்திய வழி, தன் காயங்களைக் காட்டுதல் என்பதை, தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உடலில் பதிந்த காயங்களை, இயேசு விண்ணகத்திற்கு ஒரு கருவூலமாக எடுத்துச் சென்று தன் தந்தையிடமும் காட்டினார் என்று குறிப்பிட்டார்.

தங்கள் நடுவே தோன்றிய இயேசுவைக் கண்டு, சீடர்கள் “மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள்” (லூக்கா 24:41) என்று நற்செய்தியில் கூறப்பட்டுள்ள சொற்களை சுட்டிக்காட்டிப் பேசிய திருத்தந்தை, இந்தச் சொற்கள், இந்த நற்செய்திப் பகுதியை தனக்கு மிகவும் பிடித்த பகுதியாக மாற்றியுள்ளன என்று எடுத்துரைத்தார்.

மகிழ்வினால் உருவாகும் தாக்கங்கள்

மகிழ்வு நமக்குள் உருவாக்கும் பல தாக்கங்களைக் குறித்துப் பேசியத் திருத்தந்தை, புனித பவுல், “எதிர்நோக்கைத் தரும் கடவுள், நம்பிக்கையால் உண்டாகும் பெருமகிழ்ச்சியாலும், அமைதியாலும் உங்களை நிரப்புவாராக!” (உரோமையர் 15:13) என்று கூறியதையும், இதே மகிழ்ச்சியை, சிறையிலிருந்த பவுல், சிறைக்காவலரின் குடும்பத்திற்கு வழங்கினார் என்பதையும், பிலிப்பு, எத்தியோப்பிய அரச அலுவலருக்கு வழங்கினார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

எருசலேமுக்குத் திரும்பிவந்த இஸ்ரயேல் மக்கள், மோசேயின் திருநூலைக் கண்டு மகிழ்வில் நிறைந்ததைக் கூறும் நெகேமியா நூலின் ஒரு பகுதியைக் குறித்து நினைவுறுத்திய திருத்தந்தை, நெகேமியாவும், எஸ்ராவும், மக்கள் அனைவரையும் நோக்கி; “இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள்; எனவே நீங்கள் அழுதுபுலம்ப வேண்டாம். ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை” என்று கூறிய சொற்களை நினைவுறுத்தினார்.

மகிழ்வைப் பரப்பும் கிறிஸ்தவர்கள்

மகிழ்வான கிறிஸ்தவர்கள், மகிழ்வான நற்செய்தி அறிவிப்பாளர்களாக இருப்பர் என்பதை, திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் எழுதிய Evangelii nuntiandi என்ற திருத்தூது அறிவுரை மடலிலிருந்து சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியாரின் கொடையான இத்தகைய மகிழ்வு நம் வாழ்வை நிரப்புவதற்கு நாம் செபிப்போம் என்ற வேண்டுதலுடன் தன் மறையுரையை நிறைவு செய்தார்.

Comments are closed.